முரண்சுவை: தந்தையை மாற்றிய தத்துவ மேதை!
அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் சினிகா என்ற ஏரிக்கு அருகே இருந்த திரிஸ்டன் என்ற ஊரில் ராபர்ட் இங்கர்சாலின் தந்தை ஜான் இங்கர்சால் வாழ்ந்து வந்தார். அவர் கடவுள் பக்தி அதிகம் உள்ளவர். மக்கள் செய்கின


அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் சினிகா என்ற ஏரிக்கு அருகே இருந்த திரிஸ்டன் என்ற ஊரில் ராபர்ட் இங்கர்சாலின் தந்தை ஜான் இங்கர்சால் வாழ்ந்து வந்தார். அவர் கடவுள் பக்தி அதிகம் உள்ளவர். மக்கள் செய்கின்ற பாவங்களை எடுத்துக் கூறி அவர்களின் ஆத்மாவைத் தூய்மை படுத்துவதே அவரது நோக்கமாக இருந்தது.
மக்கள் செய்கின்ற பாவத்தினால் அவர்கள் பாவம் என்னும் படுகுழியில் விழாமல் அவர்களைக் காப்பாற்ற புனித பைபிளை பிரசாரம் செய்து வந்தார். அதற்காக அவருக்குக் கிடைத்து வந்த ஊதியம் ஆண்டுக்கு 300 டாலர்கள் மட்டுமே.
]
அவருடைய மகன் இங்கர்சாலின் பிரசாரமே வேறு. அதற்கு அவர் பெற்ற சன்மானமும் நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தது.
பகுத்தறிவாளர்களால் போற்றப்பட்ட ராபட் இங்கர்சால் 19-வது நூற்றாண்டில் அமெரிக்காவிலே பிறந்தவர். அறியாமையில் மூழ்கிக்கிடக்கும் மனிதர்களுக்கு, அறிவியல் ரீதியாக விளக்கங்களைக் கொடுத்தார். மூடநம்பிக்கைகளிலிருந்து மனிதன் விடுதலை பெறவேண்டும் என்பதே அவரது குறிக்கோளாகும்.
மனிதன் தன் மனதில் எழும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் தனக்குத்தானே பதில் அளிக்கக்கூடிய பயிற்சியைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டார். மனிதன் பகுத்தறிவு படைத்தவனாக உயரவேண்டும் என்று முழக்கமிட்டார்.
ஏன்? எதனால்? எப்படி? எதற்காக? என்ற கேள்விகளை முன் நிறுத்தி, அது எப்படிப்பட்ட ஒரு விஷயமாக இருந்தாலும் அதற்கான சரியான விடை கிடைத்த பிறகே, அதை நம்ப வேண்டும். அல்லது செய்யவேண்டும் என்று சொன்னார்.
இவர் ஒரு சட்டநூல் வல்லுனர். இவர் பேசுகின்ற கூட்டங்களுக்கு டிக்கெட் உண்டு. பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டுதான் இவரது பேச்சைக் கேட்பார்கள். அவர் எங்கு பேசினாலும் கூட்டம் நிரம்பி வழியும். பகுத்தறிவுவாதிகளை விட ஆன்மீக வாதிகளே இவரது பேச்சை அதிகம் கேட்டனர்.
சொற்பொழிவுகள் மூலம் அவருக்கு ஏராளமான பணம் கிடைத்தது. அமெரிக்க ஜனாதிபதியின் வருமானத்தைவிட இரண்டு மடங்கு வருமானம், அவருக்கு சொற்பொழிவின் மூலம் கிடைத்தது.
மதப்பிரசாரகரான தந்தையிடம் இருந்து அவர் மாறுபட்டது ஏன்?
ஐந்தாவது மகனாகப் பிறந்தார் ராபட் இங்கர்சால். இரண்டு வயது சிறுவனாக இருக்கும்பொழுது அவரின் தாயார் இறந்து விட்டார். எனவே இவரது அக்காள் மேரிஜேன் என்பவர்தான் இவரை வளர்த்தார்.
இங்கர்சாலின் தந்தையான ஜான், பைபிளை கரைத்துக் குடித்தவர். பைபிளில் கூறியுள்ள சட்டத்திட்டங்களின்படியே வாழ்க்கையை நடத்தி வந்தார். இவ்வுலக வாழ்க்கை நிலையில்லாதது, மேலுலகமே நிரந்தரமானது என்கிற தத்துவத்தில் மூழ்கித் திளைத்தவர். இருந்தபோதிலும் குழந்தைகளின் மீது உயிரையே வைத்திருந்தார்.
பைபிள் பிரசாரத்தில் காட்டிய அக்கறையைவிட, தம் குழந்தைகளின் கல்வி போதனையில் அவர் காட்டிய அக்கறை அதிகம்.
இங்கர்சாலின் தந்தை ஓர் அங்குல நீளமுள்ள மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்து விட்டு, அது முழுவதும், எரிந்து முடிவதற்குள் ஹீப்ரு, கிரீக், லத்தின் ஆகிய மொழிகளில் உள்ள நூல்களிலிருந்து சிற்சில பொன்மொழிகளை மனப்பாடம் செய்யும்படி சிறுவனான இங்கர்சாலுக்கு உத்திரவிடுவார்.
தந்தையின் சொல்லைத்தட்டாத இங்கர்சாலும் அப்படியே
மனப்பாடம் செய்து ஒப்புவிப்பாராம். மெழுகுவர்த்தி எரிந்து முடிந்த பிறகும் கூட மனப்பாடம் செய்தவைகளை இருட்டில் வாய்விட்டு சொல்லிக் கொண்டிருப்பாராம்.
நரகத்தைப் பற்றி வர்ணித்ததே, பள்ளி மாணவனான இங்கர்சாலின் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை உண்டாக்கியது. எனவே இங்கர்சாலுக்கு மத நம்பிக்கை அற்றுப்போனது. அதனால் மதத்திற்கு எதிரான கருத்துகளை மக்கள் மத்தியில் பேசலானார்.
இதைக் கேள்விப்பட்ட அவருடைய அப்பா ஜான் இங்கர்சால் அதிகம் வேதனைப் பட்டார். மகனைத் திருத்த எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை. இறுதியில் மகனின் கருத்துக்களை இவர் கேட்க ஆரம்பித்தார்.
வயதான காலத்தில் தந்தை ஜான் இங்கர்சால் நோய்வாய்ப்பட்டு, படுத்தபடுக்கையாகக் கிடந்தார். உயிர்போகும்போது வேத நூலிலிருந்து சில பகுதிகளைப் படிப்பது வழக்கம். அந்த ஒலியை கேட்டுக்கொண்டே உயிர் பிரிந்தால், பரமபிதாவின் பாதங்களை அடைவார்கள் என்பது நம்பிக்கை.
மரணப்படுக்கையில் இருந்த ஜான், தன்னுடைய மகனை அருகே அழைத்தார்.
தன்னுடைய உயிர் பிரியும்பொழுது வேத நூலை எடுத்து படிக்கச் சொல்லாமல், சாக்ரடீசின் மரணத்தைக் குறித்து பிளாட்டோ எழுதிய உணர்ச்சி மிக்க வரிகளை படிக்கச் சொன்னார்.
உலகுக்கெல்லாம் மதத்தின் பெருமையை போதித்த ஜான், தன் மகனுக்காக பகுத்தறிவு கொள்கைக்கு மாறியதில்தான் இருக்கிறது, வாழ்வின் வேடிக்கை.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...