சென்னை மாநகராட்சியில் ரூ. 284 கோடி மதிப்பிலான 35 நடைபாதை அமைக்கும் டெண்டர்கள் முதல்வர் ஜோசப் விஜய்யின் உத்தரவைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்களுக்குச் சாதகமாக ஒப்பந்தங்களை முன்கூட்டியே தீர்மானித்தது, திட்டச் செலவு செயற்கையாக அதிகரித்தது போன்ற முறைகேடுகள் காரணமாக டெண்டர்களை ரத்து செய்ய நகராட்சி நிர்வாகத் துறையை வைத்திருக்கும் முதல்வர் விஜய் உத்தரவிட்டிருந்தார்.
கடந்த பிப்ரவரி 19 அன்று, சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடரில் நடைபாதைகள் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து , பிப். 20 ஆம் தேதியே ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டது.
அடையாறு சாஸ்திரி நகர், பெசன்ட் நகர் நான்காவது அவென்யூ, ஜவஹர்லால் நேரு மைதானம் அருகிலுள்ள ராஜா முத்தையா சாலை, கீழ்ப்பாக்கம் பார்னபி சாலை மற்றும் மயிலாப்பூர் டாக்டர் பி.எஸ். சிவசாமி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் நடைபாதைகளை அமைக்க இத்திட்டம் 35 தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டது.
இரண்டு முதல் மூன்று சாலைகளுக்கான நடைபாதைகள் அமைக்கும் ஒரு தொகுப்புக்கு ரூ. 8 கோடி முதல் ரூ. 9 கோடி வரை ஒப்பந்த மதிப்பு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்த 35 பணிகளுக்கும் மிகக் குறைந்த விலை கோரிய ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்ட போதிலும், மார்ச் 15 அன்று தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததால், மாநகராட்சி தரப்பில் ஆணைகள் வழங்கப்படவில்லை.
இதனிடையே, இந்தப் பணிகளுக்காக பட்ஜெட் பல மடங்கு அதிகரித்து காட்டப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுதொடர்பாக ஆலோசனை நடத்திய முதல்வர் விஜய், குறிப்பிட்ட 35 நடைபாதை அமைக்கும் டெண்டர்களையும் ரத்து செய்ய சென்னை மாநகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, 35 டெண்டர்களும் ரத்து செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த திட்டத்துக்கு ஏற்கெனவே மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், மறுமதிப்பீடு செய்யப்பட்டு மீண்டும் டெண்டர் விடப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமல்லாமல், சென்னை மாநகராட்சி தரப்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அனைத்து டெண்டர்களையும் மறுஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசை சென்னை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஆர். பிரியா விமர்சித்திருந்த நிலையில், டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Chief Minister Vijay's orders to cancelled 35 tenders in the Chennai Corporation
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









