முரண்சுவை-21: இப்படி ஒருவர் இருந்தாரா?
ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட, அழுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஒரு சமுதாய பரம்பரையில் உதித்தவர் தான் மறைந்த அப்பழுக்கற்ற தியாகி கக்கன். இவர் மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திலுள்ள தும்பைப்பட்டி என்னும் சிற்றூரில


ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட, அழுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஒரு சமுதாய பரம்பரையில் உதித்தவர் தான் மறைந்த அப்பழுக்கற்ற தியாகி கக்கன். இவர் மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திலுள்ள தும்பைப்பட்டி என்னும் சிற்றூரில், பூசாரிக் கக்கன் என்பவருக்கும், பெரும்பி அம்மாள் என்பவருக்கும் மகனாக 1908-ஆம் ஆண்டு, ஜூன் மாதம், 18-ம் தேதி பிறந்தார்.
பூசாரிக் கக்கன் மேலூரிலிருந்த வீரமாகாளியம்மன் கோவிலில் பூசாரியாகவும், அரசுத் தோட்டியாகவும் வேலை செய்தார். இவருடைய மாத வருமானம் 2 ரூபாய். கக்கன் தினமும் 10 கிலோ மீட்டர் நடந்து போய்தான் பள்ளியில் படித்தார். பள்ளி இறுதி வகுப்பில் ஆங்கிலத்தில் ஒரு மார்க் குறைவாக வாங்கியதால் கக்கன் வெற்றி பெற முடியவில்லை. படிப்பைத் தொடர முடியாத அவரது நிலையே அவருடைய அரசியல் பிரவேசத்துக்கும் காரணமாக அமைந்தது.
தான் ஒடுக்கப்பட்ட இந்துவாக இருந்தாலும் கிறிஸ்தவப் பெண்ணை மணந்து கொள்ளச் சம்மதித்தார். அந்தக் கால கட்டத்தில் இதுபோன்ற சீர்திருத்த திருமணங்களை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதுபோன்ற விஷயங்களை ஒழுக்கக்கேடாகவே கருதினர்.
1932-ம் ஆண்டு காரைக்குடிக்கு அருகில் உள்ள சிறாவயல் என்னும் ஊரில் கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான ப.ஜீவானந்தம் தலைமையில் நடந்த கக்கனின் திருமணம், சீர்திருத்த திருமணமாகும்.
1934 ஜனவரி 27-ம் தேதி காந்தியடிகளைச் சந்தித்த பிறகு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார்.
1940-ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் வந்தே மாதரம் என்று முழங்கியதற்காகவும், துண்டுப் பிரசுரங்களைப் பொது மக்களிடம் விநியோகம் செய்ததற்காகவும் கைது செய்யப்பட்டு கக்கன் சிறையில் அடைக்கப்பட்டார். கக்கனைச் சிறைச்சாலை காவலர்கள் கம்பத்தில் கட்டி வைத்து அவர் உடல் முழுவதும் தழும்பு ஏற்படும்படி அடித்தனர். இரத்தம் கொட்டியது.
1942-ம் ஆண்டு ஆகஸ்டு போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டு ஆந்திர மாநிலத்திலுள்ள அலிபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 18 மாதக் கடுங்காவல் தண்டனை முடிந்த பின் 1944-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
1955-ம் ஆண்டு ஆவடியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு சிறப்பாக நடந்ததில் கக்கனுக்குப் பெரும் பங்குண்டு. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஜவகர்லால் நேரு கக்கனை 'கக்கன்ஜி' என்று அன்பாக அழைத்தார். ஆனால் தமிழக மக்கள் அவரை தியாகி கக்கன் என்று அழைக்கத் தொடங்கினார்கள்.
கக்கன் சென்ற ஒரே வெளிநாடு சீனா மட்டுமே. சீனாவிற்குச் சென்றிருந்த சமயம் சூயன்லாய் அவர்களைச் சந்தித்து உரையாடியிருக்கிறார்.
