ஆசனம் 12. வீராசனம்
வீரியத்தில் இருந்து வருவது வீரம். வஜ்ராசனம் செய்வதால், உடலுக்கு வீரியம் அதிகரிக்கிறது.


விரும்பிய பெண் கிடைப்பாளா?
மதுரை, கூடல் பெருமாள் கோயில்.
தினமும் மாலை மீனா அக்கோயிலுக்குச் செல்வது வழக்கம். அவள் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தான் ரகு. அவள் நடந்து போகும்போது இணையாக உடன் நடந்தபடி கேட்டான்.
“இன்றைக்காவது நல்ல பதில் சொல்லுவீங்கன்னு எதிர்பார்க்கிறேன்”.
மீனா பதில் ஏதும் பேசாமல் போய்விட்டாள். மறுநாள், அதேபோலக் கேட்டுக்கொண்டே பின் தொடர்ந்தான் ரகு.
அடுத்தச் சில நாட்கள் அவள் வரவில்லை. எப்படிக் கணக்கெடுப்பானோ தெரியாது.
அந்தச் சில நாட்களுக்குப் பிறகு அவள் மீண்டும் வரும்போது, மீண்டும் வந்து பின்தொடர்ந்தான். கேட்டதையே திரும்பத் திரும்பக் கேட்டான்.
அவள் பொறுமை இழந்தாள். கோபத்தில் முகம் சிவந்தாள்.
“பாருங்க. நான் உங்களை விரும்பல. இனிமே இந்த மாதிரி எல்லாம் கேட்காதீங்க. எனக்குப் பிடிக்காது”.
அவன் அவமானத்தோடு நின்றுவிட்டான்.
மறுநாள் -
“ஏன் என்னைப் பிடிக்கலை? எனக்கு பெர்சனாலிட்டி இல்லையா, படிப்பு இல்லையா, வேலை இல்லையா? முப்பதாயிரம் ரூபா சம்பளம் வாங்கிட்டு இருக்கேன். எந்தக் கெட்டபழக்கமும் இல்லை. என்னை ஏன் பிடிக்கலை? காரணத்தைத் தெரிஞ்சுக்கலாமா?”
“பிடிக்கறதும் பிடிக்காததும் பெருமாளுக்குத்தான் வெளிச்சம். ஆனா எனக்கு என்னமோ உங்களைப் பிடிக்கலை”.
“அதான் ஏன் பிடிக்கலே? ஒரு காரணத்தைச் சொல்லுங்களேன்”.
“சொல்லத் தெரியலை. ஆனா பிடிக்கலை. பிடிக்கலேன்னா விட்டுடணும். இங்கிருந்து போயிடுங்க ப்ளீஸ்”.
‘‘அதையே நான் உங்களுக்குத் திருப்பிச் சொல்லட்டுமா. எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. ரொம்பப் பிடிச்சிருக்கு. போதுமா? பிடிச்சிருக்குதுன்னு சொன்னா நீங்க சம்மதிக்கணும்ல?’’ என்றவாறு அவளை வழிமறித்தான்.
நின்று முறைத்தாள் மீனா.
“எனக்குப் பிடிக்கல… பிடிக்கல… பிடிக்கல… இப்போ போகப்போறீங்களா இல்லியா?”
“என்னால உங்களை விட்டுப் போகமுடியாது. உங்களை மறக்கவும் முடியாது. என்னை நம்புங்க மீனா. எங்க வீட்டுல நான் எடுக்கற முடிவுதான். யாரும் தலையிடமாட்டாங்க. தலையிடவும் முடியாது. என்னை நம்புங்க. பெருமாளை நம்பற அளவுக்குத் தாராளமா நம்பலாம். நானும் பெருமாள் பக்தன்தான். உங்களை மாதிரி ஒரு பொண்ணு மனைவியா வரணும்னுதான், ஒவ்வொரு நாளும் பெருமாள்கிட்ட வேண்டிக்கிட்டு இருக்கேன். நீங்க சரின்னு மட்டும் சொன்னா, உங்களை என் தோள்மேல தூக்கிவெச்சு காப்பாத்துவேன். எனக்கு மனைவியா வந்தா நீங்கதான். வேறு யாரும் இல்லை. என்னை தைரியமா நம்பி வாங்க மீனா. நான் பொய் சொன்னா, இந்தப் பெருமாளே என்னை தண்டிக்கட்டும், போதுமா? வாங்க இப்பவே, பெருமாள் முன்னாலே சத்தியம் பண்றேன்”.
