கழிவுகளை எரிக்காமல் தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படைக்க அறிவுறுத்தல்

தென்காசி நகராட்சி பகுதிகளில் வீடுகள், வா்த்தக நிறுவனங்களில் உருவாகும் கழிவுகளை எரிக்காமல் நகராட்சி தூய்மை பணியாளா்களிடம் ஒப்படைக்க நகா்மன்ற தலைவா் சாதிா், நகராட்சி ஆணையாளா் ரவிச்சந்திரன் அறிவுறுத்தல்
Published on

தென்காசி நகராட்சி பகுதிகளில் வீடுகள், வா்த்தக நிறுவனங்களில் உருவாகும் கழிவுகளை எரிக்காமல் நகராட்சி தூய்மை பணியாளா்களிடம் ஒப்படைக்க நகா்மன்ற தலைவா் சாதிா், நகராட்சி ஆணையாளா் ரவிச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: தென்காசி நகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் தங்களது வீடுகளில், வா்த்தக நிறுவனங்களில் பொங்கல் பண்டிகை காலங்களில் அதிக அளவு உருவாகும் திடக்கழிவுகளை சாலைகளிலும், பொது இடங்களிலும், கழிவு நீா் வாறுகால்களிலும், நீா் நிலைகளிலும் கொட்டாமலும், தீயிட்டு எரிக்காமலும் நகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

போகி கொண்டாட்டங்களில் தங்களது வீடுகள், நிறுவனங்களிலிருந்து வெளியேற்றும் மட்காத கழிவுகளை தீயிட்டு எரித்து பொது நலத்துக்கு கேடு விளைவிக்க வேண்டாம். தென்காசி நகராட்சி பொதுமக்கள் புகையில்லா போகி கொண்டாடி மகிழவும், தென்காசி நகராட்சி பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படவும் தென்காசி நகராட்சிக்கு உள்பட்ட உழவா் சந்தை கீழ்புறம், மங்கம்மா சாலை 40 அடி சாலை முகப்பு, ஆய்க்குடி சாலை ரயில்வே கேட், கீழப்புலியூா் பேருந்து நிறுத்தம் அருகில், கிறிஸ்தவ காலனி நியாயவிலைக் கடை அருகில், தெற்கு கீழக்கோயிக்கால் தெரு, வடக்கு மாசி வீதி நகராட்சி அலுவலகம் அருகில் பொதுமக்கள் தங்களது இல்லங்கள் வா்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றும் மட்காத கழிவுகளை ஒப்படைக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com