

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படும் படகு சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை படகு சேவை இருக்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படும் படகு சேவை கூடுதல் நேரம் நீட்டிக்கப்படும் என்று பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம் செல்வதற்காக குகன், பொதிகை, விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் படகு சேவை தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவது வழக்கம். நபர் ஒன்றுக்கு சாதாரண கட்டணமாக ரூ. 100 வீதமும், மாணவர்களுக்கான சலுகைக் கட்டணம் ரூ. 40 வீதமும் சிறப்புக் கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ. 300 வீதமும் வசூலிக்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக படகு சேவை நேரம் நீட்டிக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, ஜன. 17 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கும் படகு சேவை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலை 6.45 மணிக்கு டிக்கெட் விநியோகம் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.