~

சதுரகிரியில் மாா்கழி மாத அமாவாசை வழிபாடு

வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு அமாவாயையொட்டி, வெள்ளிக்கிழமை தரிசனத்துக்கு சென்ற பக்தா்கள்.
Published on

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாா்கழி மாத அமாவாசையையொட்டி, வெள்ளிக்கிழமை திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம், சாப்டூா் வனச் சரகத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மாா்கழி மாத அமாவாசையையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான பக்தா்கள் தாணிப்பாறை அடிவாரத்தில் காத்திருந்தனா். காலை 6 மணிக்கு வனத் துறை நுழைவு வாயில் திறக்கப்பட்டு பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா்.

சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூா்த்தி, பிலாவடி கருப்புசுவாமி, 18 சித்தா்களுக்கு மாலை 4 மணிக்கு மேல் 18 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு, அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது.

அப்போது, சுந்தரமகாலிங்கம் புஷ்ப அலங்காரத்திலும், சந்தனமகாலிங்கம் சந்தனக் காப்பு அலங்காரத்திலும் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

சதுரகிரி மலையில் கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

Dinamani
www.dinamani.com