பணவீக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 319 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,150-க்கு கீழ் நிறைவு!
சென்செக்ஸ் 318.56 புள்ளிகள் சரிந்து 81,592.45 புள்ளிகளாகவும், நிஃப்டி 155.05 புள்ளிகள் சரிந்து 25,144.30 புள்ளிகளாக நிலைபெற்றது.

கோப்புப் படம் | மும்பை பங்குச் சந்தை
மும்பை: அக்டோபரில் சில்லறைப் பணவீக்கம் 6.09 சதவீதமாக உயர்ந்ததை அடுத்து, ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய முக்கிய குறியீடுகள் மூன்று நாள் ஏற்றத்திற்குப் பிறகு இன்று சரிவுடன் முடிவடைந்தன.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 622.26 புள்ளிகள் சரிந்து 81,288.75 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 318.56 புள்ளிகள் சரிந்து 81,592.45 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 155.05 புள்ளிகள் சரிந்து 25,144.30 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், பாரத் எலக்ட்ரானிக்ஸ், என்.டி.பி.சி, ட்ரென்ட் மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் மறுபுறம் ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஏசியன் பெயிண்ட்ஸ், பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பங்குகள் உயர்ந்தன.
அக்டோபர் மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் கடுமையாக உயர்ந்து 6.09 சதவீதமாகக் இருந்தது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக ரிசர்வ் வங்கியின் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச பணவீக்க வரம்பை கடந்தது. இதனால் ரிசர்வ் வங்கி தனது கொள்கை வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்று நிபுணர்கள் கணித்து வந்தனர்.
நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில், சில்லறைப் பணவீக்கம், செப்டம்பர் மாதத்தில் 5.54 சதவீதமாக உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்கள், உணவகச் சேவைகள் மற்றும் போக்குவரத்துச் செலவு ஆகியவற்றின் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்ததே அக்டோபர் மாத ஒட்டுமொத்த பணவீக்க உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், உணவுப் பணவீக்கம் செப்டம்பர் மாதம் 7.74 சதவீதமாக இருந்த நிலையில், அக்டோபர் மாதத்தில் 8.94 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள சரிவு, அதிகரித்து வரும் பணவீக்கம், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தாக்கம் குறித்து முதலீட்டாளர்கள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது. உலகளாவிய நிச்சயமற்ற சூழல் சந்தையில் எச்சரிக்கையான போக்கை ஏற்படுத்தியுள்ள நிலையில், எரிசக்தி விலை உயர்வால் நிறுவனங்களின் லாப வரம்புகள் பாதிக்கப்படுவதும், நுகர்வு குறைவது மற்றும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரிப்பது போன்ற இரண்டாம் கட்டத் தாக்கங்களே தற்போது முக்கியக் கவலையாக உள்ளது.
சமீபத்திய நீண்ட கால ஏற்றத்தைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் லாபத்தைப் பதிவு செய்ததால், இந்தியப் பங்குச் சந்தை சரிவுடன் முடிந்தன. இது சந்தையின் மூன்று நாள் தொடர் ஏற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ. 7,830.60 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி, ஷாங்காயின் எஸ்எஸ்இ கூட்டுக்குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு ஆகியவை சரிவுடனும், ஜப்பானின் நிக்கி 225 குறியீடு உயர்ந்தன.
ஐரோப்பிய சந்தை சற்று உயர்வுடன் வர்த்தகமான நிலையில், அமெரிக்கப் பங்குச் சந்தை நேற்று (வியாழக்கிழமை) சரிவுடன் முடிவடைந்தன.
உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 95.76 டாலர் என்ற அளவில் மாற்றமின்றி உள்ளது.
Summary
Benchmark indices Sensex and Nifty ended lower on Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


