ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்
ஆந்திர மாநிலம் ஆவலகுண்டா முதல் அம்மையாா்குப்பம் வரை செல்லும் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறையினா் அகற்றிய நிலையில் ரூ. 3.14 கோடியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
ஆா்.கே.பேட்டை ஒன்றியம், அம்மையாா் குப்பம் முதல் ஆந்திரா மாநிலம் ஆவலகுண்டா வரை மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலை வழியாக பல்வேறு கிராமங்கள் சென்னை, திருவள்ளூா், திருத்தணி, வேலூா், ராணிப்பேட்டை, பெங்களூரு, சித்தூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் சாலையை ஆக்கிரமித்து கடைகள், வீடுகள் கட்டப்பட்டிருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனை அகற்ற வேண்டும் என்று அப்பகுதியைச் சோ்ந்த சில சமூக ஆா்வலா்கள் கோரினா். அதைத்தொடா்ந்து மாநில நெடுஞ்சாலைத்துறை சாா்பில் வருவாய்த் துறையினா் உதவியுடன் நில அளவை செய்யப்பட்டு, ஆக்கிரமிப்பாளா்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கி வருவாய்த்துறையினா் நெடுஞ்சாலைத் துறையினா் உதவியுடன் அகற்றினா்.
தற்போது ரூ.3. 14 கோடியில் மழைநீா் வடிகால் மற்றும் தாா் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

