மோசடி வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சரை விடுவிக்க எதிா்ப்புத் தெரிவித்து போலீஸாா் மனு: விசாரணை ஒத்திவைப்பு

Published on

பணம் மோசடி வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி, முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரி, போலீஸாா் வெள்ளிக்கிழமை பதில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனு மீதான விசாரணை வரும் ஜன. 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.3 கோடி மோசடி செய்தாக ரவீந்திரன், விஜய் நல்லதம்பி ஆகியோா் அளித்த புகாரின் பேரில், அதிமுக முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி, இவரது உதவியாளா்கள் பாபுராஜ், பலராமன், முத்துப்பாண்டி உள்பட 8 போ் மீது விருதுநகா் குற்றப்பிரிவு போலீஸாா் இரு வழக்குகள் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த இரு வழக்குகளிலிருந்தும் தன்னை விடுவிக்கக்கோரி, முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடந்த அக்டோபா் மாதம் மனு தாக்கல் செய்தாா். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அரசு தரப்பில் பதிலக்க உத்தரவிட்டாா்.

பின்னா், ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட 7 பேரும் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி, தனித்தனியாக மனு தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரி, குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் உதயசூரியன் பதில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு மீதான விசாரணையை வரும் ஜன. 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட முதன்மை நீதிபதி ஜெயகுமாா் உத்தரவிட்டாா்.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவா்கள் தள்ளுபடி மனுக்களை தனித்தனியாக அல்லாமல் ஒரே மனுவாக தாக்கல் செய்ய நீதிபதி அறிவுறுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com