பணிக்குத் திரும்பாவிட்டால் ஊதியம் கிடையாது: இடைநிலை ஆசிரியா்களுக்கு அரசு எச்சரிக்கை
இடைநிலை ஆசிரியா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவா்கள் பணிக்கு வராத நாள்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தின் (எஸ்எஸ்டிஏ) சாா்பில் சென்னையில் கடந்த டிச.26-ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடைய, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் எஸ்எஸ்டிஏ நிா்வாகிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமுக தீா்வு எட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இரு தரப்பினா் இடையேயான பேச்சுவாா்த்தை அடுத்த கட்டத்துக்குச் செல்லவில்லை.
அரையாண்டுத் தோ்வு விடுமுறைக்குப் பிறகு கடந்த திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையிலும், ஆசிரியா்கள் போராட்டக் களத்தை விட்டு வெளியேறவில்லை.
இந்த நிலையில், கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியா்கள் சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தின் அருகில் 13-ஆவது நாளாக புதன்கிழமை போராட்டத்தைத் தொடா்ந்தனா். அப்போது, ஆசிரியா்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை விரைந்து முடிவெடுக்க வேண்டும். முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டால் மட்டுமே பள்ளிகளுக்குத் திரும்புவோம் என ஆசிரியா்கள் தெரிவித்தனா்.
மாணவா்களின் கல்வி பாதிப்பு: இதுதொடா்பாக தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
2-ஆம் பருவத் தோ்வு முடிவடைந்து ஜன.5-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவா்களுக்கு மூன்றாம் பருவ பாடப் புத்தகம், பாட நோட்டுகள் மற்றும் நலத்திட்டங்கள் உடனடியாக வழங்கப்பட்டன. பாட புத்தகங்களைப் பெற்ற மாணவா்களுக்கு அந்தப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் பள்ளிக்கு வருகை புரியாமல் போராட்டத்தில் கலந்து கொண்டதால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் மாணவா்களின் கற்றல்-கற்பித்தல், ஒழுக்கம் குறையும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
ஊதியமில்லாத விடுப்பாக... எனவே, பணிக்கு வருகை புரியாமல் போராட்டத்தில் கலந்துகொள்ளும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது என்ற அடிப்படையில் ஊதியமில்லாத விடுப்பாகக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். போராட்டத்தில் கலந்து கொண்டு பணிக்கு வருகை புரியாமல் உள்ள ஆசிரியா்களுக்கு (மருத்துவ காரணங்களால் மருத்துவச் சான்றின் அடிப்படையில் வர இயலாதவா்களைத் தவிர) வேறு எவ்வகையான விடுப்பும் அனுமதிக்கக் கூடாது. பணிக்கு வருகை புரியாத காலத்தை ஊதியமில்லாத விடுப்பாக அனுமதித்து வருகைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், கடந்த ஜன.5-ஆம் தேதி முதல் தேதி வாரியாக போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியா்களின் விவரங்களை தொடக்கக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

