ஆசனம் 8. ஊர்த்துவமுக புஜங்காசனம்

பாப்பம்பட்டி பரஞ்ஜோதி, சென்னையில் பெரிய தொழிலதிபர். தொழில் வளர்ச்சியால், பத்து வருடங்களாகத் தன் கிராமத்தை எட்டிக்கூடப் பார்க்க முடியவில்லை.

News image
Updated On :7 நவம்பர் 2015, 5:50 am

கே.எஸ். இளமதி

அஷ்டாங்க யோகம் - நியமம்

ரெட்டை மாடுகள்

பாப்பம்பட்டி பரஞ்ஜோதி, சென்னையில் பெரிய தொழிலதிபர். தொழில் வளர்ச்சியால், பத்து வருடங்களாகத் தன் கிராமத்தை எட்டிக்கூடப் பார்க்க முடியவில்லை.

குலதெய்வத்தைக் காரணம் காட்டி மகன் கார்த்திக், மகள் பூஜா, மனைவி மஞ்சுளாவோடு நவீன காரில் சொந்த ஊருக்குப் போய்க்கொண்டிருந்தார் பரஞ்ஜோதி.

ஜில்லிட்ட கிராமத்துக் காலைக் காற்றை ஆசையோடு நுகர்ந்தபடி கண்ணாடிகளை இறக்கிவிட்டார்.

சைச்கிள் ஓட்டிய வரப்பு மேடு, மீன் பிடித்த குட்டை, நீச்சல் அடித்த கிணறு, கல் அடித்த நாவல் மரம் என்று அனைத்தையும் பிள்ளைகளுக்குச் சுட்டிக்காட்டிக்கொண்டே வந்தார்.

அவர்களோ, அவற்றைக் கொஞ்சமும் காதில் வாங்கிக்கொள்ளாமல் ‘ஆண்ட்ராய்டு’களில் மூழ்கியிருந்தார்கள்.

அப்பாவோட ஊரைப் பத்தி ஆசையோட சொல்லிட்டுவர்றேன். நிமிர்ந்துகூடப் பார்க்கமாட்றீங்களே என்றார் துக்கத்தோடு.

அப்பா, இது உங்க ஊரு, நீங்களே பாருங்கப்பா. யாராவது தடுத்தோமா. எங்களை ஏன் பார்க்கச் சொல்றிங்க? என்றபடியே மொபைலையே நோண்டிக்கொண்டிருந்தார்கள்.

அவமானத்தால், உடலும் உள்ளமும் ஒருசேரக் கசந்துபோனார் பரஞ்ஜோதி.

ஆறுதலுக்காக மனைவியை ஓரக்கண்ணால் பார்த்தார்.

கட்சிக் கொடிபோல, முந்தானை படபடக்க வாய் பிளந்து உறங்கிக்கொண்டிருந்தாள் மஞ்சுளா.

திடீரென்று கார் ஓரிடத்தில் மெதுவாகச் சென்றது. டிரைவர் கியரை மாற்றி ரெய்ஸ் செய்தார்.

‘ராமர் மேடு’ன்னு பேருப்பா. இது ரொம்ப உயரமா இருக்கும். அந்தக் காலத்துலயே வண்டிகள் ஏற படாத பாடுபடும். ஃபர்ஸ்ட் கியரை மாத்தி நல்லா ரெய்ஸ் பண்ணி ஓட்டுப்பா என்றார் பரஞ்ஜோதி.

‘சடார் சடார்’ என்ற சத்தம் கேட்டு, மனைவியும் பிள்ளைகளும் நிமிர்ந்தார்கள்.

மூட்டைகள் அடுக்கிய மாட்டு வண்டி ஒன்று பக்கத்தில் மேடு ஏறிக்கொண்டிருந்தது.

வண்டிக்காரன், மாடுகளின் பின்புறத்தை சாட்டையைத் திருப்பி குறுத்தாணியால் குத்திக்கொண்டிருந்தான். மிதமிஞ்சிய பாரம். மாடுகள் இழுக்கமுடியாமல் சிரமப்பட்டன. மீண்டும் சாட்டையைத் திருப்பி, ‘சடார் சடார்’ என்று இரக்கமில்லாமல் விலாசினான்.

மாடுகள் அடிதாளாமல், வாயில் நுரை தள்ள, நரம்புகள் புடைக்க வண்டியை கஷ்டப்பட்டு இழுத்துக்கொண்டிருந்தன.

