ஆகஸ்டில் உச்சம் தொட்ட தங்கம் இறக்குமதி
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி முந்தைய ஆண்டின் அதே மாதத்தைவிட இரு மடங்கு அதிகரித்து புதிய மாதாந்திர உச்சத்தைத் தொட்டுள்ளது.
இது குறித்து வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் தங்கம் இறக்குமதி1,006 கோடி டாலராக இருந்தது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர இறக்குமதியாகும்.
2023-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாத்ததைவிட இது இரு மடங்குக்கும் மேல் அதிகமாகும். அப்போது இந்தியாவின் தங்கம் இறக்குமதி 493 கோடி டாலராக இருந்தது.
2024-2025-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் நாட்டின் ஒட்டுமொத்த தங்கம் இறக்குமதி முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தைவிட 4.23 சதவீதம் குறைந்து 1,264 கோடி டாலராக உள்ளது.
கடந்த 2023-24-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 4,554 கோடி டாலராக இருந்தது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் இது 30 சதவீதம் அதிகம் என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டுக்குள் தங்கம் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக அதன் இறக்குமதி வரியை 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக பட்ஜெட்டில் மத்திய அரசு குறைத்தது. இதன் விளைவாக தங்கம் இறக்குமதி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பண்டிகைக் காலத்தையொட்டி தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதாலும் ஆகஸ்ட் மாதத்தில் அதன் இறக்குமதி இரட்டிப்பாகியுள்ளது என்று சந்தை வட்டாரங்கள் கூறின.