யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்.. பேருந்து நடத்துநரிடம் கெஞ்சிய நிஷாந்த்! ஆடியோவால் பரபரப்பு
யாரிடமும் சொல்லிவிடாதீர்கள் என்று பேருந்து நடத்துநரிடம் கெஞ்சிய நிஷாந்த் பற்றி..

நிஷாந்த் - கோப்புப்படம்
யாரிடமும் சொல்லிடாதீங்க ப்ரோ என்று பேருந்து நடத்துநரிடம் நிஷாந்த் கெஞ்சியதாக தருமபுரியில் அவர் கைது செய்யப்பட்ட பின்னணி குறித்து ஆடியோ வெளியாகியிருக்கிறது.
மதுரை நகைக்கடையில் நடைபெற்ற சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட நிஷாந்த், தருமபுரி அருகே பேருந்தில் பயணம் செய்தபோது தனது அடையாளத்தை பேருந்து நடத்துநரிடம் தெரிவித்து, இதுகுறித்து யாரிடமும் கூற வேண்டாம் எனக் கெஞ்சியதாகக் கூறப்படும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை காளவாசல் பகுதியில் உள்ள நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய நிஷாந்த், தருமபுரி மாவட்டம் அருகே சேசம்பட்டியில் போலீசாரால் பிடிக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட பின்னர், பேருந்தில் பயணம் செய்தபோது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து பேருந்து நடத்துநர் பேசும் ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அந்த ஆடியோவில் பேருந்து நடத்துநர் கூறியிருப்பதாவது: பேருந்தை நிறுத்திவிட்டு அனைவரும் ஓய்வறைக்குச் சென்றபோது, நிஷாந்த் மட்டும் என்னிடம் செல்போனை வாங்கி, 'நான் நிஷாந்த் பேசுகிறேன்' என்று யாரிடமோ பேசினார். அந்த வார்த்தைகள் மட்டுமே எனக்குக் கேட்டன. பின்னர் சிறிது தள்ளிச் சென்று தனியாக நின்று பேசினார். அப்போது அவரிடம் அவருடைய செல்போனும் இருந்தது.
அதன்பிறகு தலையில் அணிந்திருந்த குல்லாவையும், முகத்தில் அணிந்திருந்த மாஸ்க்கையும் கழற்றிவிட்டார். அவரைப் பார்த்தபோது அவர் யார் என்பது எனக்குத் தெரியவந்தது. உடனே என்னிடம், 'ப்ரோ... யார்கிட்டயும் சொல்லிடாதீங்க ப்ரோ' என்று கெஞ்சினார். நானும், 'அதெல்லாம் ஒன்றும் சொல்ல மாட்டேன்' என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டேன்.
ஆனால், எங்களது பேருந்து ஓட்டுநர் சற்று பயந்த சுபாவம் கொண்டவர். அவர் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் தனது நண்பரும், வகுப்புத் தோழருமான போலீஸ்காரருக்கு போன் செய்து நடந்த விவரத்தைக் கூறிவிட்டார்.
இதையடுத்து காவல் நிலையத்திலிருந்து, நிஷாந்தை சந்தேகம் ஏற்படாத வகையில் தேநீர் கடையில் பேருந்தை நிறுத்துவதுபோல் நிறுத்துமாறு ஓட்டுநரிடம் தெரிவித்துள்ளனர்.
அதன்படி நாங்கள் ஒரு தேநீர் கடையில் பேருந்தை நிறுத்திவிட்டு, கதவுகளை முழுமையாகப் பூட்டினோம். பின்னர் நாங்கள் தேநீர் குடித்துக் கொண்டிருந்தோம்.
இதற்கு முன்னதாக அவர் எங்களைப் பார்த்து 'ப்ரோ' என்று அழைத்துப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது முகத்தில் மாஸ்க்கும், தலையில் குல்லாவும் அணிந்திருந்தார். ஆனால், அதன்பிறகு ஓட்டுநர் இருக்கையிலிருந்து குதித்து தப்பியோட முயற்சி செய்தார்.
அவர் பயணத்திற்காகக் கொடுத்த டிக்கெட் பணத்தைக்கூட நாங்கள் திருப்பிக் கொடுத்துவிட்டோம். உண்மையில் அந்தப் பணத்தைக்கூட அவர் கொடுக்கவில்லை. அவரைப் பேருந்தில் ஏற்றிவிட வந்த மூன்று பேர்தான் அந்தப் பணத்தைக் கொடுத்தார்கள் என அந்த ஆடியோவில் பேருந்து நடத்துநர் தெரிவித்துள்ளார்.
போலீசாருக்கு தகவல் கொடுத்த ஓட்டுநர்; தப்ப முயன்ற நிஷாந்த்!
நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த நிஷாந்த், பேருந்தில் பயணம் செய்தபோது தனது அடையாளம் தெரியவந்ததைத் தொடர்ந்து நடத்துநரிடம் ரகசியமாக வைத்திருக்குமாறு கெஞ்சியதாக வெளியாகியுள்ள இந்த ஆடியோ, வழக்கில் புதிய தகவல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
குறிப்பாக, நிஷாந்தை பேருந்தில் ஏற்றிவிட வந்த மூன்று பேர் யார், அவர்களுக்கும் கொள்ளைச் சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா, அவர் பயணத்தின்போது யாரிடம் செல்போனில் பேசினார் என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன.
Summary
"Please don't tell anyone!" — Nishanth pleaded with the bus conductor.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

