

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு, ஐஏஎஸ் (IAS), ஐபிஎஸ் (IPS) மற்றும் ஐஎஃப்எஸ் (IFS) போன்ற உயரிய பதவிகளுக்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க மூன்று நிலைகளாக நடத்தப்படுகிறது.
இந்த தேர்வில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகள் உள்ளன. இந்த மூன்று நிலைகளிலும் தேர்வர்கள் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.
முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination)
முதல்நிலைத் தேர்வு ஒரு கொள்குறி வகை (Objective type) தகுதித் தேர்வு. இதில் எடுக்கும் மதிப்பெண்கள் இறுதித் தரவரிசைப் பட்டியலுக்கு எடுத்துக்கொள்ளப்படாது. முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு (GS) தாள் மற்றும் சிசாட் (CSAT) என இரண்டு தாள்கள் உள்ளன.
தாள் I (GS)
பொது அறிவுத் தாளில் வரலாறு, புவியியல், அரசியல், பொருளாதாரம் மற்றும் நடப்பு நிகழ்வுகள் சார்ந்த 100 வினாக்கள் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் இரண்டு மதிப்பெண்கள் வழங்கப்படும். மொத்தம் 200 மதிப்பெண்கள். எதிர்மறை மதிப்பெண்களும் இருக்கின்றன. ஒவ்வொரு தவறான விடைக்கும் மூன்றில் ஒரு பங்கு மதிப்பெண் குறைக்கப்படும். அதாவது, 0.66 மதிப்பெண் குறைக்கப்படும்.
தாள் II (CSAT)
இது ஒரு தகுதித் தேர்வு மட்டுமே. இதில் குறைந்தபட்சம் 33 சதவிகித மதிப்பெண்கள் (66 மதிப்பெண்கள்) எடுத்தால் போதுமானது. இந்த தாளில் தேர்வர்களின் புரிந்துகொள்ளும் திறன், தொடர்புத் திறன், தர்க்க ரீதியிலான பகுப்பாய்வு மற்றும் பகுப்பாய்வு திறன், முடிவெடுத்தல் மற்றும் சிக்கலை தீர்த்தல், பொதுவான மனத்திறன் மற்றும் அடிப்படை எண்கணிதம் பற்றிய கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.
பொது அறிவுத் தாளினைப் போன்றே இந்த தாளிலும் எதிர்மறை மதிப்பெண்கள் உள்ளன. ஒவ்வொரு தவறான பதிலுக்கும் மூன்றில் ஒரு பங்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும். அதாவது, 0.83 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
முதன்மைத் தேர்வு (Main Examination)
முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்த விரிவான விடையளிக்கும் (Descriptive type) முதன்மைத் தேர்வை எழுதலாம். இதில் மொத்தம் 9 தாள்கள் உள்ளன. தாள் A (இந்திய மொழி) மற்றும் தாள் B (ஆங்கிலம்) என இரண்டு தகுதித் தாள்கள் உள்ளன.
இவை ஒவ்வொன்றும் 300 மதிப்பெண்களுக்கான தாள்கள். இதில் குறைந்தபட்சம் 25 சதவிகிதம் மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே மற்ற தாள்கள் திருத்தப்படும். இந்த இரண்டு தாள்களில் பெறும் மதிப்பெண்கள் இறுதி தரவரிசைப் பட்டியலுக்கு எடுத்துக் கொள்ளப்படாது.
தகுதித் தாள்களுக்குப் பிறகு தரவரிசைக்கு எடுத்துக் கொள்ளப்படும் 7 தாள்களை தேர்வர்கள் எழுத வேண்டியிருக்கும். இந்த தாள்களில் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் இறுதி தரவரிசைப் பட்டியலுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
தாள் I: கட்டுரை (Essay)
தாள் II–V: பொது அறிவு (GS I, II, III, மற்றும் IV)
தாள் VI–VII: விருப்பப் பாடம் (Optional Subject - தாள் 1 மற்றும் 2).
ஆளுமைத் தேர்வு / நேர்முகத் தேர்வு (Personality Test)
நேர்முகத் தேர்வு யுபிஎஸ்சி தேர்வின் இறுதி நிலையாகும். ஒரு நிர்வாகப் பணிக்குத் தேவையான ஆளுமை, மன உறுதி மற்றும் தெளிவான சிந்தனை ஆகியவற்றை தேர்வர்கள் பெற்றிருக்கிறார்களா மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுவினர் மதிப்பீடு செய்வார்கள். 275 மதிப்பெண்களுக்கு நடைபெறும் இந்த நேர்முகத் தேர்வு புது தில்லியில் உள்ள யுபிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும்.
முதன்மைத் தேர்வின் மதிப்பெண்கள் (1750) மற்றும் நேர்முகத் தேர்வின் மதிப்பெண்கள் (275) என மொத்தம் 2025 மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதித் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.