/

இன்று மீண்டும் கூடுகிறது காவிரி ஆணையம்: ஒரே மாதத்தில் நடக்கும் இரண்டாவது கூட்டம்

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறப்பதில் இழுபறி நிலவி வரும் நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தில்லியில் வியாழக்கிழமை (ஜூலை 30) மீண்டும் கூடவுள்ளது.

News image

காவிரி நீா் - கோப்புப் படம்

Updated On :7 வினாடிகள் முன்பு

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறப்பதில் இழுபறி நிலவி வரும் நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தில்லியில் வியாழக்கிழமை (ஜூலை 30) மீண்டும் கூடவுள்ளது. இது இந்த மாதத்தில் நடைபெறும் இரண்டாவது கூட்டமாகும்.

இதையொட்டி, தில்லி பிகாஜி காமா பிளேஸில் உள்ள எம்டிஎன்எல் கட்டடத்தின் மேல் தரைத்தளத்தில் உள்ள அந்த ஆணையத்தின் குழு அறையில் இணையவழி மற்றும் நேரடி பங்கேற்பு முறையில் இந்தக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (சிடபிள்யுஎம்ஏ ) 53-ஆவது கூட்டம் கடந்த 22}ஆம் தேதி தில்லியில் நடைபெற்றது. அதில் தமிழக அரசின் சார்பில் நீர்வளத் துறை முதன்மைச் செயலர் சத்யப்ரதா சாஹூ, காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் ஆர். சுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு, தமிழ்நாட்டுக்கு உரிய நீர்ப் பங்கை வழங்குமாறு வலியுறுத்தினர்.

தமிழக நீர்வளத் துறை முதன்மைச் செயலர், 01.06.2026 முதல் 19.07.2026 வரை பில்லிகுண்டுலுவில் பெறப்பட்ட நீர்வரத்து 3.442 டிஎம்சி மட்டுமே என்றும், உச்சநீதிமன்றத்தின் 16.02.2018 இறுதித் தீர்ப்பின்படி வழங்கப்பட வேண்டிய 28.337 டிஎம்சி நீருடன் ஒப்பிடுகையில் இது 12.15 சதவீதம் மட்டுமே என்றும் கூறினார். இதனால் 24,896 டிஎம்சி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, இதுவரை ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை உடனடியாக ஈடுசெய்யவும், மேலும் 16.02.2018 அன்று வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி விகிதாசார அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகம் திறந்துவிடுமாறும் ஆணையம் உத்தரவிட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

ஆனால், கர்நாடக மாநில உறுப்பினர், குறைவான மழைப்பொழிவு மற்றும் வறட்சியை காரணமாக காட்டி, குறிப்பாக பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவைக்காக நீர் தேவைப்படுவதாகத் தெரிவித்தார். நீண்ட நேர விவாதத்துக்குப் பிறகு, மழைப்பொழிவு மற்றும் நீர்வரத்தை மேலும் ஒரு வார காலம் கண்காணிக்கவும், அதன் பின்னர் மாநிலங்கள் முன்வைக்கும் கருத்துகள் மற்றும் நீரியல், வானிலை சார்ந்த சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, ஜூலை 28}இல் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூடி மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய விகிதாசார நீர்ப் பங்கு குறித்து தீர்மானிக்க ஆணையம் முடிவு செய்து கூட்டத்தை ஒரு வாரத்துக்கு தள்ளிவைத்தது.

இதன்படி செவ்வாய்க்கிழமை கூடிய காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு, தமிழ்நாட்டுக்கு ஒரு நாளைக்கு 3,500 கனஅடி வீதம் 15 நாள்களுக்கு 4 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், வியாழக்கிழமை கூடும் ஆணையத்தின் கூட்டத்தில் தமிழகத்துக்கான நீர் திறப்பு தொடர்பாக விவாதித்து முடிவுகள் எடுக்கப்படும் என்று காவிரி ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.