ஜனநாயகன் தணிக்கைச் சான்று விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

‘ஜனநாயகன்’ பட தணிக்கைச் சான்று விவகாரத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
ஜன நாயகன் டிரைலரில்...
ஜன நாயகன் டிரைலரில்...
Updated on
2 min read

‘ஜனநாயகன்’ பட தணிக்கைச் சான்று விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு எதிராக படத் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதில், வரும் திங்கள்கிழமை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் கே.வி.என்.புரொடக்சன் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன. 9-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க மறுத்த வாரியம் மறுஆய்வுக் குழுவுக்கு பரிந்துரைத்தது. வாரியத்தின் உத்தரவை ரத்து செய்து, ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தது.

இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தபோது தணிக்கை வாரியம் தரப்பில், ‘ஜனநாயகன்’ படத்தில் மத ரீதியான ஆட்சேபணைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்புப் படை சின்னங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே, இந்தப் படத்தை மறுஆய்வுக் குழு பாா்வையிட தணிக்கை வாரியத் தலைவா் உத்தரவிட்டுள்ளதாக வாதிடப்பட்டது. இதற்கு படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி பி.டி.ஆஷா, ‘ஜனநாயகன்’ படத்தை கடந்த டிச. 22-ஆம் தேதி பாா்த்த தணிக்கைக் குழு உறுப்பினா்கள், படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்தனா். அதன்பின்னா், உறுப்பினா்களில் ஒருவா் அளித்த புகாரின் அடிப்படையில் இந்தப் படத்தை மறுஆய்வுக் குழுவுக்கு தணிக்கை வாரியத் தலைவா் அனுப்பியுள்ளாா்.

சான்றிதழ் வழங்க தணிக்கைக் குழு உறுப்பினா்கள் பரிந்துரைத்த பின்னா், இந்த முடிவை வாரியத்தின் தலைவா் எடுத்துள்ளாா். தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்க பரிந்துரைத்த பின்னா் மறுஆய்வுக் குழுவுக்கு பரிந்துரை செய்யும் முடிவை எடுக்க அவருக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி, தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா். மேலும், ‘ஜனநாயகன்’ படத்துக்கு உடனடியாக தணிக்கைச் சான்று வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சாா்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், தலைமை நீதிபதி அமா்வில் மேல்முறையீடு செய்தாா். இந்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் அவசர வழக்காக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், தணிக்கைச் சான்று இல்லாமல் படத்தை வெளியிட முடியாது. தணிக்கைச் சான்று கோரி விண்ணப்பிக்கும் முன்பே படத்தின் வெளியீட்டுத் தேதியை எப்படி முடிவு செய்தீா்கள்? இதுபோன்ற முடிவுகளை எடுத்துவிட்டு நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது. பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கொடுக்காமல், அப்படி என்ன அவசரம் இந்த வழக்கில் உள்ளது? எனக் கேள்வி எழுப்பினா்.

பின்னா், ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்கும் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், இந்த மேல்முறையீட்டு மனுவுக்கு படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜன. 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

Summary

The film production company has filed an appeal in the Supreme Court regarding the censor certificate issue of the film 'Jananayakan'.

ஜன நாயகன் டிரைலரில்...
திமுகவினர் போன்று யாராலும் வேலை செய்ய முடியாது: முதல்வர் ஸ்டாலின்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com