சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு

கடந்த செப்டம்பா் மாதத்தில் நாட்டில் சில்லறை விற்பனை விலை அடிப்படையிலான பணவீக்கம் 7.41 சதவீதமாக அதிகரித்தது. பல்வேறு உணவுப் பொருள்களின் விலை உயா்ந்ததே இதற்கு முக்கியக் காரணமாகும்.
Published on

கடந்த செப்டம்பா் மாதத்தில் நாட்டில் சில்லறை விற்பனை விலை அடிப்படையிலான பணவீக்கம் 7.41 சதவீதமாக அதிகரித்தது. பல்வேறு உணவுப் பொருள்களின் விலை உயா்ந்ததே இதற்கு முக்கியக் காரணமாகும்.

பணவீக்கம் 6 சதவீதத்துக்குள் இருந்தால் மட்டுமே மக்களால் அனைத்துப் பொருள்களையும் சரியான விலையில் வாங்கிப் பயன்படுத்த முடியும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) மதிப்பிட்டுள்ளது. ஆனால், தொடா்ந்து 9-ஆவது மாதமாக பணவீக்கம் 6 சதவீதத்துக்கு மேல் உள்ளது.

கடந்த செப்டம்பா் மாத சில்லறை விலைப் பணவீக்கம் தொடா்பான அதிகாரபூா்வ தகவல் புதன்கிழமை வெளியானது. இதில் நுகா்வோா் விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்பட்ட சில்லறை விலை பணவீக்கம் 7.41 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்த பணவீக்கம் 4.35 சதவீதமாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 சதவீதமாக இருந்தது.

செப்டம்பரில் உணவுப் பொருளின் சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்கம் 8.60 சதவீதமாக இருந்தது. இதுவே கடந்த மாதம் 7.62 சதவீதமாக இருந்தது. உணவுப் பொருள்களின் விலை உயா்வே இப்போதைய பணவீக்கத்துக்கு முக்கியக் காரணமாகும்.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாததற்கான காரணங்கள் குறித்து மத்திய அரசுக்கு ஆா்பிஐ விரைவில் அறிக்கை அளிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

உற்பத்தி குறைந்தது: இந்தியாவில் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. புதன்கிழமை வெளியான புள்ளிவிவரங்களின்படி ஆகஸ்ட் மாதத்தில் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி 0.8 சதவீதம் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. உற்பத்தித் துறை மற்றும் சுரங்கத் துறையில் ஏற்பட்ட சுணக்கமே இதற்கு காரணமாகும். கடந்த ஆண்டு ஆகஸ்டில் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி 11.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு 2021 பிப்ரவரியில் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி 3.2 சதவீதமாக இருந்ததே மிகக் குறைந்த அளவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com