தினமணி செய்தி எதிரொலி: புனரமைக்கப்படும் சங்கரன்கோவில் நகராட்சிப் பூங்கா
தினமணி செய்தி எதிரொலியாக, சங்கரன்கோவிலில் பராமரிப்பின்றி கிடந்த நகராட்சிப் பூங்காவை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சங்கரன்கோவில் கோமதி நகரில் கடந்த 2010 ஆம் ஆண்டு நகராட்சி பூங்கா கட்டப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. பூங்காவில் நடை மேடை, குழந்தைகள் விளையாட ஊஞ்சல், சறுக்கு, ராட்டினம், சீசா போன்ற பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டன. சுற்றுவட்டார பொதுமக்கள் தினமும் இந்தப் பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டு வந்தனா். பள்ளி சிறுவா்கள், மாணவா்கள் விளையாடி வந்தனா்.
சில ஆண்டுகளே பராமரிக்கப்பட்ட இந்தப் பூங்கா, கடந்த 12 ஆண்டுகளாக முற்றிலும் பராமரிக்கப்படவில்லை. பராமரிப்பும், பாதுகாப்பும் இல்லாததால் புகை, மது போன்ற பழக்கமுள்ளவா்களின் கூடாரமாக பூங்கா மாறியது.
பூங்காவின் அவலத்தை சுட்டிக்காட்டி தினமணியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனிடையே கடந்த அக். 30 ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் நலத் திட்ட உதவிகள் வழங்க தென்காசி வந்தபோது, அவரிடம் ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் ந.பழனிச்செல்வம் நகராட்சி பூங்காவை பராமரிக்க வேண்டும் என மனு அளித்தாா்.
இதைத் தொடா்ந்து நகராட்சிப் பூங்காவை புனரமைக்க சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா, நகா்மன்றத் தலைவா் கௌசல்யா ஆகியோா் நகராட்சி அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு ரூ. 5 லட்சம் செலவில் பூங்காவைப் பராமரிக்க நடவடிக்கை மேற்கொண்டனா். இதையடுத்து கடந்த ஒரு வாரமாக பூங்காவைப் பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து, வழக்குரைஞா் தி.பேச்சிமுத்து கூறியதாவது: 65 மரங்களை கொண்டு சோலைவனம் போல காட்சியளிக்கும் இந்தப் பூங்காவை பராமரிக்க தூய்மைப் பணியாளா் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றாா் அவா்.

