முரண்சுவை-7: பிரபஞ்ச புதிர்!
அறிவைவிட கற்பனைதான் மிகமிக முக்கியமானது என்றார் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இவர் 1879-ம் ஆண்டு, மார்ச் மாதம், 14-ம் தேதி ஜெர்மன் நாட்டில் உள்ள உல்ம் என்னும் நகரத்தில் பிறந்தார். ஹிட்லரின் இனவெறித் தா


அறிவைவிட கற்பனைதான் மிகமிக முக்கியமானது என்றார் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இவர் 1879-ம் ஆண்டு, மார்ச் மாதம், 14-ம் தேதி ஜெர்மன் நாட்டில் உள்ள உல்ம் என்னும் நகரத்தில் பிறந்தார்.
ஹிட்லரின் இனவெறித் தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறார் ஐன்ஸ்டீன். "நாஜி ஆட்சியின் எதிரிகளும், குற்றவாளிகளும்' என்று ஹிட்லரின் அரசாங்கம் ஓர் ஆல்பத்தை வெளியிட்டிருந்தது.
அந்த ஆல்பத்தின் முதல் பக்கத்தில் ஐன்ஸ்டீன் படம் இருந்தது. இவர் செய்த குற்றம் என்று ஒரு பட்டியல் வெளியிட்டிருந்தது. அதில் ஒரு குற்றம், ஐன்ஸ்டீனின் சார்பு நிலைக் கொள்கை என்று குறிப்பிட்டிருந்தது. இதனுடைய பின் குறிப்பில்: இவர் இன்னும் தூக்கிலிடப்படவில்லை என்று எழுதப்பட்டிருந்தது.
ஹிட்லரின் ஜெர்மனி அணுகுண்டைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது என்பதையும் அவர்கள் பெரிய அழிவுக்குத் தயாராகிவிட்டனர் என்பதை அறிந்த ஐன்ஸ்டீன் பதறிப்போனார். உடனே இவர் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டிற்கு இதைத் தடுக்க வேண்டும் என்றும், அதற்கான காரணங்களையும் எழுதினார். அவர் எழுதிய கடிதமே அணுகுண்டின் ஆபத்தை அமெரிக்கா உணர்வதற்குக் காரணமாக அமைந்தது. ஆபத்தை உணர்ந்த அமெரிக்கா, அமெரிக்காவே அணுகுண்டை தயாரித்து வீசியது.
1922-ல் ஜப்பானுக்குச் சென்றார். இவரை வரவேற்கப் பெரும் மக்கள் கூட்டம் வந்தது. ஜப்பானில் இவர் ஜெர்மன் மொழியில் பேச, இன்னொருவர் ஜப்பானிய மொழியில் மொழிப்பெயர்க்கக் கூட்டம் பல மணி நேரம் இவரது பேச்சைப் பொறுமையாகக் கேட்டது. ஐன்ஸ்டீனுக்கு அப்படியொரு ரசிகர் கூட்டம் அங்கே இருந்தது. ஆனால் ஐன்ஸ்டீன் தடுப்பதற்கு முயன்ற அணுகுண்டு முதன்முதலாக ஜப்பானைத்தான் பதம் பார்த்தது. லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். அந்த சமயத்தில் ஐன்ஸ்டீன் அமெரிக்காவில் இருந்தார். இந்த செய்தியைக் கேட்டு கண்ணீர் வடித்தார்.
யூத மக்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்று கருதி பாடுபட்டார். ஆனால் அரபு மக்களோடு கூடி வாழ மறுக்கும் யூத நாடான இஸ்ரேல் நாட்டில் குடியேற மறுத்துவிட்டார். சோசலிசமே விஞ்ஞான உலகுக்குப் பொருந்தும் சமூக அமைப்பு என்று பிரசாரம் செய்தார்.
