இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

முரண் சுவை: புள்ளிவிவரப் புலி

பி.ராமமூர்த்தி என்கிற பெயரை பி.ஆர் என்று நம்மால் எளிதாக சுருக்க முடிகிறது. ஆனால் அவருடைய 65 வருட கால அரசியல் வாழ்க்கையை அவ்வளவு எளிதாகச் சுருக்க முடியவில்லை. அக்ரஹாரத்தில் பிறந்த அபூர்வ மனிதரான அவர் ச

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 11:26 am

ராஜேஷ்

பி.ராமமூர்த்தி என்கிற பெயரை பி.ஆர் என்று நம்மால் எளிதாக சுருக்க முடிகிறது. ஆனால் அவருடைய 65 வருட கால அரசியல் வாழ்க்கையை அவ்வளவு எளிதாகச் சுருக்க முடியவில்லை. அக்ரஹாரத்தில் பிறந்த அபூர்வ மனிதரான அவர் சாதி சமய நெறிகளை ஒதுக்கி தள்ளியவர்.

இவர் 1908-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ம் தேதி வேப்பத்தூரில் பஞ்சாபகேச சாஸ்திரிக்கும் லட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார்.

சிறுபிள்ளையிலிருந்து இறக்கும் வரை அவர் கதராடையையே அணிந்து வந்தார். இவரது வலதுகாலில் உள்ள குறையை வைத்துக்கொண்டு தான் பல போராட்டங்கள், தலைமறைவு வாழ்க்கை போன்றவற்றை மேற்கொண்டார்.

திருவல்லிக்கேணியில் உள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில்தான் ராமமூர்த்தி கல்வி பயின்றார். 1925-ஆம் ஆண்டு சென்னை வாலிபர் கழகத்தை ஆரம்பித்து அதில் பணியாற்றி வந்தார்.

1922 முதல் இராஜாஜி, மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு மற்றும் அவர்களுடைய குடும்பத்தாருடன் பழகும் வாய்ப்பை பி.ஆர் பெற்றார். 1928-இல் காந்திஜியின் தமிழக சுற்றுப் பயணத்தின்போது பாதுகாப்பு பொறுப்பு பி.ஆர். அவர்களிடம்  ஒப்படைக்கப்பட்டிருந்தது. மேலும் காந்திஜியின் பேச்சையும் தமிழில் மொழி பெயர்த்தார். ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பல மாநில மொழிகள் நன்றாக தெரிந்திருந்த காரணத்தால், அகில இந்திய அளவில் அவரால் புகழ் பெற முடிந்தது.

1937-ம் ஆண்டு துவக்கப்பட்ட ஜனசக்தி பத்திரிகையில் ப.ஜீவானந்தத்துடன் இணைந்து பணியாற்றினார்.

1952-இல் மதுரை சிறையில் இருந்தார் பி.ஆர். அந்தத் தேர்தலில் நின்ற பி.ஆர். அவர்களை ஆதரித்துப் பேசியவர் தந்தை பெரியார். 1946-க்குப் பிறகு 6 ஆண்டுகள் பெரியார் மதுரைக்கு வரவில்லை. ஆனால் 1952-இல் பிராமண குலத்தைச் சேர்ந்த ராமமூர்த்தியை ஆதரித்து பிராமண எதிர்ப்பாளரான தந்தை பெரியார், ""காங்கிரஸ் என்கிற பாம்பை அடிக்கப் பார்ப்பனத் தடி என்றும் பாராதே'' என்று பேசினார்.

மதுரை வடக்கு சட்ட மன்றத் தொகுதியில் ராமமூர்த்தி சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு வென்றார். இந்த வெற்றிக்குப் பிறகு ராமமூர்த்தி சட்டமன்றத்தில் பட்ஜெட்டின்போது தமிழில் பேசி புதிய வரலாற்றை தொடங்கி வைத்தார். தனது கட்சித் தோழர்கள்  அனைவரையும் பி.ஆர்.  தமிழிலேயே  பேச வைத்தார். தமிழர்களாகப் பிறந்த ஒரு சிலர் அந்தக் காலத்தில் தமிழில் கையெழுத்துப் போடாமல் ஆங்கிலத்தில் கையொப்பமிட்டனர். அந்த நேரத்தில் அவர் தமிழில் கையொப்பமிட்டார். அவருக்குத் தாய்மொழிப் பற்று உண்டு;  வெறி கிடையாது.

