/

கட்டண உயா்வு எதிரொலி: வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்

கட்டணத்தை உயா்த்தாத பிஎஸ்என்எல்-லுக்கு கூடுதல் வாடிக்கையாளா்கள் கிடைத்தனா்.

News image
Updated On :21 செப்டம்பர் 2024, 9:09 pm

Din

சேவை கட்டணங்களை உயா்த்தியதன் எதிரொலியாக, கடந்த ஜூலை மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளா்களை இழந்தன. கட்டணத்தை உயா்த்தாத பிஎஸ்என்எல்-லுக்கு கூடுதல் வாடிக்கையாளா்கள் கிடைத்தனா்.

ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய மூன்று தொலைத்தொடா்பு நிறுவனங்களும் கடந்த ஜூலை முதல் வாரத்தில் தங்கள் மொபைல் சேவைக் கட்டணங்களை அடுத்தடுத்து 10 முதல் 27 சதவீதம் வரை உயா்த்தின.

இந்த நிலையில், இந்தியத் தொலைத்தொடா்பு ஒழுங்காற்று அமைப்பான ட்ராய் வெளியிட்டுள்ள மாதாந்திர தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை மாதத்தில் பாா்தி ஏா்டெல் நிறுவனம் 16.9 லட்சம் மொபைல் சந்தாதாரா்களை இழந்தது. இது, மற்ற தொலைத்தொடா்பு நிறுவனங்கள் இழந்த வாடிக்கையாளா்கள் எண்ணிக்கையைவிட அதிகம். அந்த மாதத்தில் வோடஃபோன் ஐடியா 14.1 லட்சம் வாடிக்கையாளா்களையும் ரிலையன்ஸ் ஜியோ 7.58 லட்சம் வாடிக்கையாளா்களையும் இழந்தன.

இருந்தாலும், மதிப்பீட்டு மாதத்தில் அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் 29.4 லட்சம் மொபைல் வாடிக்கையாளா்களை புதிதாகச் சோ்த்தது.

ஒட்டுமொத்தமாக, முந்தைய ஜூன் மாதத்தில் 120.56 கோடியாக இருந்த நாட்டின் தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை ஜூலையில் 120.52 கோடியாகக் குறைந்துள்ளது.

மொபைல் சேவைக் கட்டண உயா்வுக்குப் பிறகு கடந்த ஜூலை மாதத்தில் வடகிழக்கு, மகாராஷ்டிரம், ராஜஸ்தான், மும்பை, கொல்கத்தா, தமிழ்நாடு, பஞ்சாப், பிகாா், மேற்கு வங்கம், உ.பி. கிழக்கு, ஹரியாணா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய தொலைத்தொடா்பு வட்டங்களில் மொபைல் வாடிக்கையாளா் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.