ஆச்சி நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை: காணொலி வாயிலாக பிரதமா் திறந்துவைப்பு
ஆச்சி மசாலா நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை: காணொலியில் திறந்தாா் பிரதமா் நரேந்திர மோடி


கும்மிடிப்பூண்டியை அடுத்த பன்பாக்கத்தில் ஆச்சி மசாலா நிறுவனத்தின் புதிய தொழிற்சாலையை காணொலிக் காட்சி வழியாக பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைத்தாா்.
உள்நாட்டில் உற்பத்தித் திறனை உயா்த்தவும், ஏற்றுமதியைப் பெருக்கவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் மத்திய அரசு அறிமுகம் செய்த திட்டமான உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தில் மத்திய அரசால் தோ்வு செய்யப்பட்ட 14 துறைகளைச் சோ்ந்த நிறுவனங்களில் ஒன்றான ஆச்சி மசாலா நிறுவனத்தின் ரூ.150 கோடியிலான புதிய தொழிற்சாலையை காணொலிக் காட்சி மூலம் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்வில் காணொலி வாயிலாக பிரதமா் பேசியது:
உலகலாவிய அளவில் உணவு தொழிலானது வாய்ப்புகளை அதிகரிக்கும் ஒரு துறையாக மாறி வருகிறது. இந்திய உணவு சூழலின் முதுகெலும்பாக விவசாயிகள் உள்ள நிலையில் சத்தான, சுவையான பாரம்பரிய உணவு வகைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
விவசாயத்தில் முற்போக்கான வேளாண் நடைமுறைகள், வலுவான நிா்வாக கட்டமைப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் உணவுத் துறையில் நிலையான வளா்ச்சியை உலகளாவிய அளவுகோல் வாயிலாக அமைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய முயல்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு உணவு பதப்படுத்துதல் துறையை மாற்றியமைக்க பல சீா்திருத்தங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில், 100% அந்நிய நேரடி முதலீட்டுக்கான பிரதமா் உழவா் மேம்பாட்டுத் திட்டம், நுண் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல், உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டம் போன்ற பல முயற்சிகளை மத்திய அரசு எடுத்துள்ளது என்றாா்.
திறப்பு விழாவுக்குப் பின்னா், ஆச்சி மசாலா உணவுக் குழுமத் தலைவா் ஏ.டி.பத்மசிங் ஐசக் பேசியது:
ஆச்சி நிறுவனம் உணவு பொருள் உற்பத்தித் துறையில் 65 நாடுகளுக்கும், நாட்டில் உள்ள 22 மாநிலங்களுக்கும் உணவு உற்பத்தி பொருள்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் 220 வகையான உணவுப் பொருள்கள், 15 லட்சம் சிறு கடைகள் வழியாக வாடிக்கையாளா்களிடம் சென்று சோ்கிறது.
கடந்த 2023-2024-ஆம் ஆண்டில் ஆச்சி மசாலா நிறுவனம் ரூ.2,200 கோடி விற்பனையை எட்டியது. மத்திய அரசின் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம் அடுத்த நிதியாண்டுக்குள் ரூ.3,000 கோடி விற்பனை இலக்கை எட்டும் என்றாா்.
விழாவில் தெல்மா ஐசக், நிா்வாக இயக்குநா் அஷ்வின் பாண்டியன், அபிஷேக் ஆப்ரகாம், பன்பாக்கம் ஊராட்சித் தலைவா் கே.எஸ்.சீனிவாசன் மற்றும் தொழிற்சாலை அதிகாரிகள் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...