முரண்சுவை: மே தினத்தை முதன்முதலாகக் கொண்டாடியவர்!
மயிலாப்பூர் வெங்கடாச்சலம் சிங்காரவேலு என்பதன் சுருக்கமே ம.வெ.சிங்காரவேலு என்பதாகும். திராவிட இயக்கத்துடனும், தொழிலாளர் இயக்கத்துடனும், கம்யூனிஸ்டு இயக்கத்திலும் சிங்காரவேலுவின் வாழ்வும், சிந்தனையும்,


மயிலாப்பூர் வெங்கடாச்சலம் சிங்காரவேலு என்பதன் சுருக்கமே ம.வெ.சிங்காரவேலு என்பதாகும். திராவிட இயக்கத்துடனும், தொழிலாளர் இயக்கத்துடனும், கம்யூனிஸ்டு இயக்கத்திலும் சிங்காரவேலுவின் வாழ்வும், சிந்தனையும், செயலும் கலந்து விட்ட ஒன்றாகும்.
சென்னையில் தொழிற்சங்கத்தை முதன்முதலில் தோற்றுவித்தவர் சிங்காரவேலு. இதன் மூலம் பிரிட்டிஷ்காரர்களுக்கு கிலியை ஏற்படுத்தினார். இவர் சென்னையில் உள்ள நடுத்தர மீனவர் குடும்பத்தில் 1860-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ம் தேதி பிறந்தார். இவர்தான் இவரது வீட்டில் கடைசிக் குழந்தை. இவரது முன்னோர்கள் பர்மா வரையில் கட்டுமரத்தில் சென்று வியாபாரம் செய்த வீரம் நிறைந்த பரம்பரையில் வந்தவர்கள். 1860, 70-களில் பிற்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் படிப்பது என்பது மிகவும் அரிதானதாக இருந்தது. சிங்காரவேலு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இந்து உயர்நிலைப்பள்ளியில் படிப்பை முடித்தார். 1890-ஆம் ஆண்டில் சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார். பிறகு சட்டப் படிப்பு படித்து முடித்து, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக தம்மை 1907-ல் பதிவு செய்து கொண்டார்.
ஐரோப்பிய சிந்தனையாளர்களின் படைப்புகளில் அதிகமாகவே ஈடுபாடு கொண்டிருந்தார். அரசியல், பொருளாதார விடுதலையை முன்வைத்து, சென்னை நகரில் 27-4-1918 இல் "சென்னை தொழிலாளர் சங்கம்' என்ற பெரிய தொழிற்சங்கம் தொடங்கப்பட்டது. இதுதான் இந்தியாவிலேயே முதன் முதலில் தொடங்கப்பட்ட தொழிற்சங்கம்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது கொஞ்சம்கூட ஈவு இரக்கமில்லாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. நீதிமன்றத்தைப் புறக்கணிப்பது என்ற தீர்மானத்தில் தனது வழக்கறிஞர் அங்கியை அந்தக் கூட்டத்திலேயே தீயிட்டு கொளுத்தினார். அதற்கு பிறகு அந்தப் பட்டத்தையோ அங்கியையோ மீண்டும் அணியவில்லை. எல்லோரும் பயந்து கொண்டிருந்த காலத்தில், தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று பகிரங்கமாக வெளிப்படுத்திக் காட்டியவர் சிங்காரவேலு. 1923-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி மே தின விழாவை தொழிலாளர் தினமாக இந்தியாவிலேயே முதன் முதலில் கொண்டாடியதும் சிங்காரவேலுதான்.
சென்னையில் இருந்த பர்மாஷெல் எண்ணெய் தொழிலாளர்களின் தொழிற்சங்கத் தலைவராக சிங்காரவேலு இருந்தார். ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தும்பொழுது, தொழிலாளிகள் வாலாட்டக்கூடாது. ஏனென்றால் எண்ணெய் தீப்பற்றக் கூடியது என்று அதிகாரிகள் எச்சரித்தனர். அதைக் கேட்ட சிங்காரவேலு தொழிலாளர்கள் உணர்வுகளும் எளிதில் தீப்பற்றக் கூடியது. எனவே தொழிலாளிகளுடன் விளையாட வேண்டாம் என்று எச்சரிக்கை செய்தார்.