“இப்படி சொல்ல உங்களுக்கு வெக்கமா இல்ல. நீங்க உங்க விருப்பத்தை சொன்னீங்க. ஆனா, எனக்கு யாரை பிடிச்சிருக்குன்னு என்கிட்ட கேட்டீங்களா. நான் என் மனசை யார்கிட்டயாவது பறிகுடுத்திருந்தா என்ன பண்ணுவீங்க. அதை தெரிஞ்சிக்கிட்டுத்தானே என்கிட்ட நீங்க உங்க விருப்பத்தை சொல்லியிருக்கனும். சரி, அதை விடுங்க. நான் இப்போ, இன்னொருத்தரோட மனைவி. அது தெரியுமா உங்களுக்கு?’’
ரகு அப்படியே அதிர்ந்துபோனான்.
கண்கள் தெறித்து விழுவதுபோல ஆனது. அதே கண்கொண்டு, அவள் கழுத்தை நெறிப்பதுபோல நோட்டம் விட்டான்.
“தாலி இல்லேன்னுதானே பாக்கறீங்க. நான் தாலி கட்டாம வாழ்ந்துகிட்டு இருக்கேன். படிப்பு முடிஞ்சதும் கல்யாணம்!”
“அந்த யோகக்காரர் யாருன்னு தெரிஞ்சிக்கலாமா?”
“அது உங்களுக்குத் தேவையில்லாத விஷயம். நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன். இனிமே என்னை பின்தொடராதீங்க. இது என் கடைசி எச்சரிக்கை!”
அப்படியே பின்வாங்கியபடி வெளியேறினான்.
பெருமாளிடம் போய், தான் பொய் சொன்னதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டாள். நல்ல வரனைத் தனக்கு ஏற்படுத்தித் தருமாறு வேண்டிக்கொண்டு வீடு திரும்பினாள் மீனா.
மறுநாள், புதுக்கோட்டையிலிருந்து மாப்பிள்ளை வீட்டினர் வருவதாக அம்மாவும் அப்பாவும் தெரிவித்தார்கள்.
மாப்பிள்ளையோடு, அவன் குடும்பத்தினர் வந்து உட்கார்ந்தார்கள். பெண்ணுக்கு மாப்பிள்ளையையும், மாப்பிள்ளைக்குப் பெண்ணையும் பிடித்தாகிவிட்டது. அப்போதே பேச்சுவார்த்தையும் தொடங்கிவிட்டது.
“நகை அம்பது பவுன் போட்டாகணும். மாப்பிள்ளைக்கு காரும் வாங்கித் தரணும். கல்யாணச் செலவை பெண் வீடே ஏத்துக்கணும். மாப்பிள்ளைக்கு நான்கு சகோதரிகள். எல்லாரையும் அனுசரிச்சி நடந்துக்கணும்''.
மீனாவின் அப்பா வேதாசலம், “எல்லாம் பண்றோம். ஆனா பொண்ணை கண்கலங்காம வெச்சிப்பீங்கங்கறதுக்கு என்ன உத்தரவாதம்?” என்று கேட்டார்.
“அதை எப்படிச் சொல்லமுடியும். அது உங்க பொண்ணோட சாமர்த்தியம். வாக்கப்பட்டு வர்ற எடத்துல, நாலும்தான் இருக்கும். பார்த்துதான் நடந்துக்கணும்”.
“நீங்க கேட்டதையெல்லாம் செய்ய நாங்க தயாரா இருக்கோம். ஆனா, உத்தரவாதம் கேட்டா சொல்ல முடியாதுங்கறீங்க. நாளைக்கு எங்க பொண்ணு கண்ணீர் சிந்த நேரிட்டா? மாப்பிள்ளை சார் நீங்கதான் இதுக்குப் பதில் சொல்லணும். நாங்க உங்களை நம்பித்தான் பொண்ணை அனுப்பறோம். உங்களுக்காகத்தான் கேட்டதையெல்லாம் செய்யறோம், சொல்லுங்க” என்றார் வேதாசலம்.
மாப்பிள்ளை பேச ஆரம்பித்தார்.
“நான் ரொம்ப ஃப்ராங்கா பேசறேன். உங்க வீட்டுப் பொண்ணு, எங்க வீட்டாளுங்க எல்லாரையும் முதல்ல அனுசரிச்சி நடந்துக்கணும். அதுதான் எனக்கு முக்கியம். என்னோட வாழறதுங்கறது அப்பறம்தான். அவங்க என்னை நம்பறதைவிட, எங்க வீட்டாரைத்தான் நம்பி வரணும்”.
மாப்பிள்ளையின் குரலில் ஆணவம் பின்னணி வாசிப்பதைப் புரிந்துகொண்டாள் மீனா.
ஆனால், பெற்றோருக்கு வேறு வழியில்லை.
