பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய ஏதுவாக அவர்களின் பணிக்காலத்தில் சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஜன. 20 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆனால் முதலில் தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் அவையில் இருந்து வெளியேறினார்.
தொடர்ந்து 3 நாள்கள் அவை செயல்பட்ட நிலையில் ஆளுநர் உரைக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று பதிலுரை அளித்து வருகிறார். முதல்வரின் பதிலுரையை அதிமுக புறக்கணித்துள்ளது.
பதிலுரையில் முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் குறிப்பாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
"பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, அவர்கள் கோரிய விடுமுறை கால மே மாத ஊதியம் ஆகியவை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் அடுத்த கோரிக்கையான நிரந்தர பணி நியமனத்தை பொருத்தவரை ஓர் அறிவிப்பை நான் வெளியிடுகிறேன்.
அரசுப் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்பும்போது பகுதிநேர ஆசிரியர்கள் நிரந்தர ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட ஏதுவாக, இதற்கான தேர்வுகளில் அவர்களின் பணிக் காலத்தை அடிப்டையாகக் கொண்டு அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும். அதனடிப்படையில் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும்" என்று கூறினார்.
பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, பகுதிநேர ஆசிரியா்களுக்கு மாத ஊதியம் ரூ.12,500-இல் இருந்து ரூ.15,000-ஆக உயா்த்தி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் அறிவித்தார். மேலும் கடந்த 13 ஆண்டுகளாக அவா்களுக்கு மே மாதத்தில் (விடுமுறை காலத்தில்) ஊதியம் வழங்கப்படாத நிலையில், இனி அந்த மாதத்தில் ரூ. 10,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.