ஐன்ஸ்டீன் சிறுபிள்ளையில் கூச்ச சுபாவமுள்ளவராக இருந்தார். ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களும் ஐன்ஸ்டீனை மக்குப் பையன் என்று கருதினார்கள். எளிமையான விஷயங்களைக்கூட புரிந்து கொள்ள முடியாதவராகக் கருதப்பட்டார். எனவே பள்ளி ஆசிரியர்கள் யாரும் இவரைக் கண்டு கொள்ளவே இல்லை. மொத்தத்தில் இவரை யாருமே புரிந்து கொள்ளவில்லை. ஆனால் இவரோ தான் பரிசோதித்த எல்லாவற்றையும் புரிந்து கொண்டார்.
1905-இல் தன்னுடைய 26-வது வயதில் அவர் வெளியிட்ட சார்பு நிலை கோட்பாட்டு (Theory of Rel ativity) இன்னமும் பலருக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது.
அவருக்குள் இருந்த மென்மையான உணர்வுகளை அவருடைய மனைவி மரணமடையும் நேரத்தில்தான் தெரிந்து கொண்டார். இவரது பிள்ளைகளும் இவரைப் புரிந்து கொள்ளவில்லை.
நம் காலத்தில் வாழும் மேதைகளில் உலகிலேயே தலைசிறந்த மாமனிதர் காந்தியடிகளே என்று ஐன்ஸ்டீன் வாயாரப் புகழ்ந்து கொண்டாடினார். தன் அறையில் காந்தியடிகளின் படத்தை மாட்டி வைத்து அவரிடம் தனக்கிருந்த தனிப்பட்ட மரியாதையை வெளிப்படுத்திக் கொண்டார்.
அவர் எழுதுவதற்கு உபயோகப்படுத்தியது பழைய கடித உறைகளின் பின் பக்கங்களைத்தான். பல பிரபஞ்ச ரகசியங்கள் அவிழ்ந்தது அந்தக் கடித உறைகளின் பின் பக்கங்களில்தான்.
மாபெரும் விஞ்ஞானியாக இருந்தும் சில எளிமையான விஷயத்தில் வேடிக்கையாக நடந்து கொண்டார். ஒருமுறை அமெரிக்காவில், பிரின்ஸ்டனில் ஐன்ஸ்டீன் இருக்கும்போது, தன்னுடைய வீட்டு விலாசத்தை மறந்து விட்டார். பிறகு தன்னுடைய வீட்டுக்கு போன் செய்து, மேனேஜரிடம் தன் வீட்டு முகவரி என்ன என்று கேட்டுத் தெரிந்துக்கொண்ட பிறகு வீட்டுக்குச் சென்றார். ரயிலில் மூன்றாவது வகுப்புப் பெட்டியில்தான் பயணம் செய்வார்.
1955 ஏப்ரல் மாதம், 13-ம் தேதி வயிற்று வலியால் ஐன்ஸ்டீன் துடித்தார். அதனால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்று இரவு 12.25 மணிக்கு ஐன்ஸ்டீன் இதயத்துடிப்பு நின்று போனது.
"அணு என்பது வாழுகின்ற காலத்தில் யாருக்கும் ஈயாத கஞ்சன் மாதிரி. ஆனால் அது அழியும்போது சக்தி என்கிற செல்வத்தை அள்ளிக் கொடுக்கிறது' என்றார்.
ஐன்ஸ்டீனின் இல்லற வாழ்வு அவ்வளவு மகிழ்ச்சியானதாக இருந்ததில்லை. "ஹிட்லரின் நாஜிப் படைகளையும், இரண்டு மனைவிகளையும் சமாளித்தவன் நான்' என்றார்.
பிரபஞ்சத்தையே ஆராய்ந்து பல்வேறு கண்டுபிடிப்புகளுக்காகப் பாராட்டப் பெற்ற இவர், ஹிட்லரின் நாஜிபடையினரையும் இரண்டு மனைவியரையும் சமாளித்ததை பெரு மை யா கச் சொல் லி யிருப்பது வேடிக்கையா? வேதனையா?
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...