/

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன?

சென்னையில் பள்ளி நிகழ்வில் கலந்துகொண்ட மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்த விவகாரம் பற்றி...

News image

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி - X

Updated On :4 ஜூன் 2026, 5:10 pm IST

சென்னையில் பள்ளி நிகழ்வொன்றில் மேயர் பிரியா, தவெக எம்எல்ஏ பல்லவி பங்கேற்ற நிலையில் சர்ச்சை எழுந்துள்ளது.

விழாவில் தன்னை புறக்கணித்ததாக எம்எல்ஏ பல்லவி கூறிய நிலையில், விழா நெறிமுறைகளின்படி தான் குத்துவிளக்கு ஏற்றிய பிறகு ஐஏஎஸ் அதிகாரியிடம் கொடுத்ததாகவும் எம்எல்ஏ வரும் வரை காத்திருந்து நிகழ்ச்சியைத் தொடங்கியதாகவும் மேயர் பிரியா விளக்கமளித்துள்ளார்.

நடந்தது என்ன?

சென்னை திருவிக நகர் தொகுதியில் உள்ள புளியந்தோப்பு உருது நடுநிலைப் பள்ளி கட்டட திறப்பு விழாவில் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றிய மேயர் பிரியா, அதனை அருகில் இருந்த எம்எல்ஏ பல்லவியிடம் தராமல் அவரையடுத்து நின்ற ஐஏஎஸ் அதிகாரியிடம் கொடுத்தார்.

அடுத்ததாக நம்மாழ்வார்பேட்டை சுப்பராயன் தொடக்கப் பள்ளி நிழ்ச்சியில் மேயர் பிரியா குத்துவிளக்கை ஏற்றிவிட்டு எம்எல்ஏ பல்லவியிடம் மெழுகுவர்த்தியை கொடுத்தபோது அவர் வாங்க மறுத்து வெளியே சென்றுவிட்டார்.

முதல் நிகழ்வில் அவமதிப்பு செய்ததால் 2-ம் நிகழ்வில் எம்எல்ஏ பல்லவி தவிர்த்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

எம்எல்ஏ பல்லவி கூறியது...

இதுபற்றி பல்லவி கூறுகையில், "பள்ளி நிகழ்வு என்பதால் அழைப்பின்பேரில் நான் விழாவுக்குச் சென்றேன். மேயர் பிரியா என்னை வேண்டுமென்றே தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே நடந்துகொண்டார். மேயரே சென்று வேகமாக விளக்கு ஏற்றிவைத்து, என்னைத் தவிர்த்து அவருடைய கட்சி சார்ந்த கவுன்சிலரிடம் மெழுகுவர்த்தியைக் கொடுத்து கௌரவித்தார்.

இரண்டாவது பள்ளி நிகழ்விலும் அவரது நடவடிக்கை அப்படித்தான் இருந்தது. என்னை புறக்கணிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இருந்தார்" என்று கூறினார்.

ஆனால் மேயர் பிரியா, நெறிமுறைகளின்படி மேயர் குத்துவிளக்கு ஏற்றிய பிறகு ஐஏஎஸ் அதிகாரியிடம்தான் கொடுக்க வேண்டும், அதன்படியே நடந்துகொண்டதாகக் கூறியுள்ளார்.

மேயர் பிரியா விளக்கம்

மேயர் பிரியா இதுபற்றி விளக்கமளிக்கையில், "யாரையும் நான் அசிங்கப்படுத்தவில்லை. பள்ளிகள் இன்று திறப்பதால் நெறிமுறைகளின்படி சென்னை மாநகராட்சி சார்பில் எம்எல்ஏவுக்கும் அழைப்பு விடுத்தோம். 8.45 மணிக்கு நிகழ்ச்சி என்று கூறியிருந்தோம். அவர் 9 மணிக்குதான் அங்கு வந்தார். நாங்கள் 8.30க்கே சென்றுவிட்டோம். நாங்கள் புறக்கணிக்க வேண்டும் என்று நினைத்தால் அவர் வருவதற்கு முன்னதாகவே நிகழ்ச்சியைத் தொடங்கியிருக்கலாமே. அவர் வருவார் என்று சொன்னதால் காத்திருந்தோம்.

சென்னை மாநகராட்சி நிகழ்வில் நெறிமுறைகளின்படி மேயர், ஐஏஎஸ் அதிகாரி, எம்எல்ஏ, கவுன்சிலர் / சேர்மன் விளக்கு ஏற்றுவார்கள். நான் விளக்கு ஏற்றியபிறகு ஐஏஎஸ் அதிகாரியிடம் கொடுத்தேன். அதுதான் நெறிமுறை. யாரும் அவரை அவதூறாகப் பேசவில்லை. விடியோவைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். பிரச்னை செய்ய வேண்டும் என்று பிரச்னை செய்பவர்களை என்ன செய்ய முடியும்? 2-வது நிகழ்வில் எனக்கு அடுத்து பகுதிச்செயலர் வந்து மெழுகுவர்த்தியை வாங்க முற்பட்டார். நான் அதைத் தடுத்து எம்எல்ஏவிடம் கொடுத்தேன். அவர் வாங்க மறுத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்" என்று கூறினார்.

மேயர் பிரியா இதுபற்றி விளக்கமளித்தாலும் பலரும் இந்த நிகழ்வு பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Summary

Chennai mayor Priya vs TVK MLA pallavi: what happened in that school opening day ceremony

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.