/

முடிவுக்கு வரட்டும் மோதல்

கடந்த சில நாட்களாக செய்திகளில் முக்கிய இடத்தைப் பெற்றிருப்பது மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் என்பது. கெட்ட செய்தி

News image
Updated On :5 நவம்பர் 2018, 6:37 am

டி.எஸ்.​ஆர். வெங்​கட்​ர​ம​ணா​​

கடந்த சில நாட்களாக செய்திகளில் முக்கிய இடத்தைப் பெற்றிருப்பது மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் என்பது. கெட்ட செய்தி கிடைத்தால் நல்ல செய்தி என்பது ஊடகங்களின் பொது சுபாவம்! எனவே இந்த செய்தி தேசிய முக்கியத்துவம் பெற்றதில் வியப்பில்லை.

அரசு - ரிசர்வ் வங்கி இடையே கசப்பு முற்றி, ஆளுநர் ராஜிநாமாவில் முடிந்தது இரு முறை. ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநர் சர் ஆஸ்போர்ன் ஸ்மித் அப்போதைய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது பதவியை 1937-இல் ராஜிநாமா செய்தார். சுதந்திரத்துக்குப் பின்னர், ஜவாஹர்லால் நேரு காலத்திலும் ரிசர்வ் வங்கியுடன் மோதல் இருந்து வந்துள்ளது. 1957-ஆம் ஆண்டு அரசுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை முற்றியதைத் தொடர்ந்து அன்றைய ரிசர்வ் வங்கி ஆளுநர் சர் பி. ராமா ராவ் ராஜிநாமா செய்தார்.

நரசிம்ம ராவ், வாஜ்பாய் பிரதமர்களாக இருந்த காலகட்டம்தான் விதிவிலக்கு.
அண்மைக் காலத்தில், ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது கூட இரு ரிசர்வ் வங்கி ஆளுநர்களுடன் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. 
அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது பதவியைத் துறப்பது குறித்து ஆலோசித்தேன் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஒய்.வி.ரெட்டி கூறியிருக்கிறார். ஒய்.வி. ரெட்டிக்கு அடுத்து அந்தப் பதவிக்கு வந்த டி.சுப்பா ராவுக்கும் ப.சிதம்பரத்துக்கும் கூட நிதிக் கொள்கைகளில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.

அரசு - வணிக வங்கிகள் - ரிசர்வ் வங்கி ஆகியவை இடையே எப்போதும் ஓர் இறுக்கம் இருப்பது இயல்புதான். ரிசர்வ் வங்கி என்பது ஓர் ஒழுங்காற்று அமைப்பு; வங்கித் துறையையும் பணப் புழக்கத்தையும் கட்டுப்படுத்தும் அமைப்பு. வட்டி விகிதம், ரொக்க கையிருப்பு விகிதம் போன்ற முடிவுகளில் ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடுகள், உத்தரவுகள் எவ்வளவு கசப்பாக இருந்தாலும் நாட்டின் வணிக வங்கிகள் ஏற்றுப் பின்பற்றியே ஆக வேண்டும்.

நரேந்திர மோடி அரசு, நடுத்தரத் தொழில் தொடங்குவது உள்ளிட்ட செயல்பாடுகளுக்காக முத்ரா திட்டத்தை அறிவித்தது. ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் அதற்கு உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை. இதைத் தவிர, பொருளாதார வளர்ச்சி, மேக் இன் இந்தியா திட்டம் உள்ளிட்டவற்றில் நையாண்டி கலந்த விமர்சனங்களைச் செய்து வந்தார். இது ரகுராம் ராஜனுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பெரும் விரிசலை ஏற்படுத்தியது.

அவருக்குப் பின் ரிசர்வ் வங்கி ஆளுநர் பொறுப்புக்கு வந்த உர்ஜித் படேலுக்கும் மோடி அரசுக்கும் இடையே சுமுகமான உறவு இருந்து வந்தது. கடந்த 2016 நவம்பரில், 500 ரூபாய், 1000 ரூபாய் கரன்சிகள் செல்லாது என்று அதிரடியாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நடவடிக்கை பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதிலிருந்து நாட்டின் பொருளாதாரம் இன்னும் முற்றிலுமாக மீளவில்லை என்று இப்போதும் கூறுவாருளர். இருந்தாலும் அரசின் நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் முற்றிலுமாக ஒத்துழைப்பும் ஆதரவும் அளித்தார். ஆனால், அதன் பின்னர் வெளியான வட்டி விகித அறிவிப்புகள் அரசின் எதிர்பார்ப்புக்கு இணங்க அமையவில்லை.

கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி ரூ.60,000 கோடி ஈவுத்தொகை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரூ. 30,000 கோடி மட்டுமே அளித்தது. மத்திய பட்ஜெட் ஒதுக்கீடுகள் பாதிக்கப்படும், எனவே கூடுதல் தொகை அளிக்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை ரிசர்வ் வங்கி நிராகரித்தது. 

