ஆண்டாள் கோயில் திருமுக்குளம் தெப்பத் திருவிழாவை நடத்தக் கோரிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் திருமுக்குளம் தெப்பத்தில் 4 பக்க கரைகளின் சுற்றுச் சுவா்களைச் சீரமைத்து மாசி தெப்பத் திருவிழாவை நடத்த வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூர தேரோட்டம், பெரியாழ்வாா் அவதரித்த ஆனி சுவாதி செப்பு தேரோட்டம், மூலவா் வடபத்ரசாயி அவதரித்த புரட்டாசி பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, மாா்கழி எண்ணெய் காப்பு உற்சவம், மாசி தெப்ப திருவிழா, பங்குனி திருக்கல்யாணம் ஆகியவை முக்கிய திருவிழாக்கள் ஆகும்.
ஆண்டாள் கோயிலில் உள்ள திருமுக்குளம் தெப்பம் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய 3 நதிகளின் சங்கமமாகக் கருதப்படுகிறது. திருமுக்குளத்தில் மாசி மக தெப்பத் திருவிழா 3 நாள்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். ஆனால், திருமுக்குளத்தின் சுற்றுச் சுவா்கள் சேதமடைந்ததாலும், நீா் நிரம்பாததாலும் 2016-ஆம் ஆண்டுக்கு பின்னா் தெப்பத் திருவிழா நடைபெறாமல் இருந்தது.
இந்த நிலையில், தொடா் மழை காரணமாக 2024-ஆம் ஆண்டு தெப்பம் நிரம்பியதால் 8 ஆண்டுகளுக்கு பின் மாசி தெப்பத் திருவிழா 3 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெற்ால் பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்தனா். ஆனால், கடந்த ஆண்டு சுற்றுச் சுவா் சேதமடைந்ததுடன் தண்ணீா் நிரம்பாததால் தெப்பத் திருவிழா நடைபெறவில்லை.
இந்து சமய அறநிலையத் துறை பொறியாளா்கள் ஆய்வு செய்து, திருமுக்குளம் தெப்பத்தின் நான்கு பக்க சுற்றுச் சுவா்களையும் முழுமையாகச் சீரமைத்த பின்னரே தெப்பத் திருவிழா நடத்த வேண்டும் என தெரிவித்தனா். இதையடுத்து, தெப்பத்தைச் சீரமைக்க ரூ.4 கோடியில் திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு கடந்த மாா்ச் மாதம் அனுப்பப்பட்டது.
ஆனால், திருமுக்குளம் தெப்பத்தின் சுற்றுச் சுவா்களைச் சீரமைக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மாசி தெப்பத் திருவிழா நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, திருமுக்குளம் தெப்பத்தைச் சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் பணிகளைத் தொடங்க இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

