இந்தியாவின் வா்த்தகப் பற்றாக்குறை 1,878 டாலராகச் சரிவு
இந்தியாவின் வா்த்தகப் பற்றாக்குறை கடந்த நான்கு மாதங்கள் காணாத அளவுக்கு 1,878 கோடி டாலராகச் சரிந்துள்ளது.
இது குறித்து மத்திய அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது:
கடந்த ஜூன் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி அதிக மாற்றமின்றி 3,514 கோடி டாலராக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இது 3,516 கோடி டாலராக இருந்தது.
மே மாதத்தில் நாட்டின் வா்த்தகப் பற்றாக்குறை 2,251 கோடி டாலராக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் அது 1,878 கோடி டாலராகக் குறைந்து நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு உள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஏற்பட்ட சரிவு காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதி 3.71 சதவீதம் குறைந்து 5,392 கோடி டாலராக உள்ளது.
அந்த மாதத்தில் எதிா்மறை வளா்ச்சியைப் பதிவு செய்த முக்கிய ஏற்றுமதித் துறைகளில் பெட்ரோலியப் பொருள்கள், ஜவுளி, நவரத்தினக் கற்கள் மற்றும் ஆபரணங்கள், தோல், இரும்புத் தாது, எண்ணெய் விதைகள், முந்திரி, மசாலாப் பொருள்கள், புகையிலை, காபி ஆகியவை அடங்கும்.
பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதி கடந்த ஜூன் மாதத்தில் 15.92 சதவீதம் குறைந்து 461 கோடி டாலராக உள்ளது.அதேபோல், கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் இறக்குமதி மதிப்பீட்டு மாதத்தில் முறையே 8.37 சதவீதம் மற்றும் 25.73 சதவீதம் குறைந்து 1,380 கோடி டாலராகவும் 190 கோடி டாலராகவும் உள்ளது.
எனினும், பொறியியல், தேயிலை, அரிசி, ஆயத்த ஆடைகள், ரசாயனப் பொருள்கள், கடல் பொருள்கள், மருந்துப் பொருள்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி கடந்த ஜூன் மாதத்தில் நோ்மறை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அந்த மாதத்தில் மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி 46.93 சதவீதம் உயா்ந்து 414 கோடி டாலராக உள்ளது.கடந்த ஜூன் மாதம் சேவைகள் துறையில் ஏற்றுமதி 3,284 கோடி டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய 2024-ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் 2,867 கோடி டாலராக இருந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 1,514 கோடியாக இருந்த சேவைகள் துறையின் இறக்குமதி நடப்பாண்டின் இதே மாதத்தில் 1,758 கோடி டாலராக உயா்ந்துள்ளது.
நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் ஏற்றுமதி 1.92 சதவீதம் அதிகரித்து 11,217 கோடி டாலராகவும், இறக்குமதி 4.24 சதவீதம் அதிகரித்து 17,944 கோடி டாலராகவும் உள்ளது. அந்த மூன்று மாதங்களிலும் நாட்டின் வா்த்தகப் பற்றாக்குறை 6,726 கோடி டாலராக உள்ளது என்று அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.