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், அந்நியச் செலாவணி மதிப்பு அதிகரிப்பை சமாளிக்கவும் கூடுதல் கையிருப்பு தேவை என்று ரிசர்வ் வங்கி கைவிரித்துவிட்டது. பட்ஜெட் அறிவிப்புகளை நிறைவேற்றுவது ரிசர்வ் வங்கியின் பணி அல்ல என்பது உண்மைதான்!

அடுத்ததாக, வணிக வங்கிகளைக் கூர்ந்து கண்காணித்து, மோசடிகளை வெளிக்கொணர்வதில் ரிசர்வ் வங்கி சுணக்கம் காட்டியது என்று அரசுத் தரப்பில் புகார் எழுந்தது. வங்கிகளை தண்டிக்கும் அதிகாரம் ரிசர்வ் வங்கிக்கு இல்லை எனவும், கூடுதல் அதிகாரங்கள் தேவை எனவும் ஆளுநர் உர்ஜித் படேல் பதிலடி கொடுத்தார்.

ரிசர்வ் வங்கியின் தற்போதைய அதிகாரங்களே தவறிழைக்கும் வங்கிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போதுமானது என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். இப்படியாக, சொற்போர் பல மாதங்களாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில்தான், கடந்த வாரம், ஒரு நிகழ்ச்சியில் முக்கிய உரையாற்றிய ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரல் ஆச்சார்யா, ரிசர்வ் வங்கிகளின் சுதந்திரத்தை மதிக்காத அரசுகள், நிதிச் சந்தையின் கோபத்துக்கு ஆளாக நேரிடும், பொருளாதாரத் தீ மூளும் என்ற ஆக்ரோஷமான கருத்தை வெளியிட்டார். இது தேவையற்ற கடுமை என்றே கூற வேண்டும். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் தலையிடும் வகையில், அதன் ஆளுநரின் பணி தொடர்பாக மத்திய அரசு அறிவுரையோ ஆணையோ இடுமானால், அவர் பதவி விலகுவார் என்று ஊடகங்கள் அலறத் தொடங்கின. இதையடுத்து, ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே அரசு செயல்படுகிறது, வங்கியின் சுதந்திரத்தில் தலையீடு இல்லை என்று மத்திய அரசு சார்பில் விளக்கம் வெளியானது.

ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் இல்லையென்றாலும் உண்டென்றாலும், இவ்விரு தரப்பின் கொள்கை - கருத்து வேறுபாடுகள் விவரமில்லாதவர்களின் விவாதப் பொருளாகும்போது, உண்மை பலியாகிறது. மேலும், பங்குச் சந்தை, நிதிச் சந்தை உள்பட பல்வேறு நிலைகளில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

நரேந்திர மோடியின் அரசை விமர்சிக்கத் தயங்காத ரிசர்வ் வங்கி ஆளுநர் என்று பெயரெடுத்த ரகுராம் ராஜன் கூறிய ஒரு கருத்து இங்கு நினைவுகூரத்தக்கது. ""அரசின் ஒரு பரிந்துரையை நிராகரிக்கும் உரிமையும் தகுதியும் ரிசர்வ் வங்கிக்குத் தேவை. 

அந்த உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அதே சமயத்தில் எல்லா கட்டுப்பாடு, தளைகளிலிருந்தும் ரிசர்வ் வங்கி விடுபட்டு சுதந்திரமாக, தன்னிச்சையாக இருந்துவிட முடியாது. அரசு வரையறுக்கும் கட்டுப்பாட்டுக்குள்தான் ரிசர்வ் வங்கி செயல்பட வேண்டும்'' என்று ரகுராம் ராஜன் கூறியிருந்தார். இதை ரிசர்வ் வங்கியின் இரண்டாம் நிலை தலைமையும் உணர வேண்டும்.

பல்வேறு சர்வதேச நிலவரங்களால் நாட்டின் பொருளாதாரம் சிக்கலான ஒரு காலகட்டத்தில் உள்ளது. பொருளாதார வளர்ச்சி தொடர்பாக அரசும் ரிசர்வ் வங்கியும் எடுக்கக் கூடிய முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ரிசர்வ் வங்கியும் அரசும் வெளிப்படையாக மோதிக் கொள்வது போன்ற கருத்துகளை வெளியிடாமல், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய  நேரம் இது.

ஒருவரைவிட மற்றவர் கெட்டிக்காரர் என்பதை நிறுவ நடைபெறும் சச்சரவு போன்ற நிலையைத் தவிர்த்து, நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரத்தை வழிநடத்திச் செல்வது குறித்து இருவரும் ஆலோசிக்க வேண்டும். அநாவசிய தலைப்புச் செய்திகளுக்கு இடமளிப்பதை இரு தரப்புமே தவிர்க்க வேண்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.