சாட்டையடிகளின் வீச்சைப் பார்த்து, பரஞ்ஜோதியின் மகன் கார்த்திக் கொதித்தான்.

என்னப்பா, மாடுகளைப் போட்டுக் கன்னாபின்னான்னு அடிக்கிறான். நீங்க வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்களே. வண்டிக்காரனை அதுபோல அடிச்சா தாங்குவானா. நான் போய் கேக்கறேன் என்றவாறு காரின் கதவைத் திறந்தான்.

அவன் கதவைத் திறப்பதற்குள் அவன் முதுகில் ஓங்கி ஒரு அடி போட்டார் பரஞ்ஜோதி!

யாரும் எதிர்பார்க்கவில்லை!

அண்ணாவை எதுக்குப்பா அடிச்சீங்க. உங்க ஊரைப் பார்க்கலேங்கற ஆத்திரமா என்று சீரிய மகள் பூஜாவின் முதுகிலும் ஓங்கி ஒரு அடி போட்டார்.

உங்களுக்கு என்னாச்சு. தோளுக்கு வளர்ந்த பிள்ளைகளை இப்படி அடிக்கிறீங்களே. அவங்க இந்த ஊருக்கு வர்றதே பெரிசு. அவங்க மேல அப்படி என்ன வெறுப்பு? என்றவாறு பிள்ளைகளை அரவணைத்தான் மஞ்சுளா.

மேடு ஏறியதும் காரை ஓரங்கட்டி, ‘என்னங்கய்யா, திடீர்னு பிள்ளைகளைப் போட்டு அடிச்சிட்டீங்களே?’ என்றார் டிரைவர்.

கண்ணீரோடு காரை விட்டு இறங்கிய பிள்ளைகள், ‘அம்மா நாங்க இப்படியே ஊருக்குப் போறோம். எங்களுக்கு இந்த ஊரைப் பாக்கவே பிடிக்கல என்று கோவம் ப்ளஸ் கடுப்புடன் சொன்னார்கள்.

பரஞ்ஜோநியும் இறங்கி, கண்களை மூடியபடி கார் மீது சாய்ந்துகொண்டார்.

சொல்லுங்க, பிள்ளைங்கள எதுக்கு தேவையில்லாம அடிச்சீங்க என்றாள் மஞ்சுளா.

முன்பின் தெரியாத வண்டிக்காரனை அடிக்கப்போனானே உன் புள்ள. அது நியாயமா?

அவன் காரணத்தோடதானே அடிக்கப்போனான். நீங்க அடிச்சதுக்கு காரணம் சொல்லுங்க.

உன் புள்ள என்ன பண்ணான். மாடுகளை வண்டிக்காரன் கொடுமைப்படுத்தறான்னுதானே கோவப்பட்டு இறங்கப்போனான்.

ஆமாம்.

அந்த மாடுங்க மாதிரிதான்டி நம்மோட கண்ணுங்களும். மாட்டுக்காரன் மாதிரி, இவங்களும் கண்களை ரொம்ப நேரமா போன் மேல வெச்சி கொடுமைப்படுத்திக்கிட்டே வந்தாங்களே, நீ அதைக் கவனிக்கலையா? வண்டிக்காரனை அடிக்க முடியாது. அதனாலதான், அவனை அடிக்கிறதா நெனச்சி, புள்ளைங்கள அடிச்சேன். அது தப்பா? என்றார் பரஞ்ஜோதி.

மஞ்சுளாவும் பிள்ளைகளும் ஒருமாதிரியாகிவிட்டார்கள்.

வண்டிக்காரன், பாரத்தை எறக்கின உடனே, மாடுகளை சுதந்தரமா அவுத்து விட்டுடுவான். அந்த மாதிரி கண்களுக்கும் கொஞ்சம் ஓய்வு குடுக்கனுன்னுதானே சொன்னேன். பசுமையான இந்தக் கிராமத்தைப் பார்க்கறது கண்ணுக்குக் குளிர்ச்சியில்லையா?

கார்த்திக்கும் பூஜாவும் ஒருவரை ஒருவர் குற்ற உணர்ச்சியோடு பார்த்துக்கொண்டார்கள்.

