முரண்சுவை: மனித நேயப் போராளி திரு.வி.க.!
தமிழ்க் கடல், தமிழ்த் தென்றல் என்றெல்லாம் போற்றப்பட்டார் திரு.வி.க. திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் என்பது அவரது முழுப்பெயர். தூய கதராடை, கழுத்தைச் சுற்றிலும் ஒரு நீண்ட போர்வை, நெற்றியில் சிறிய பொட்டு


தமிழ்க் கடல், தமிழ்த் தென்றல் என்றெல்லாம் போற்றப்பட்டார் திரு.வி.க.
திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் என்பது அவரது முழுப்பெயர். தூய கதராடை, கழுத்தைச் சுற்றிலும் ஒரு நீண்ட போர்வை, நெற்றியில் சிறிய பொட்டு, உச்சியில் சிறிய குடுமி, பார்ப்பதற்கு மத குருமார்கள் போலக் காட்சியளிப்பார். இவர் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள துள்ளம் என்கிற கிராமத்தில் வே.விருதாசல முதலியார் என்பவருக்கும் சின்னம்மாள் என்பவருக்கும் 26-8-1883- ஞாயிற்றுக்கிழமை அன்று 6-வது பிள்ளையாகப் பிறந்தார். அவரது மூதாதையர் திருவாரூரைச் சேர்ந்தவர்கள். எனவே தன்னுடைய பெயருக்கு முன்னால் "திரு' என்று சேர்த்துக் கொண்டார்.
திரு.வி.க-வின் பெற்றோர்கள் துள்ளம் கிராமத்தில் மிகவும் எளிய வாழ்க்கை நடத்தினார்கள். ஓலை போட்ட குடிசை வீடு. அதில் பாம்பும், தேளும் நடமாடும். அப்படித்தான் இவரது ஆரம்பகால வாழ்க்கை துவங்கியது. வீட்டிற்கு முன்பு ஒரு சிறிய கடை வைத்து, அதில் வியாபாரம் நடத்தினார்கள். பிள்ளைகளின் கல்வி வசதிக்காக இவரது குடும்பம் 1890 ஆம் ஆண்டு துள்ளம் ஊரைவிட்டு சென்னை இராயப்பேட்டையில் குடியேறியது. குடும்ப சூழ்நிலையால் இவரால் வெஸ்லி கல்லூரியில் மேற்கொண்டு படிக்கமுடியவில்லை. சில தினங்களில் தந்தையார் மறைந்துவிட்டார்.
ஏழ்மையை எந்தப் பெண் விரும்புகிறாளோ, அவளே
எனக்குரிய மனைவி என்றார். அதன்படி திருச்சி கிருஷ்ணசாமி முதலியாரின் புதல்வி கமலாம்பிகைக்கும், திரு.வி.க-வுக்கும் 13-9-1912-ல் திருமணம் நடைபெற்றது. திரு.வி.க-வும் அவரது மனைவியும் அன்பான வாழ்க்கை நடத்தினர். அவர்களுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளும் அகால மரணம் அடைந்தன. இது இவர்களுக்கு மாபெரும் சோகத்தைத் தந்தது. இதன் காரணமாக திரு.வி.க. துறவு நிலையை மேற்கொண்டார்.
பிராமணரல்லாதோரை காங்கிரசுக்குள் ஈர்க்க தனிச்சங்கமாக சென்னை மாகாண சங்கம் நிறுவப்பட்டது. தென்னாடு முழுவதும் இதன் பிரசாரம் பரவியது. இது அன்றைக்கு இருந்த நீதிக்கட்சிக்குப் பேரிடியாயிற்று. தேசிய இயக்கத்துக்கு ஆதரவான இந்தப் போராட்டத்தில் திரு.வி.க மகத்தான பங்கு வகித்தார். இவரது மனைவி கமலாம்பிகை நோய்வாய்பட்டு 18-9-1918-ல் காலமானார். மனைவி இறந்த அன்று திரு.வி.க. ஆற்றிய இறுதி உரை நெஞ்சுருக வைத்தது. பெண் விடுதலைக்குப் பாடுபடுவேன் என்று உறுதி பூண்டார்.
