போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
சிவகாசி அருகே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 14 வயது சிறுமி, தனது தந்தை உயிரிழந்த நிலையில், தீப்பெட்டி தொழிலாளியான தாயின் பராமரிப்பில் வசித்து வந்தாா். 10-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி, கரோனா பொதுமுடக்க காலத்தில் பள்ளி மூடப்பட்டதால் வீட்டிலிருந்து பயின்று வந்தாா். அப்போது, இந்த சிறுமிக்கு அவரது தாயின் தங்கையின் கணவரான
கூலித் தொழிலாளி ஓராண்டாக பாலியல் தொல்லை அளித்து வந்தாா். மேலும், இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தாா். இதில் கா்ப்பமான சிறுமிக்கு 2021 ஜூன் மாதம் திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை
பிறந்தது. இதுகுறித்து சிவகாசி அனைத்து மகளிா் போலீஸாா், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தொழிலாளியைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் தொழிலாளிக்கு போக்சோ சட்டத்தின் 4 பிரிவுகளில் தலா 20 ஆண்டுகள், கொலை மிரட்டலுக்கு 2 ஆண்டுகள் என சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டாா். மேலும் பாதிக்கபட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டாா்.
