பின்னலாடைத் துறையைப் பொருத்த வரை, உற்பத்தி நிறுவனங்களை சார்ந்து, தையல், பிரிண்டிங், செக்கிங் உள்ளிட்ட ஜாப் ஒர்க் நிறுவனங்கள் திருப்பூரில் மட்டுமே பல்லாயிரக்கணக்கில் செயல்பட்டு வருகின்றன. ஜி.எஸ்.டி. கீழ் 18 சதவீத வரி அறிவிப்பு ஜாப் ஒர்க் நிறுவனங்களைக் கடுமையாக பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டதால், ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கான வரியை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக மத்திய அரசு குறைத்து அறிவித்தது.
மத்திய அரசின் அறிவிப்புக்குத் தொழில் துறையினர் உள்ளிட்டோர் மத்தியில் பெரும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், அறிவிப்பை உற்று நோக்கியவர்களுக்கே புரிந்தது, மத்திய அரசானது சில முக்கிய அம்சங்களைத் தவிர்த்தே ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கான வரியைக் குறைத்து அறிவித்துள்ளது என்பது.
குறிப்பாக, ஜாப் ஒர்க் ஆன் யார்ன் (நூல்), ஜாப் ஒர்க் ஆன் பேப்ரிக் (துணி) ஆகியவற்றுக்கு வரியைக் குறைத்த மத்திய அரசு, துணியை வெட்டிய பிறகு பின்னலாடைத் துறையில் மேற்கொள்ளப்படும் ஜாப் ஒர்க் பணிகளுக்கான ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதமாகவே வைத்துள்ளது.
குறிப்பிட்டுக் கூற வேண்டுமென்றால், பின்னலாடைத் துறையில் மேற்கொள்ளப்படும் நிட்டிங், டையிங், பிளீச்சிங், ரோட்டரி பிரிண்டிங், ரைஸிங், ரோல் வாஷிங், காம்பேக்டிங், பேப்ரிக் கட்டிங் ஆகிய பணிகளுக்கு 5 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், செஸ்ட் எம்ப்ராய்டரிங், செஸ்ட் பிரிண்டிங், தையல், கார்மென்ட் வாஷிங், காஜா பட்டன், கையால் மேற்கொள்ளப்படும் எம்ப்ராய்டரி, செக்கிங், அயர்னிங், பேக்கிங் ஆகிய ஜாப் ஒர்க் பணிகளுக்கு 18 சதவீத வரியே நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு இவ்விஷயத்தில் பாரபட்சமாக நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், பின்னலாடைத் துறையை அரசு முழுமையான கவனத்தில் கொள்ளவில்லை என்றும் தொழில் துறையினர் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
திருப்பூரில் ஆண்டுக்கு ரூ. 28 ,000 கோடி ஏற்றுமதி வர்த்தகமும், ரூ. 12 ,000 கோடி அளவுக்கு உள்நாட்டு வர்த்தகமும் நடைபெறுவதில், மேற்கூறப்பட்ட வெட்டப்பட்ட துணிகள் மீதான ஜாப் ஒர்க் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களே முக்கியப் பங்கு வகிக்கின்றன.
சுமார் 7 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ள திருப்பூர் பின்னலாடைத் தொழிலில், தையல், செக்கிங், பேக்கிங், அயர்னிங் உள்ளிட்ட ஜாப் ஒர்க் பணிகளைப் பொருத்த வரை, பெரும்பாலும் தொலைவிலுள்ள கிராமங்களுக்கு உற்பத்திப் பொருள் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு குறைந்த முதலீட்டில் சிறு பரப்பளவில் நடத்தப்படும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றின் மூலமாக கிராமப்புறப் பெண்கள், குடும்ப உறுப்பினர்கள் பயன்பெறுகின்றனர்.
ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்குப் பணிகளை (ஆர்டர்) அளிக்கும் நிறுவனங்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறையே ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கான கூலியை அளிப்பது வழக்கம். இச்சூழலில் 18 சதவீத வரி என்பதை மாதந்தோறும் செலுத்த வேண்டும் என்பது, ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு மிகவும் நெருக்கடியை அளிக்கக் கூடியதாகும். இதனால் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்று ஜி.எஸ்.டி. அமலுக்கு வருவதற்கு முன்னரே எச்சரிக்கப்பட்டது.