“கடவுள் மேல் பாரத்தை போட்டுட்டு தலையாட்டும்மா” என்றார் மீனாவின் அப்பா வேதாசலம்.
மீனாவின் காதுகளில், பெருமாள் கோயிலில் ரகு சொன்ன வார்த்தைகள் இதயத்துக்குள் எதிரொலித்தன.
''…என்னை நம்பி தைரியமா வாங்க மீனா. நான் பொய் சொன்னா, இந்த பெருமாளே என்னைத் தண்டிக்கட்டும்.”
கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு இவர்களை நம்புவதைவிட, பெருமாளையே சாட்சியாக வைத்து ரகுவையே நம்பிடலாம். ஒரு முடிவுக்கு வந்தாள்.
''அப்பா, எனக்கு இந்தச் சம்பந்தம் பிடிக்கல'' என்று மூஞ்சியில அடித்தார்போல் சொல்லிவிட்டு உள்ளே எழுந்து ஓடினாள் மீனா. பின்னாலேயே, ஓட்டமும் நடையுமாகத் தொடர்ந்தாள் அம்மா பார்வதி.
மாப்பிள்ளை வீட்டார், மரியாதையோடு எழுந்து விடைபெற்றுக்கொண்டார்கள்.
மறுநாள், பெருமாள் கோயிலிலில் அவன் வருகைக்காகக் காத்திருந்தாள் மீனா.
அவனைக் காணவில்லை!
தன்னைக் காண்பதற்காகத்தான் இத்தனை நாளும் கோயிலுக்கு வந்திருக்கிறான். அவனும் ஒரு போலிதான் என்று எண்ணிக்கொண்டே கருவறை பிராகாரத்துக்குள் நுழைந்தாள்.
அங்கே, அவன் அர்ச்சனை தட்டை குருக்களிடம் கொடுத்துவிட்டு ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். அவனுக்கு எதிரே போய் நின்று அவன் சொல்வதைக் கேட்டாள்.
“சாமி, என்னை புரிஞ்சிகிட்டு, என்னை நம்பிவர்ற ஒரு நல்ல குடும்பத்துப் பெண்ணா அமைணும்னு எனக்காக வேண்டிக்கிட்டு அர்ச்சனை பண்ணுங்க'' என்றான்.
குருக்கள், தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து வந்து நீட்டியதும், வாங்கிக்கொண்டு நிமிர்ந்து பார்த்த ரகு அதிர்ந்தான்.
புன்னகையோடு மீனா நின்றிருந்தாள்.
இருவரும், தீபாராதனையை ஒருசேர கண்களில் ஒற்றிக்கொண்டார்கள்.
வெளிப்பிராகாரத்துக்கு வந்ததும், அவளிடம் விடைபெறுவதுபோல் விலகிநின்ற ரகு, “உங்கள தொந்தரவு பண்ணதுக்கு மன்னிக்கணும். நீங்கதான் எனக்கு மனைவியா வரணும்னு ஆசைப்பட்டேன். நீங்க பிடிக்கலேன்னு சொன்னதும், அப்பவே உங்களை மறந்துட்டேன். எனக்குதான் குடுத்துவெக்கல. ஆனா உங்களைப்போல ஒரு நல்ல பொண்ணா, அதுவும் என்னை விரும்பற பொண்ணா அமையணும்னுதான் பெருமாள்கிட்ட இப்போ வேண்டிக்கிட்டு அர்ச்சனை பண்ணேன் என்று சொல்லிவிட்டு, அமைதியாக நடந்தான்.
மீனா செருமினாள்.
நின்றான்.
வியப்போடு திரும்பிப் பார்த்தான்.
“இத்தனை நாளும் நீங்க மட்டும் என்னை விரும்பினீங்க. ஆனா நான் உங்களை விரும்ப வேண்டாமா?”
“நீங்க என்ன சொல்றீங்க?”
''உங்களை மாதிரி, என்னை விரும்பற ஒருத்தர்தான் எனக்கு மாப்பிள்ளையா வரணும்னுதான் இத்தனை நாளும் நானும் பெருமாள்கிட்ட வேண்டிக்கிட்டு இருந்தேன். உங்களை சோதிக்கறதுக்காகத்தான் அன்னிக்குப் பொய் சொன்னேன். அந்தப் பொய்தான் உங்களை உண்மையானவர்னு நிரூபிச்சிருக்கு. குடுங்க அந்த அர்ச்சனைக்கூடையை” என்று உரிமையோடு தனது கைகளில் வாங்கிக்கொண்டாள்.
“எனக்கு ஒண்ணுமே புரியலீங்க” என்றான் ரகு.