கக்கன், சுதந்திரப் போராட்ட தியாகியான வைத்தியநாதய்யர் வீட்டில் ஊழியராக இருந்து அடுப்படி வரையில் சகல வேலைகளையும் செய்து வந்தார்.
தொடர்ந்து 9 ஆண்டுகள் அமைச்சராகவும் 5 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவுமிருந்த கக்கன் எந்த விதத்திலும் கறைபடாதவர்.
கக்கனுக்குப் பிறகு எந்த ஒரு தாழ்த்தப்பட்ட குடிமகனுக்கும் அமைச்சரவையில் இவ்வளவு பெரிய பொறுப்புகள் இன்று வரை வழங்கப்படவில்லை.
1975-இல் காமராஜர் இறந்த பிறகு அரசியலை விட்டு கக்கன் விலகிவிட்டார். ராயப்பேட்டையில் உள்ள கிருஷ்ணபுரத்தில் ரூபாய் 110 மாத வாடகையில் ஒரு சிறு வீட்டில் குடியிருந்தார். எங்கு சென்றாலும் பேருந்துக்காக கால் கடுக்க நின்றிருப்பார். நான்கு முழம் கதர் வேட்டியும் கதர் சட்டையுமே அணிவார். சாதாரண ஏழை சாப்பிடும் உணவையே அவர் சாப்பிடுவார். அமைச்சராய் இருந்தபோது தன்னுடைய சம்பளம் போதாமல், மாதக் கடைசியில் தன்னிடம் வேலைப் பார்க்கும் செயலாளரிடம் கடன் வாங்குவாராம்.
எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது, தமிழக அரசு கக்கனுக்கு இலவச வீடும் பேருந்தில் செல்ல இலவசப் பயணச் சீட்டும், இலவச மருத்துவச் சலுகையும் மாதம் 500 ரூபாய் ஓய்வு ஊதியமும் கொடுத்தது.
1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மதுரையில் உள்ள ஆஸ்பத்திரியில் இருந்த கக்கனைப் பார்த்து உடல் நலன் விசாரித்தார். உடனே கக்கனுக்கு தனியறை வசதியும், தகுந்த உயர்தர மருத்துவமும் கிடைக்க அப்போதே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மதுரை நீதிமன்றச் சாலையில் 31.8.1997 அன்று முதல்வர் கருணாநிதி கக்கனுக்குச் சிலை அமைத்து திறந்து வைத்தார். 2000-ம் ஆண்டில் தும்பைப்பட்டி கிராமத்தில் உள்ள கக்கன் பிறந்த வீட்டை நினைவாலயமாக அமைத்தார் கலைஞர்.
பதவியினால் கிடைத்த அதிகாரத்தினைப் பயன்படுத்தி எந்தத் தவறும் செய்ததில்லை. தன்னுடைய இனத்தைக்கூட தனக்காக எந்த விதத்திலும் அவர் பயன்படுத்தியதில்லை, சுரண்டியதுமில்லை. அப்படிப்பட்ட தியாகச் சுடர் 1981-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதி தன்னுடைய தியாகத்தையும் தொண்டையும் நிரந்தரமாக நிறுத்திக் கொண்டார். என்னுடைய அவதார புருஷர்களில் முக்கியமானவர் கக்கன்ஜி. இப்படி ஒருவர் நாம் வாழும் காலத்திலேயே வாழ்ந்தாரா என்று ஆச்சர்யப்பட வைத்த மாமனிதர் அவர்.
ஒருமுறை கக்கனின் சம்பந்தி முதன் முதலில் கக்கனின் வீட்டிற்கு வந்திருக்கிறார். எங்கே இவர் தன்னுடைய வீட்டில் தங்கிவிடுவாரோ என்று அஞ்சி அவரிடம் கக்கன் நான் அமைச்சராக இருப்பதால், அரசாங்கத்தில் எனக்குக் கொடுத்த வீடு இது. எனவே நீங்கள் இங்கு தங்கக் கூடாது. வேறு எங்கேயாவது தங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.
இந்த நேர்மையும் கறைபடாத தன்மையும்தான் அவரை உயர்ந்தோர்க்கெல்லாம் உயர்ந்தவராக்கியது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...