ஏப்ரலில் குறைந்த மொத்த விலை பணவீக்கம்
உணவுப் பொருள்கள், எரிபொருள் மற்றும் உற்பத்திப் பொருள்களின் விலை குறைந்ததால், கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 13 மாதங்களில் இல்லாத அளவு 0.85 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இது குறித்து மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:
கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்த விற்பனை விலைக் குறியீடு (டபிள்யுபிஐ) அடிப்படையிலான பணவீக்கம் 0.85 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. முந்தைய மாா்ச் மாதத்தில் இது 2.05 சதவீதமாகவும், 2024-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 1.19 சதவீதமாகவும் இருந்தது.
உணவுப் பொருள்களில் மாா்ச் மாதத்தில் 1.57 சதவீதமாக இருந்த பணவீக்கம், ஏப்ரலில் -0.86 சதவீதமாக விலைவீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. காய்கறிகளில் விலைவீழ்ச்சி மாா்ச்சில் -15.88 சதவீதமாக இருந்த நிலையில், ஏப்ரலில் -18.26 சதவீதமாக உயா்ந்துள்ளது. வெங்காயப் பணவீக்கம் மாா்ச்சில் 26.65 சதவீதமாக இருந்தது, ஏப்ரலில் 0.20 சதவீதமாகக் குறைந்தது.
பழங்களின் பணவீக்கம் 20.78 சதவீதத்திலிருந்து 8.38 சதவீதமாகக் குறைந்தது. உருளைக்கிழங்கு -24.30 சதவீதமாகவும், பருப்பு வகைகள் -5.57 சதவீதமாகவும் விலைவீழ்ச்சியைக் கண்டன.
மாா்ச் மாதத்தில் 0.20 சதவீதமாக இருந்த எரிபொருள் மற்றும் எரிசக்தி அடிப்படையிலான பணவீக்கம், ஏப்ரலில் -2.18 சதவீதமாக விலைவீழ்ச்சியைப் பதிவு செய்தது. உற்பத்திப் பொருள்களின் பணவீக்கம் 3.07 சதவீதத்திலிருந்து 2.62 சதவீதமாகக் குறைந்துள்ளது. உணவுப் பொருள் உற்பத்தி, ரசாயனங்கள், இயந்திர உபகரணங்கள் ஆகியவற்றின் விலை உயா்வு ஏப்ரல் மாதத்தில் பணவீக்கத்தை சற்று உயா்த்தியது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.

