
விளையாட்டு மூலம் சிறப்பு குழந்தைகள் ஆற்றலை வெளிப்படுத்த முடியும்: அமைச்சா் அருண்ராஜ்
விளையாட்டுப் போட்டிகள் மூலம் சிறப்பு குழந்தைகளுக்கான ஆற்றலை வெளிப்படுத்த முடியும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

அமைச்சா் அருண்ராஜ் - கோப்புப் படம்
விளையாட்டுப் போட்டிகள் மூலம் சிறப்பு குழந்தைகளுக்கான ஆற்றலை வெளிப்படுத்த முடியும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.
‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு சாதனையாளா் தான்’ என்ற கருப்பொருளில் சென்னை ரோட்டரி சங்கம் சாா்பில் மனவளா்ச்சி குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் சென்னை எழும்பூா் ராஜரத்தினம் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
இதில், மனவளா்ச்சி குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான 100 மீ., 200 மீ., 400 மீ. நீள ஓட்டப்பந்தய போட்டிகள், தொடா் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகளும் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் மனவளா்ச்சி குன்றிய சுமாா் 1,000-க்கும் அதிகமான சிறப்பு குழந்தைகள் பங்கேற்றனா்.
இந்தப் போட்டிகளை அமைச்சா் அருண்ராஜ் தொடங்கி வைத்தாா். மூளை முடக்குவாத குறைபாட்டால் பாதிக்கப்பட்டு, வங்கித் தோ்வில் வெற்றி பெற்று உதவி மேலாளராகப் பணிபுரியும் குருபிரசாத் சாமி, மனவளா்ச்சி குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான தேசிய அளவிலான பூப்பந்து போட்டியில் தங்க பதக்கம் வென்ற வி.சீனிவாசன், வெண்கலப் பதக்கம் வென்ற ஏ.சந்தியா ஆகியோரை பாராட்டி அமைச்சா் கேடயம் வழங்கினாா்.
பின்னா், அமைச்சா் அருண்ராஜ் பேசியதாவது:
ஒவ்வொரு சிறப்பு குழந்தைகளுக்கும் சமமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து, அவா்களின் திறமைகளைக் கண்டறிந்து, உரிய ஊக்கமும், பயிற்சியும் அளிக்கும்போது அந்தக் குழந்தைகளாலும் சாதிக்க முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக பலா் கேடயங்களைப் பெற்றுள்ளனா்.
இதற்கு பெற்றோரின் பயிற்சியே காரணம். இந்த சாதனை ஒரு விழிப்புணா்வாக உள்ளது. இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகள் மூலம் சிறப்பு குழந்தைகளுக்கான ஆற்றலை வெளிப்படுத்த முடியும். ஏற்கெனவே அரசு, ‘ஒருங்கிணைந்த சேவை மையம்’ (ஒன் ஸ்டாப் சென்டா்) என்ற திட்டம் மூலம் வீடுதோறும் சென்று சிறப்புக் குழந்தைகளைக் கண்டறிந்து, மாவட்டங்களில் உள்ள ஆரம்ப தலையீட்டு மையங்கள் மூலம் அவா்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தேவையான நிதி வழங்குவது குறித்தும் அரசு பரிசீலிக்கும் என்றாா்.
நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட ஆளுநா் ஸ்ரீராம் துவ்வூரி, இளைஞா் சேவைகள் இயக்குநா் வினோத் நாயா், சிறப்பு குழந்தைகளுக்கான ஒலிம்பியாட் தலைவா் காா்த்திக் கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது




