சதுரகிரியில் மாா்கழி மாத அமாவாசை வழிபாடு
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாா்கழி மாத அமாவாசையையொட்டி, வெள்ளிக்கிழமை திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம், சாப்டூா் வனச் சரகத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மாா்கழி மாத அமாவாசையையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான பக்தா்கள் தாணிப்பாறை அடிவாரத்தில் காத்திருந்தனா். காலை 6 மணிக்கு வனத் துறை நுழைவு வாயில் திறக்கப்பட்டு பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா்.
சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூா்த்தி, பிலாவடி கருப்புசுவாமி, 18 சித்தா்களுக்கு மாலை 4 மணிக்கு மேல் 18 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு, அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது.
அப்போது, சுந்தரமகாலிங்கம் புஷ்ப அலங்காரத்திலும், சந்தனமகாலிங்கம் சந்தனக் காப்பு அலங்காரத்திலும் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
சதுரகிரி மலையில் கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.