காஸ்ட்லி போன்தான். அதுக்காக எப்பவுமே அதைப் பார்த்துக்கிட்டே இருக்கனுமா. வேணான்னு சொல்லல. தேவையோடு பாருங்க. கண்களை வீணா கஷ்டப்படுத்திக்காதீங்கன்னுதான் சொல்றேன். உங்களுக்கு நான் சொன்னது பிடிக்கலேன்னா சொல்லுங்க. இப்படியே சென்னைக்கு திரும்பிப் போயிடுங்க. நான் நடந்தே எங்க ஊருக்கு போறேன் என்றபடி நடந்தார் பரஞ்சோதி.

பிள்ளைகளும் மனைவியும் தங்கள் தவறை உணர்ந்து, பரஞ்ஜோதியின் கையைப் பிடித்து காருக்கு அழைத்தார்கள். பிள்ளைகள் இருவரும் போனை தூக்கி டாஷ்போர்டுக்குள் வீசினார்கள்.

காருக்குள் இப்போது இனிய காலை கிராமத்துக் காற்று வீசியது.

வழியில் ஒரு கிராமம். அங்கே, மேடு ஏறக் கஷ்டப்பட்ட மாடுகள் சுதந்தரமாக மேய்ந்துகொண்டிருந்தன. வண்டிக்காரன், வண்டியில் இருந்து மூட்டைகளை இறக்கிக்கொண்டிருந்தான்.

அனைவரது முகத்திலும் காலை வெயில் சிரித்தது!

எதையும் முறையோடு செய்ய வேண்டும் என்பதே நியமம்.

ஆசனம் 8

ஊர்த்துவமுக புஜங்காசனம்

ஊர்த்துவ என்றால் கூடுதலான என்று பொருள் ஆகும். புஜங்காசனத்தின் கூடுதல் முயற்சியே ஊர்த்துவமுக புஜங்காசனம். கடந்த வாரம் புஜங்காசனம் பார்த்தோம். அதன் கூடுதல் ஆசனமே ஊர்த்துவமுக புஜங்காசனம் ஆகும்.

Story image
Story image

செய்முறை

குப்புறப் படுத்த நிலையில், இரண்டு உள்ளங்கைகளையும் நெற்றிக்கு இணையாகப் பக்கவாட்டில் வைத்து நெற்றியை விரிப்பின் படியுமாறு வைத்துக்கொள்ளவும்.

சுவாசத்தை உள்ளிழுத்தவாறு முகத்தை உயர்த்திக்கொண்டே நிமிரவும். அடிவயிறு வரை முடிந்த அளவு உயர்த்தி நிறுத்தவும்.

கைகளால் உடலைத் தாங்கி நிற்கவும்.

முழங்கைகள் விரைப்பாக உடலைத் தாங்கி நிற்க வேண்டும்.

முகம், ஆகாயத்தைப் பார்த்தபடி இருக்க வேண்டும்.

கழுத்திலிருந்து வயிற்றுத் தசைகள் வரை அனைத்தும் இழுத்துப் பிடித்தது போன்ற உணர்வைப் பெற்றிருக்க வேண்டும்.

ஆறு முறை ஆழ்ந்து சுவாசிக்கவும்.

பிறகு மெதுவாக தலையைத் தாழ்த்தியவாறு அடிவயிறு, பிறகு வயிறு, பிறகு மார்பு என்று இறக்கிக்கொண்டே வந்து, இறுதியாக நெற்றியை விரிப்பின் மீது வைத்து படியச் செய்து ஆரம்பநிலைக்கு வரவும்.

இதே ஆசனத்தை மூன்று முறை செய்யவும்.

பலன்கள்

இந்த ஆசனத்தால் முதுகுத் தண்டுவடப் பகுதிக்குப் பயிற்சி கிடைக்கிறது. மேல் முதுகு, நடு முதுகு, கீழ் முதுகு என்று மூன்று வகைப் பகுதிகளுமே இலகுவாகின்றன.

டிஸ்க்குகளில் எண்ணெய்ப்பசை சுரக்கப் பெற்று, தேய்மானம் தவிர்க்கப்படுகிறது.

மார்பு எலும்புகள் மிக நன்றாக விரிவாக்கம் பெறுவதால், அபரிமிதமான காற்றை உள்ளிழுக்க முடிகிறது.

தலைப் பகுதியிலிருந்து கால் பகுதிக்கு நல்ல ரத்த ஓட்டமும் கிடைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.