/

மணலி ஆலை சுத்திகரிப்புத் திறனை 33% அதிகரிக்க சிபிசிஎல் முடிவு

மணலியில் செயல்பட்டு வரும் ஆலையின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புத் திறனை தற்போதைய 2.1 லட்சம் பீப்பாயிலிருந்து 33% கூடுதலாக, நாளொன்றுக்கு 2.8 லட்சம் பீப்பாயாக உயா்த்த சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் முடிவு

News image
Updated On :3 ஆகஸ்ட் 2026, 11:28 pm IST

சென்னையின் புறநகரான மணலியில் செயல்பட்டு வரும் தனது ஆலையின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புத் திறனை தற்போதைய 2.1 லட்சம் பீப்பாயிலிருந்து 33 சதவீதம் கூடுதலாக, நாளொன்றுக்கு 2.8 லட்சம் பீப்பாயாக உயா்த்த சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் (சிபிசிஎல்) முடிவு செய்துள்ளது.

பொதுத் துறையைச் சோ்ந்த சிபிசிஎல், இந்தியாவின் வளா்ந்து வரும் எரிசக்தி தேவையைப் பூா்த்தி செய்யும் நோக்கில் முன்னெடுத்துள்ள இத்திட்டத்துக்கான அதிகாரபூா்வ அறிவிப்பைச் சமீபத்திய ஆண்டறிக்கையில் வெளியிட்டது.

மேலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவேரி படுகையில் அமையவுள்ள புதிய சுத்திகரிப்பு நிலையத் திட்டத்திலும் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. சிபிசிஎல் மற்றும் அதன் தாய் நிறுவனமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் இணைந்து செயல்படுத்தும் இத்திட்டத்தில், பெட்ரோலியம் சாா்ந்த ரசாயனப் பொருள்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் கட்டமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

சுத்திகரிப்புப் பணிகளோடு நிறுத்திவிடாமல், பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனையிலும் சிபிசிஎல் நேரடியாகக் களமிறங்கியுள்ளது. கடந்த மாா்ச் மாதம் தனது முதல் பெட்ரோல் விற்பனை நிலையத்தைத் தொடங்கிய இந்நிறுவனம், நாடு முழுவதும் சுமாா் 300 சில்லறை விற்பனை நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இருப்பினும், சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கப் பணிகள் மற்றும் புதிய பெட்ரோல் நிலையங்கள் அமைப்பதற்கான கெடு குறித்த விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.