முகங்கள்: தடகளம்தான் தாய்!
ஆண்டு காலம் சர்வதேச தடகளத்தில் முத்திரை பதித்து இந்தியாவுக்காகத் தங்கப் பதக்கங்களைக் குவித்த சர்வதேச தட கள வீரர் ஆர். நடராஜன். இப்போது அவர் இளம் தட கள வீரர்களை உருவாக்கி வருகிறார். அவரைச் சந்தித்துப்


ஆண்டு காலம் சர்வதேச தடகளத்தில் முத்திரை பதித்து இந்தியாவுக்காகத் தங்கப் பதக்கங்களைக் குவித்த சர்வதேச தட கள வீரர் ஆர். நடராஜன். இப்போது அவர் இளம் தட கள வீரர்களை உருவாக்கி வருகிறார். அவரைச் சந்தித்துப் பேசினோம்:
நீங்கள் தடகள வீரரானது எப்படி?
நான் பள் ளிப் படிப்பை முடிக் கும் வரை தடகள போட்டிகளில் விளையாடியதே இல்லை. பள்ளிகளில் கூடைப்பந்து, ஹாக்கிப் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தேன். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது இப்போது தமிழக விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் கே. வைத்தியநாதன்தான் எனது துறை தலைவர். அவர்தான் என்னைத் தடகளத்துக்கு மாற்றினார். உயரம், உடல் திறனைப் பார்க்கும்போது சிறந்த தட கள வீரராக வர வாய்ப்புள்ளது என்று எனது பாதையை மாற்றினார். அடுத்த 6 மாத காலத்தில் தடகள பயிற்சி பெற்றேன்.
இந்திய தட கள பயிற்சி முகாமுக்குத் தேர்வு பெற்றேன்.
படைத்த சாதனைகள்?
1988-ல் நான் பங் கேற்ற முதல் போட்டி உலக உள் ள ரங்க தடகள போட்டி. நடந்தது ஈரான் நாட்டில். 18 நாடுகளின் வீரர்கள் பங்கேற்ற போட்டியில் 200 மீட்டரில் வெள்ளிப் பதக்கம் வென்றேன். இது மறக்க முடியாதது. பங்கேற்ற முதல் போட்டியிலேயே வெள்ளிப் பதக்கம், அதுவும் உலக அளவிலான போட்டி என்னும்போது அது மறக்க முடியாததாகி விட்டது.
அதன் பின்னர் கோழிக்கோட்டில் நடந்த அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தட களப் போட்டியில் 100, 200, 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் என 3 தங்கங்கள் வென்றேன். மேலும் தனிநபர் சாம்பியன் பட்டமும் கிடைத்தது. மேலும் அந்தப் போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் புதிய சாதனையையும் படைத்தேன்.
100 மீட்டரில் 10.6 விநாடிகள், 200 மீட்டரில் 21.6 விநாடிகளில் ஓடி சாதனை படைத்தேன்.
அதைத் தொடர்ந்து இஸ்லாமாபாதில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 100, 200 மீட்டர் ஓட்டங்களில் தங்கம் வென்று ஆசியாவின் அதிவேக மனிதர் என்ற பட்டத்தைப் பெற்றேன். நாடு முழுவதிலுமிருந்து பாராட்டுகள் குவியத் தொடங்கின. அதைத் தொடர்ந்து காமன்வெல்த் போட்டிகள், இலங்கையில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், சிங்கப்பூரில் 93-ல் நடந்த ஆசிய டிராக் அண்ட் பீல்ட் போட்டிகளிலும் தங்கப் பதக்கங்கள் பெற்றேன்.
சென்னையில் 95-ம் ஆண்டில் நடைபெற்ற தெற்காசியப் போட்டியில் 200 மீட்டரில் தங்கம், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி, 100 மீட்டரில் வெண்கலம் வென்றேன்.
தட கள அரங்கத்தில் நான் இருந்தவரை 6 தேசிய சாதனைகளைச் செய்திருந்தேன். பின்னர் அந்தச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன. ஆனால் மாநிலங்களுக்கு இடையிலான தட களப் போட்டியில் எனது 200 மீட்டர் சாதனை முறியடிக்கப்படாமல் இன்னும் உள்ளது. 200 மீட்டர் தூரத்தை 21.1 விநாடிகளில் கடந்ததே அந்தச் சாதனை.
96 வரை பல வெற்றிகளைக் குவித்தேன். வெற்றிகள் நிறைந்த பாதையாக இருந்தாலும் 9 ஆண்டு காலத்தில் காயங்கள், தோல்விகளால் சில நேரம் துவண்டு போயிருந்தேன். ஆனால் விளையாட்டில் வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையால் நான் மீண்டும் எழுந்து வந்தேன்.
தடகள போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர்...?
தட கள போட் டி களில் சாதனை படைத்து வந்தபோதே 1992-ல் சென்னை கஸ்டம்ஸில் அதிகாரியாக பணிக்குச் சேர்ந்தேன். தற்போது சூப்பிரடெண்டாக பணிபுரிந்து வருகிறேன்.
93-ல் மத்திய, மாநில அரசுகளின் செலவில் வெளிநாடுகளுக்குப் பயிற்சிக்கு அனுப்பப்பட்டேன். 94-ம் ஆண்டில் பெய்ஜிங் ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனாலும் சில காரணங்களால் போட்டியில் பங்கேற்க முடியவில்லை.
இதேபோல 1996-ல் அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுவிட்டேன். ஆனால் கடைசி நேர அலைக்கழிப்புகளால் அட்லாண்டா சென்று சேர்வதற்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. இதனால் அட்லாண்டா ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தேன்.