“அர்ச்சனைக்கூடைய மனைவி சொமக்கறதுதான் அழகு” என்று அருகே சென்றுகொண்டிருந்த ஒரு ஜோடியைக் கண்களால் சுட்டிக்காட்டினாள் மீனா.
அப்படியே சொக்கிப்போனான் ரகு.
இருவரும் விரும்புவதே சமாதி.
***
பெயர்க் காரணம்
வீரியத்தில் இருந்து வருவது வீரம். வஜ்ராசனம் செய்வதால், உடலுக்கு வீரியம் அதிகரிக்கிறது. அத்துடன், வீராசனம் செய்வதால் உள்ளத்தில் வலிமை கூடி, வாழ்க்கையில் வீர உணர்வும் பெருகும். எதற்கும் கலங்காத தன்னம்பிக்கை மிக்கவர்களாக உலா வரலாம்.
செய்முறை
விரிப்பின் மீது மண்டியிட்டு அமர்ந்துகொள்ளவும்.
கைகள் இரண்டையும், இரண்டு கால் மூட்டுகள் மீது வைத்துக்கொள்ளவும்.
முதுகெலும்பு கூனல் போடாமல் இருக்க வேண்டும்.
கண்களை மூடிக்கொள்ளவும்.
இந்த நிலையில், முதலில் நீண்ட நெடுஞ்சுவாசம் எடுக்கவும். பத்மாசனத்தில் இருப்பதுபோல், வயிற்றை உள்ளும் புறமும் அசைத்துச் சுவாசிப்பது நல்லது.
பின்னர் இரண்டு கால்களையும் பக்கவாட்டில் வெளியே எடுத்து, விரிப்பின் மீது வைத்து உட்கார்ந்துகொள்ளவும்.
இரண்டு முழங்கால்களும் ஒன்றுடன் ஒன்று ஒட்டியவாறு இருக்க வேண்டும்.
இரண்டு கைகளையும் முன்பக்கமாக நீட்டவும். விரல்களை ஒன்றோடு ஒன்று பின்னிக்கொள்ளவும்.
அப்படியே சுவாசத்தை உள்ளிழுத்தவாறு, கைகளை விரைப்பாக மேலே உயர்த்தி தலைக்கு மேலே நீட்டியபடி வைத்துக்கொள்ளவும்.
முகத்தை மேலே உயர்த்தி அண்ணாந்து கைகளைப் பார்க்கவும்.
அதே நிலையில் சில சுவாசங்கள் எடுக்கவும்.
பின்னர் கைவிரல்களை விலக்கி, சுவாசத்தை வெளியிட்டவாறு கீழ் நோக்கிக்கொண்டு வந்து விரிப்பின் மீது வைத்துவிடவும்.
கால்கள் வலித்தால், வஜ்ராசனத்தில் இருந்து விலகவும். சிறிது ஓய்வுக்குப் பிறகு, மீண்டும் வீராசனத்தில் அமர்ந்து சுவாசப் பயிற்சி எடுக்கவும்.
பலன்கள்
வஜ்ராசனத்தில் கிடைக்கக்கூடிய அனைத்துப் பலன்கள் இதிலும் கிடைக்கும். ஜீரணம் நன்கு நிகழும். நன்கு பசி எடுக்கும். மூட்டுவலிகள் வராது. அத்துடன், மனத்துக்குத் தைரியம் கிடைக்கும். எதிலும் துணிச்சலும் உற்சாகமும் ஏற்படும். கோழைத்தனமும் பயமும் அகன்றுவிடும். இருளில் வெளியே போவதற்குப் பயப்படுபவர்கள், இவ்வாசனம் செய்த பிறகு துணிச்சலுடன் இருளைத் தேடிச் சென்றுவர முடியும்.
முக்கியக் குறிப்பு
மற்ற ஆசனங்களை, வயிறு காலியாக இருக்கும்போது மட்டுமே செய்ய வேண்டும். ஆனால், இந்த ஆசனத்தை வயிறு காலியாக இருக்கும் போதும் செய்யலாம்; நன்றாகச் சாப்பிட்ட பிறகும் செய்யலாம்.
விருந்துகளில் அதிகம் சாப்பிட நேரிட்டாலும், பலகாரங்கள் சாப்பிட்டிருந்தாலும், இந்த ஆசனத்தில் இருந்தபடி ஐந்து நிமிடங்களுக்குச் சுவாசிக்கவும். வயிறு உடனேயே பசிக்க ஆரம்பிக்கும்.
உடலையும் உள்ளத்தையும் வலுவுடன் மாற்றும் ஒப்பற்ற ஆசனமாகும் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...