/

உதயசூரியன் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழும் இருளை விரட்டியடிப்போம்! மு.க. ஸ்டாலின்

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளில் மு.க. ஸ்டாலினின் பதிவு...

News image

மு.க. ஸ்டாலின் - X | MK Stalin

Updated On :3 ஜூன் 2026, 11:10 am IST

உதயசூரியன் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 103 ஆவது பிறந்தநாள் புதன்கிழமை (ஜூன் 3) தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, கோடம்பாக்கம் முரசொலி வளாகம் மற்றும் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலைக்கு மரியாதை செலுத்திய மு.க. ஸ்டாலின், தேனாம்பேட்டை அன்பகத்தில் 75 அடிய உயர கம்பத்தில் திமுக கொடி ஏற்றி வைத்து, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தழிழறிஞர் கலைஞர் ஆகியோரின் சிலைகளையும் புதுப்பிக்கப்பட்ட அன்பகம் அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து மு.க. ஸ்டாலின் பதிவிட்டிருப்பதாவது:

”தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!

மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!

வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.

நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு கட்சித் தொண்டரிடமும் இருக்கிறது.

உறுதியாய்ச் சொல்கிறோம். மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Let us drive away the darkness engulfing Tamil Nadu with the light of the Rising Sun! — M.K. Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.