இளம் தடகள வீரர்களைக் கண்டறியும் பணி துவங்கியது எப்போது?
தட களத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 2000-ம் ஆண்டில் இந்திய ஸ்போர்ட்ஸ் புரமோஷன் அகாதெமியை (இஸ்பா) துவங்கினேன். 5 வயது முதல் 13 வயதுக்குள் சிறுவர், சிறுமியருக்குப் பயிற்சி அளித்து அவர்களை சிறந்த தட கள வீரர்களாக்குவதுதான் அகாதெமியின் நோக்கம்.
கடந்த 9 வருடங்களாக இந்தப் பயிற்சியை அளித்து வருகிறேன். சுமார் 2 ஆயிரம் வீரர்களுக்குப் பயிற்சி அளித்திருக்கிறேன். இதில் ஏராளமானோர் நல்ல நிலையில் இருக்கிறார்கள். தேசிய அளவில் சாதனைகளையும் படைத்துள்ளனர். தேசிய வீராங்கனைகளாக ஆதித்தி, காஞ்சனா, வாசுவி உருவானார்கள். இதில் ஆதித்தி என்ற வீராங்கனை ஆஸ்திரேலிய ஜூனியர் அணிக்காக விளையாடி வருகிறார்.
5 முதல் 13 வயதுக்குள்தான் வீரர், வீராங்கனைகள் நாம் நினைத்த பாத்திரத்தில் உருவாக்க முடியும். அதன் பிறகு பல்வேறு கமிட்மெண்டுகளால் அவர்களால் நினைத்த இலக்கை அடைய முடியாத நிலை ஏற்படலாம்.
5 முதல் 13 வயதுக்குள்பட்ட சிறார்களுக்குப் பயிற்சி அளித்தால் அவர்கள் இந்த இந்த விளையாட்டுகளில் சிறந்து விளங்க முடியும்; 100 மீட்டர் ஓட்டத்தில் இவ்வளவு விநாடியில் ஓட முடியும்; நீளம் தாண்டுதலில் இவ்வளவு தூரம் தாண்ட முடியும் என்று சான்றிதழே கொடுத்து அனுப்புகிறோம்.
திறமையைக் கண்டறிவது என்பது இப்படித்தான். நமது நாட்டிலுள்ள தடகள அமைப்புகள் இதைச் சரியாக செய்தால் விரைவில் உலக அளவில், ஒலிம்பிக் போட்டிகளில் நாம் பதக்கங்களை வெல்ல முடியும். இதில் எந்த சந்தேகமும் இல்லை.
மஸில் பயாப்ஸி டெஸ்ட்?
வீரர் களின் உடல் திறனை அறிவதற்கான சோதனை இது. உடலிலுள்ள திசுவை எடுத்து அதை சோதனை செய்து இந்த வீரர் இந்த விளையாட்டுகளில் பங்கேற்க முடியும். 100 மீட்டர் தூரத்தை இத்தனை விநாடிகளில் ஓட முடியும். இத்தனை ஆண்டுகள் விளையாட முடியும். தொடர்ந்து இத்தனை நிமிடங்கள் விளையாட முடியும் என்பதை அறிவதற்கான சோதனை.
இந்தச் சோதனை முன்பு இந்தியாவில் இல்லை. தற்போது அப்போலோ மருத்துவமனையில் கூட இந்தச் சோதனை வந்துவிட்டது. ஆனால் இதற்கான செலவுதான்அதிகமாக இருக்கிறது.
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் 146 கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடம் விளையாட்டுப் போட்டிகளுக்கான 8 டெஸ்டுகளை வைத்து அவர்களைத் தேர்வு செய்யலாம். 8 வருடம் அவர்களுக்கு முழு ஸ்பான்சர் கொடுத்து பயிற்சி அளிக்கலாம்.
அவர்களிடம் உள்ள திறமைகளைக் கண்டறியும்போது நமக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 10 வீரர்களாவது கிடைப்பார்கள். 8 வருடத்துக்குப் பின்னர் சர்வதேச அரங்கில் இந்தியா சாதிப்பது நிச்சயம்
எதிர்காலத் திட்டம்?
ஏ ரா ள மான தடகள வீரர், வீராங்கனைகளை உருவாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இஸ்பா-வைத் துவக்கினேன். அதில் ஓரளவு வெற்றி பெற்றுவிட்டேன். இந்திய வீரர்கள் சர்வதேச அளவில் ஜொலிக்கும்போதுதான் நமது கனவு நிறைவேறும். ஒலிம்பிக்கில் பதக்கம் பெறும் அளவுக்கு நமது வீரர்களை உருவாக்கவேண்டும். இதுதான் எதிர்காலத் திட்டம்.
ஆனால் அதற்கான விதைகளை நாம் விதைத்திருக்கிறோமா என்றால். இல்லை என்றுதான் பதில் சொல்ல முடியும். விதையே விதைக்காமல் அறுவடைக்குச் செல்ல முடியாது.
இதற்காகத்தான் எங்கள் அகாதெமியில் வித்தியாசமான பயிற்சிகளை அளித்து வருகிறோம். ஸ்பீட் டிரில், விடியோ அனாலிசிஸ் மூலம் வீரர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுதல், இடுப்பை வலுவாக்குதல், ஸ்விஸ் பால் டிரைனிங், மெடிசின் பால், யோகா, சீன மூச்சுப் பயிற்சி முறையை நிபுணர்களைக் கொண்டு கற்றுத் தருகிறோம்.
விளையாட்டின் தாய் என்றால் அது தடகளம்தான். தடகளத்தைப் பழகி விட்டால் மற்ற எல்லா விளையாட்டுகளையும் எளிதாக விளையாட முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...