ஸிம்பாப்வே நாட்டில் காணப்பட்ட பண்பாட்டு இடிபாடுகள், கறுப்பின மக்களால் உருவாக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால், மேற்கத்திய மனம் இதை ஏற்க மறுத்தது. சாலமோன் மன்னன் முதல் பினீஷியர்கள் வரை, பலர் இதை உருவாக்கியதாகக் கருதப்பட்டனர். எப்பாடுபட்டாவது, ஆப்பிரிக்கர்களைத் தவிர வேற்றினத்தவர்களே இந்தப் பண்பாட்டை உருவாக்கினார்கள் என்றும், இல்லையென்றால் இதை உருவாக்கியவர்களிடம் வேற்றினக் கலப்பிருந்தது என்றும் கூறப்பட்டது. உண்மையில், இவை ஒன்றும் மிகப் பழமையான இடிபாடுகள் அல்ல என்பது, ஆப்பிரிக்காவின் கறுப்பின மக்கள் சிறப்பான பண்பாடுகளை உருவாக்கியவர்கள் என்பதற்கான ஆதாரமாகும். இதை ஏற்றுக்கொள்வது, தம் காலனியத்தின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்று கருதிய வெள்ளையர்கள், இந்த இடிபாடுகள் குறித்த செய்திகளை – டூரிஸ்ட் கையேடுகள் உட்பட அனைத்தையும் – கடுமையாகத் தணிக்கை செய்தனர். ஆனால், இன்று உண்மை அனைவரும் அறிய நிற்கிறது. (Henrika Kuklick, Contested Monuments, in Colonial Situations: Essays on the Contextualization of Ethnographic Knowledge,(Ed. George W. Stocking), University of Wisconsin Press, , 1991, pp.158-9).