1953-ம் ஆண்டு ராஜாஜி முதலமைச்சராக இருந்த சமயம் குலக்கல்வி திட்டம் என்ற ஒன்றைக்கொண்டு வந்தார். தமிழகத்தில் தந்தை பெரியார் முதல் அனைவருமே அதை வன்மையாக எதிர்த்தனர். அந்த விவாதத்தின் பேரில் சட்டசபையில் ஓட்டெடுப்பு நடைபெற்றது. அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ராமமூர்த்தி அதில் கலந்து கொள்ள முடியவில்லை. அவருக்குக் கட்சி சம்பந்தமான ஒரு முக்கியமான அலுவல் காஷ்மீரில் இருந்தது. எனவே அவர் காஷ்மீர் சென்றிருந்தார். அன்றைக்குப் போக்குவரத்து வசதி குறைவாக இருந்த காரணத்தால் அவர் உடனடியாகத் திரும்ப முடியவில்லை'.

தோழர் பி.ஆர். மிகப் பெரிய மனிதர் மட்டுமல்ல. அதிசய மனிதர். அபூர்வ மனிதர்  அற்புதமானவரும் கூட. தனது பொது வாழ்வில் 8 ஆண்டுகள் சிறையிலும், 5 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்திருக்கிறார்.

அவரது தலைமறைவு காலத்தில் அவருக்கு உணவு, உடை, பணம் கொடுத்து உதவிய அம்பாள் என்ற பெண்ணையே மணந்து கொண்டார். அவர் பிராமணரல்ல. அப்பொழுது ராமமூர்த்திக்கு வயது 44.

1952-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ம் தேதி திருமணம் முடித்தார். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு பெரியார்தான் தலைமை தாங்கினார்.

1970 மே முதல் 1983 வரை சி.ஐ.டி.யு.வின் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். ராமமூர்த்தியின் நாடாளுமன்ற உரைகளை மட்டும் தொகுத்து வெளியிட்டால் 1000 பக்கங்களுக்கு குறையாமல் இருக்கும்.  ராமமூர்த்தி பேசுகிறார் என்றால் தலைபோகிற அலுவல் இருந்தாலும் அதை தள்ளிப்போட்டுவிட்டு அவையில் வந்து கூர்ந்து கேட்பாராம் அன்றைய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு.

 பி.ஆர். 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி மருத்துவமனையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் கூட தன்னுடைய மகள்கள் பொன்னி, வைகையிடம் வாலிபர் சங்க மாநாடு குறித்தும், அதில் வரவேற்பு உரையாற்ற வேண்டுமென்பது குறித்தும் பேசியுள்ளார். அதன்பிறகு சிறிது நேரத்திற்குள் அவர் உயிர் மூச்சு நின்று போனது.

மறுநாள் 16-ம் தேதி மாலை ஓட்டேரி மயானத்தில் உடல் எரியூட்டப்பட்டது.

1952- இல் ராஜாஜி, பி.ராமமூர்த்தி இருவரின் சட்டசபை விவாதங்களைக் கேட்க தினமும் வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் கொண்ட கூட்டம் பார்வையாளர் காலரியில் காத்திருக்கும். அப்போது ராஜாஜி, எனது முதல் எதிரிகள் கம்யூனிஸ்டுகள், அதிலும் இந்த ஆள்தான் பிரதான எதிரி என்று ராமமூர்த்தியை நோக்கி விரலை நீட்டுவார். அப்படி சரிக்கு சரியாக சளைக்காமல் விவாதிப்பதில் ராமமூர்த்தி வல்லவர். புள்ளிவிவரப் புலி அவர்.

ஆனால் அந்த வாதப்போர்களைத்தாண்டிய அரசியல் நாகரிகம் அவர்களுக்குள் அப்போது மட்டுமல்ல, அதற்கு முன்பும் இருந்தது. அதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.

ஓர் உதாரணம்... இந்தியாவிலேயே 1937-இல் முதன் கடன் நிவாரண மசோதாவை நிறைவேற்றியவர் அன்றைய முதல்வர் ராஜாஜி. அந்த மசோதாவைத் தயாரித்துக் கொடுத்தவர் பி.ஆர். 

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.