கோவளம் நன்னீர்த் தேக்கத் திட்டத்தை கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

கோவளம் நன்னீர்த் தேக்கத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
சீமான்
சீமான்கோப்புப் படம்
Updated on
2 min read

கோவளம் நன்னீர்த் தேக்கத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றவும், வெள்ள பாதிப்புகளைக் குறைக்கவும் எனும் காரணங்களுக்காக என்று முன்மொழியப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் தாலுகாக்களில் கிழக்கு கடற்கரை சாலை (ECR) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை (OMR) ஆகியவற்றுக்கு இடையே உள்ள கோவளம் துணை வடிநிலத்தில் ஒரு புதிய நன்னீர்த் தேக்கம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 471 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் இந்தத் திட்டம், இப்பகுதியில் உள்ள 4375 ஏக்கர் பரப்பளவிலான உப்பங்கழி மற்றும் தாழ்வான நிலப்பகுதியைச் சுற்றி 30.6 கிலோமீட்டர் நீளத்திற்கு மண் கரைகளை அமைப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான கடற்கரை மண்டல மேலாண்மை அனுமதி கடந்த டிசம்பர் 3ம் தேதி (03-12-2025) வழங்கப்பட்டது. நன்னீர்த் தேக்கத் திட்டங்கள் உறுதியாக முன்னெடுக்கப்பட வேண்டியதும் பூமித்தாயின் நலனுக்கு இன்றியமையாததும் ஆகும். இருப்பினும் மேற்குறிப்பிட்ட இடத்தில் முன்மொழியப்பட்டுள்ள திட்டத்தின் பின்விளைவுகளை அரசு ஆராய்ந்திட வேண்டியது அவசியமாகும். இத்திட்டம் அந்தப் பகுதியின் சூழலியல் கட்டமைப்பையும், 16க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்களின் வாழ்வாதாரத்தையும் வேரறுக்கும் ஒரு திட்டமாகும்.

கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை (CRZ Notification 2019, Annexure-IV) படி, மீன்பிடி இடங்கள் (பாடு) தெளிவாக வரைபடத்தில் குறிக்கப்பட வேண்டும். ஆனால், இத்திட்டத்திற்கான அனுமதியில் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி இடங்கள் "வெற்று நிலம்" (Vacant Land) எனத் தவறாகக் காட்டப்பட்டுள்ளது. உப்பங்கழிகளில் காலம் காலமாக மீன்பிடித்து வரும் மீனவர்கள் மற்றும் பழங்குடி இருளர் மக்களின் வாழ்வாதார உரிமையை இத்திட்டம் பறிக்கிறது. மேலும் நூற்றாண்டு பழமை வாய்ந்த பக்கிங்காம் கால்வாயின் போக்கை மாற்றுவது மழைக்காலங்களில் நீரோட்டத்தைத் தடுத்து, பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் ஆபத்துள்ளது. நெடுங்கால சீரழிவுகளில், கடலோடு கால்வாய் கொண்டுள்ள இயற்கை தொடர்பைத் துண்டிப்பது, கடல்சார் சூழலியல் சமநிலையைச் சீர்குலைக்கும்.

உப்பங்கழிகள் என்பது கடல் நீர் புகுந்து செல்லும் உவர்நீர் பகுதிகள். இங்கு நன்னீரைத் தேக்குவதால், இயற்கையான உப்புத்தன்மை மாறும் அதன் விளைவாக இறால் மற்றும் மீன்களின் இனப்பெருக்கச் சுழற்சியை அழித்துவிடும். இப்பகுதி பல புலம்பெயர் பறவைகளுக்கும், அரிதான கடல்வாழ் உயிரினங்களுக்கும் வாழ்விடமாகும். நன்னீர்த் தேக்கம் உருவானால், இந்த ஒட்டுமொத்த உயிரினச் சூழலும் அழிந்துவிடும். இதே பகுதியில் தமிழக அரசின் நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது. ஒரே இடத்தில் கடல்நீரைத் சுத்திகரிக்கும் தொழில்நுட்பத்தையும் வைத்துக்கொண்டு, இயற்கை உப்பங்கழிகளை அழிக்கும் வகையிலும் திட்டம் முன்மொழிவது எதற்கு என்கிற கேள்வி எழுகிறது. மறுபுறம், பாதிக்கப்பட்ட மக்களுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கும் முன்பே திட்டப்பணிகளுக்கான ஏற்பாடுகள் நடப்பது மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரான செயலாகும்.

சென்னையின் தண்ணீர் தேவையையும் வெள்ளநீர் வடிகால் முறையையும் சீரமைக்கவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி மற்றும் சோழவரம் ஆகிய ஏரிகளை நவீன தொழில்நுட்பத்துடன் தூர்வாருதல், பயன்பாட்டில் இருக்கும் நன்னீர்த் தேக்கங்களில் கழிவு நீர் மற்றும் குப்பை கலக்காது வழிவகுத்தல் மற்றும் கால்வாய்களைப் பராமரித்தாலே அதிக அளவில் நன்னீரைச் சேமிக்க முடியும். உப்பங்கழிகளை அழிக்காமல், அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள சிறு ஏரிகளை ஆழப்படுத்துவதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி, உப்பு நீர் ஊடுருவலைத் தடுக்கலாம். வளர்ச்சி என்பது நிலத்தையும், வளத்தையும் மேலும் அந்த நிலத்தைச் சார்ந்து வாழும் மனிதர்களையும் உள்ளடக்கியது. 16 கிராம மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பலிகொடுத்து உருவாக்கப்படும் இந்த நன்னீர்த் தேக்கம், சூழலியல் மீட்டுருவாக்கத்திற்குப் பதிலாக அழிவுக்கே இட்டுச்செல்லும். எனவே, அரசு உடனடியாக இத்திட்டத்தை கைவிட்டு மாற்று வழிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகின்றேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சீமான்
உத்தரப் பிரதேசத்தில் நரி தாக்கியதில் 9 பேர் காயம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com