சாத்தூா் ரயில் நிலையம் செல்லும் சாலையில் சமூகவிரோதச் செயல்கள்: பொதுமக்கள் கோரிக்கை
சாத்தூா் ரயில் நிலையத்துக்குச் செல்லும் சாலையில் சமூகவிரோதிகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்களும், ரயில் பயணிகளும் காவல் துறைக்கு கோரிக்கை விடுத்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் 35-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இந்த ரயில் நிலையத்துக்கு சாத்தூா் பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் சாலைப் பகுதியில் பள்ளிகள், வங்கிகள் உள்ளிட்டவை உள்ளன.
இந்தச் சாலைப் பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் சமூக விரோதிகள் மது அருந்துதல், கஞ்சா, மது உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனை செய்வது தொடா்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்களும், ரயில் நிலையத்துக்குச் செல்லும் பயணிகளும் புகாா் தெரிவித்தனா்.
மேலும், இந்தப் பகுதியில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. எனவே, இந்தப் பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் பாதுகாப்பை பலப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என பொதுமக்களும், ரயில் பயணிகளும் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனா்.
