முரண்சுவை புதிய தொடர் : ராஜாஜி என்ற ராஜதந்திரி
பல்வேறு சரித்திர சம்பவங்களும் தங்களுக்குள்ளேயே எதிரெதிர் அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. ஒற்றுமையை போதிக்கும் மதங்களே வேற்றுமைக்குக் காரணமாகி நிற்பது போல, விஞ்ஞான முன்னேற்றமே குளோபல் வார்மிங்குக்கு காரண


பல்வேறு சரித்திர சம்பவங்களும் தங்களுக்குள்ளேயே எதிரெதிர் அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. ஒற்றுமையை போதிக்கும் மதங்களே வேற்றுமைக்குக் காரணமாகி நிற்பது போல, விஞ்ஞான முன்னேற்றமே குளோபல் வார்மிங்குக்கு காரணமாகி உலகை அச்சுறுத்திக் கொண்டிருப்பதைப் போல.. பல்வேறு உதாரணங்களைச் சொல்லலாம். தனிமனிதர்களின் வாழ்வின் மூலம் நான் தரிசித்த இத்தகைய முரண்சுவைகளை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
ராஜாஜி மாபெரும் தீர்க்கதரிசி. ஜெர்மன் சுவர் விரைவில் இடிக்கப்பட்டுவிடும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொன்னவர். தேச ஒற்றுமையையும் நேர்மையையும் இரண்டு கண்களாகக் காத்தவர்.
சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக ராஜாஜி 1952-53 -ம் ஆண்டுகளில் இருந்த நேரம். விருதுநகருக்கு ஒருமுறை விஜயம் செய்தார். ராஜாஜி எப்பொழுதுமே வெளியூர் பிரயாணத்தின்போது தனக்கு என்ன வேண்டும் என்பதை எல்லாம் முறைப்படி டைப் செய்து, அங்கு வருவதற்கு முன்பே கொடுத்து விடுவார். அவர் திட்டமிட்டபடி விருதுநகருக்குச் சென்று நகரில் பார்க்க வேண்டிய வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு ஓய்வு எடுக்க அரசினருக்கு உரிய பயண மாளிகைக்கு வந்தார். வழக்கமாக அவர் கேட்பது ஒரு பிளாஸ்க் காபி, சுடு தண்ணீர், சில மாத்திரைகள்; அதற்குமேல் எதுவும் கேட்டு எழுத மாட்டார்.
அன்று பயண மாளிகையில் புதிதாகக் கொசுவலை ஒன்று இருந்தது. கொசுவலையைப் பார்த்தவுடன் ராஜாஜி இது ஏது? யார் வாங்கியது? என்று தன் உதவியாளர்களைக் கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள் இங்கு கொசுக்கள் அதிகம். எனவேதான் உங்களுக்காக நாங்கள் கொசுவலையைப் புதிதாக வாங்கி வந்தோம் என்று சொல்லியிருக்கிறார். ராஜாஜியிடம் நல்ல பெயர் வாங்கலாம் என்றுதான் அதைச் சொன்னார்கள். ஆனால் அதைக் கேட்ட ராஜாஜி ""உங்களை யார் கொசுவலை வாங்கச் சொன்னது? நான் சொன்னேனா? நான் எழுதிக் கொடுத்த லிஸ்டில் கொசுவலை இல்லையே? இதற்கு ஏது பணம்? யார் வாங்கினது? எந்தக் கணக்கில் வாங்கினீர்கள்'' என்று பல கேள்விகள் கேட்டுள்ளார். பயண மாளிகையின் கணக்கில்தான் வாங்கினோம் என்று பதில் கூறியிருக்கிறார்கள்.
உடனே ராஜாஜி, ""அந்தக் கொசுவலையை என்னுடைய சொந்த உபயோகத்திற்கு வைத்துக் கொள்கிறேன். சென்னை சென்றவுடன் அதற்கான பணத்தை அனுப்பிவிடுகிறேன்'' என்று சொல்லி அந்த ரசீதை வாங்கி வைத்துக் கொண்டார். விருதுநகரில் தங்கி இருக்கும் வரை கொசுவலையைப் பிரிக்கவே இல்லை. அவருடைய நேர்மைக்கு இந்தச் சம்பவம் ஒரு சான்று.
1953 - நவம்பர் 30-ம் தேதி ஒரு புயல் தாக்கியது.
டிசம்பர் 2 அல்லது 3 தேதிகளில் ராஜாஜி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் காண வந்தார். அவர் தஞ்சை மாவட்டத்தை சுற்றிவரும்போது எங்களது ஊருக்குப் பக்கத்து ஊரான முத்துப்பேட்டைக்கு வந்தார். அந்த ஊர்மக்கள் முதலமைச்சர் காரை நிறுத்தினார்கள். அவர்கள் ராஜாஜியைப் பார்த்து குடிசை இழந்தவர்களுக்கு ரூபாய் 30 வழங்கி இருக்கிறீர்கள். ஆனால் அதைக் கொடுக்கும் அதிகாரி ரூபாய் 20தான் எங்களுக்குக் கொடுக்கிறார். பணம் சுரண்டப்படுகிறது என்று கூறினார்கள்.
அதைக்கேட்ட ராஜாஜி ""எனக்குக் கீழே வேலை பார்க்கும் அதிகாரிகளை என்னால் குறை சொல்ல முடியாது. ஏனெனில் அவரும் நம்மில் ஒருவர்தானே? அயல்நாட்டார் இல்லையே? எனவே தவறு நடக்காமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும்?''என்று கேட்டார். அதற்கு மக்கள் ""பணம் கொடுப்பவரை மேற்பார்வையிட அவருக்கு மேலே சில அதிகாரிகளை அனுப்புங்கள்'' என்றனர்.
அதற்கு ராஜாஜி ""அப்படியானால் ரூபாய் 15தான் உங்களுக்கு வரும். ஏனெனில் அந்த மேலதிகாரிக்கு பங்கு போக வேண்டும் அல்லவா?'' என்றார். தன் கொசுவலைக்குத் தானே பணம் கொடுத்த ராஜாஜிதான் இப்படியும் நடந்து கொண்டார். இது ராஜாஜியிடம் நான் எதிர்பார்க்காத முரண்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...