தொழிலாளர்களின் உணர்வுகளை ஒன்று திரட்டுவதற்கு சிங்காரவேலு இரவு பகல் பாராது பாடுபட்டார். 1928 ஜூலை 19-ம் தேதி, ரயில்வே தொழிலாளிகள் பொதுவேலை நிறுத்தத்தில் இறங்கினர். 1931-ம் ஆண்டில் சிங்காரவேலுவை அவரது வீட்டில் பெரியார் சந்தித்துப் பேசினார். நம்முடைய கொள்கை கோட்பாடுகளுக்கு சிங்காரவேலு சரியான நபர் என்று கணக்கிட்டார். இவர் ரஷ்யன், ஜெர்மன், பிரஞ்சு, சமஸ்கிருதம் போன்ற பல மொழிகளில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார்.
பெரியாரின் வேண்டுகோளை ஏற்று குடிஅரசு, புரட்சி, பகுத்தறிவு பத்திரிகைகளில் விஞ்ஞானரீதியான கட்டுரைகளைச் சிங்காரவேலு எழுதினார். இந்தக் கட்டுரைகள் அனைத்து மக்களையும் பெரிதும் கவர்ந்தன. சிங்காரவேலுவின் தொடர்பால் பெரியார் முழுக்க முழுக்க பொதுவுடைமைக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யத் தொடங்கினார்.
சிங்காரவேலுவுக்கும் பாரதியாருக்கும் ஏற்பட்ட உறவு தத்துவார்த்தரீதியில் அமைந்தது. "ஜகத்தினை அழித்திடுவோம்' என்று பாரதியார் பாடியதற்கும் பொதுவுடைமை என்ற சொல்லை முழுக்க முழுக்க பயன்படுத்தியதற்கும் சிங்காரவேலுவின் தொடர்பே காரணம். பாரதியை மக்கள் கவிஞராக அறிமுகம் செய்த பெருமை சிங்காரவேலுவையே சாரும்.
1918-க்கும் 1920-க்கும் இடைபட்ட காலத்தில் போலீஸ்காரர்களுக்கு சங்கம் என்று ஒன்று அவரது முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது. தொழிற்சங்கத் தலைவர்களாகிய திரு.வி.க, சர்க்கரைச் செட்டியார் இருவரும் அரசாங்கம் எடுக்கும் ரகசிய முயற்சிகளைக் காவலர்கள் மூலம் தெரிந்து கொண்டார்கள். அந்த அளவிற்குத் தொழிலாளர் சங்கங்களுக்கும் காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் நெருங்கிய உறவு இருந்தது.
1937-38 காலகட்டங்களில் ஜனசக்தி பத்திரிகையில் சிங்காரவேலு எழுதிய பாசிச, நாசிச எதிர்ப்புக் கட்டுரைகள் இன்றைக்கும் பயன்படுவனவாகும். தனது முதுமைக் காலத்திலும் சிங்காரவேலு சுறுசுறுப்பாகச் செயல்பட்டார்.
தென்னிந்தியாவில் குறிப்பிடத்தக்க நூலகங்களில் ஒன்றாக சிங்காரவேலுவின் நூலகம் இருந்தது. இவரது நூலகத்தில் 10 ஆயிரம் புத்தகங்கள் இருந்தன. தனக்குப் பிறகு அனைத்து நூல்களும் பொதுவுடைமை இயக்கத்துக்குரியவை என உயில் எழுதி வைத்தார். 85 வயதிலும் சிங்காரவேலு சுறுசுறுப்பாகச் செயல்பட்டார். சிங்காரவேலு உடல் நலம் குன்றியதால், 1946 ஆம் ஆண்டு பிரப்ரவரி 11-ம் தேதி இயற்கை எய்தினார்.
அந்நாளில் அன்னியப் பொருள்களைத் தொடுவதில்லை, சுதேசிப் பொருள்களை மட்டுமே பயன்படுத்துவேன் என்று பிடிவாதமாக இருந்தார். குளிப்பதற்கும் சாதாரண சீயக்காய்த்தூள், துணிகள் துவைப்பதற்கு நாட்டு சோப்பு இவற்றையே பயன்படுத்தினார். தன் வீட்டிலிருந்து உயர்நீதிமன்றம் வரையிலும் தெற்குப் பீச் ரோடு வரையிலும் நடந்து செல்வது அவருக்குப் பிடித்தமான உடற்பயிற்சியாகும். வெளிநாட்டுப் பொருள்களை உபயோகிக்க வசதியும், வாய்ப்பும் இருந்தும் இந்திய பொருள்களையே உபயோகித்தார்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...