திரு.வி.க தனது தமிழாசிரியர் பதவியைவிட்டு விட்டு 7-12-1917-இல் "தேசப்பக்தன்' பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அந்த நாட்களில் சட்டசபையில் ஆங்கிலமே பேசப்பட்டு வந்தது. அந்தநேரத்தில் பி.வி.நரசிம்ம ஐயர் என்பவர் சட்டசபையில் ஒரு முறை தமிழில் பேசினார். திரு.வி.க. அதை "தேசப்பக்தன்' பத்திரிகையில் வரவேற்று, குறிப்பு எழுதி, ஊக்குவித்தார். அதன்பிறகே பிற்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.ராமமூர்த்தி சட்டசபையில் தமிழில் பேசினார். திரு.வி.க. "நவசக்தி' என்ற பெயரில் ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். அதை 20 ஆண்டுகள் நடத்தினார்.
1912-ஆம் ஆண்டு முதல் பெரியார் ஈ.வெ.ராவுடன் திரு.வி.க நட்பு கொண்டிருந்தார். இருவரும் மாறுபட்ட கொள்கையை உடையவர்கள். இருந்தும் இணைபிரியாத தோழர்களாக இருந்தனர். அண்ணல் காந்தியடிகளைத் திரு.வி.க முதல் முதலில் சந்தித்தது 18-3-1919-ஆம் நாள். அண்ணலின் ஆங்கிலச் சொற்பொழிவை தமிழில் மொழிபெயர்த்தார். காந்திஜி நடத்தி வந்த "யங் இந்தியா' இதழில் வந்த கட்டுரைகளை, இனிய தமிழில் மொழிபெயர்த்து "தேச பக்தனி'ல் ஓர் ஆண்டுகாலம் தொடர் கட்டுரைகளாக வெளியிட்டார். 1921-ஆம் ஆண்டு அவற்றைத் தொகுத்து நூலாகவும் வெளியிட்டார்.
1921 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பக்கிங்காம் கர்நாடிக் ஆலையில் 13 ஆயிரம் பேர் 6 மாத காலம் வேலை நிறுத்தம் செய்தனர். அந்த வேலை நிறுத்தத்தை திரு.வி.க ஊக்குவித்து முன்னின்று நடத்தினார். அதைக்கண்டு கோபம் கொண்ட சென்னை ஆளுநர் வெலிங்டன் பிரபு திரு.வி.க-வை நாடு கடத்த முடிவுசெய்தார்.
எழுத்துலகில் எவருக்கும் தலைவணங்காமல் நிமிர்ந்து நின்றார். தனக்கென்று தனிச்சிறப்பான தமிழ் நடையை உருவாக்கினார். திரு.வி.க ஆரம்பகாலத்தில் சைவ சமயம் மீது பற்றாக இருந்தார். இடைக்காலத்தில் காந்தியடிகள் மீது பக்தியும், பரவசமும் இருந்தது. அதன்பிறகு சோவியத் நாட்டின் மீதும், மார்க்சிய கொள்கை மீதும் நாட்டம் கொண்டார். இது ஒரு வளர்ச்சியே தவிர கொள்கை மாற்றமல்ல. காலம் முழுவதும் வாடகை வீட்டிலேயே இருந்தார். மதுரை வள்ளல் கருமுத்து தியாகராச செட்டியார் பெரும் தொகையைக் காசோலையாக அனுப்பிவைத்தார். அதை திரு.வி.க வாங்க மறுத்து, திருப்பி அனுப்பிவிட்டார்.
1948-ல் நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது, காங்கிரஸ் ஆட்சி அவரை வீட்டிலேயே சிறை வைத்தது. ஆங்கிலக் கவிஞர் ஜான் மில்ட்டனைப் போல கடைசி நாட்களில் திரு.வி.க.-வின் கண் பார்வை மங்கியது. அந்நிலையிலும், பிறரைக் கொண்டு புத்தகங்களைப் படிக்கச் சொல்லி கேட்டு வந்தார். தன்னுடைய 69 வயதில் 1953-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் நாள் திரு.வி.க அமரரானார். எல்லாக் கட்சியினரும், எல்லா மதத்தவரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
திரு.வி.க தன்னுடைய இறுதிக்காலம் வரை மனித நேயப் போராளியாகவே வாழ்ந்தார் என்பதே உண்மை. தொழில், பொது வாழ்க்கை, அரசியல் எல்லாவற்றிலும் போராடி வெற்றி கண்ட திரு.வி.க.வுக்குச் சொந்த வாழ்க்கை என்று ஒன்று இல்லாமலே போய் விட்டது. பெண்களுக்காகப் பாடுபட்ட திரு.வி.க. மனைவியை வாழ்வின் பாதியில் இழந்தார்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...