இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

முரண்சுவை-10: ஆஸ்தி சேர்க்காத சாஸ்திரி

லால்பகதூர் சாஸ்திரி என்பது நீளமான பெயர். ஆனால் அவரோ உயரம் குறைவானவர். தேசத்திற்கு சேவை செய்வது என்ற ஒரே குறிக்கோளுடன் வாழ்ந்தவர்தான் சாஸ்திரி. அவருடைய ரத்தத்தின் ஒவ்வொரு அணுவிலும் அந்த உணர்வுதான் இருந

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:43 pm

ராஜேஷ்

லால்பகதூர் சாஸ்திரி என்பது நீளமான பெயர். ஆனால் அவரோ உயரம் குறைவானவர். தேசத்திற்கு சேவை செய்வது என்ற ஒரே குறிக்கோளுடன் வாழ்ந்தவர்தான் சாஸ்திரி. அவருடைய ரத்தத்தின் ஒவ்வொரு அணுவிலும் அந்த உணர்வுதான் இருந்தது.

லால் பகதூர் சாஸ்திரி பிறந்தது 1904-ம் ஆண்டு, காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி. இவர் பிறந்த காயஸ்தர் குலத்துக்கே படிப்புதான் முக்கியம். இவரது பாட்டனாரின் மறைவினால் குடும்பம் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டது. பாடப் புத்தகங்கள் வாங்கக்கூட கையில் பணம் இல்லை.

எனவே தன்னுடன் படிக்கும் மாணவனின் புத்தகத்தை இரவில் வாங்கி விடிய விடிய தெருவிளக்கின் உதவியுடன் முழுப் புத்தகத்தையும் படித்து முடித்து விட்டார். சித்தப்பா வீட்டில் வறுமையில் வாடிய சாஸ்திரிக்கு வகுப்பாசிரியர்தான் ஆறுதலாக இருந்தார்.

1921-ல் காந்தி ஒத்துழையாமை இயக்கத்துக்கு அழைப்பு விடுத்தார். அதை நிறைவேற்ற பரீட்சையைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது சாஸ்திரிக்கு 18 வயது கூட நிறைவடையவில்லை. எனவே எச்சரிக்கை மிரட்டலுடன் விடுவிக்கப்பட்டார். 1928 மே 16-ம் தேதி, லலிதாதேவி என்கிற தனது ரசிகையைத் தான் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தன்று மணமகள் கதர் ஆடையைத்தான் உடுத்த வேண்டும் என்பதில்  உறுதியாக இருந்தார்.

சாஸ்திரி தன் வாழ்நாளில் 9 ஆண்டுகள் சிறைக் கொடுமைகளை அனுபவித்திருக்கிறார். அவரின் முதல் சிறைவாசம் தன்னுடைய மனைவி முதன் முதலாகக் கருவுற்றிருந்த காலத்தில் நடைபெற்றது.

ஒருமுறை சாஸ்திரி சிறையில் இருந்தபோது, அவருடைய மகள் உடல் நலமில்லாமல் இருந்தாள். பதினைந்து நாள் பரோலில் விடுவிக்கப்பட்டார். சுதந்திரப் போராட்டம் எதிலும் கலந்து கொள்ளக்கூடாது என்கிற எச்சரிக்கையும் அவருக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால் வீடு போய்ச் சேருவதற்கு முன்பே அவருடைய மகள் இறந்துபோனாள். உடனே சிறைக்கே திரும்பிவிட்டார் சாஸ்திரி.

முதல் முறையாக இந்தியாவில் பெண் நடத்துநர்களை நியமித்தார். காவல்துறையினர் கூட்டத்தைக் கலைக்க தண்ணீரைப் பீச்சி அடிக்கும் முறையை முதன்முதலாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் சாஸ்திரிதான்.

கோடைக்காலத்தில் அவருடைய வீட்டைக் குளு குளு வசதி செய்த அதிகாரியைக் கண்டித்தார். நீங்கள் எனக்கு சேவை செய்வதை விட்டுவிட்டு மக்களுக்கு வேண்டியதைச் செய்யுங்கள் என்றார்.

1956-ல் ஆந்திரத்திலுள்ள மக்பூநகரில் நடந்த ரயில் விபத்தில் 102 பேர் இறந்து போனார்கள். அச்சமயம் சாஸ்திரி தான் ரயில்வே மந்திரி. விபத்துக்குப் பொறுப்பேற்று தம் பதவியை ராஜினாமா செய்தார். நேரு ராஜிநாமா கடிதத்தை வாங்காமல் திருப்பிக் கொடுத்து விட்டார்.

மறுபடியும் இன்னொரு ரயில் விபத்து ஒன்று ஏற்பட்டது. அது திருச்சிக்கு அருகிலுள்ள அரியலூரில் ரயில் தடம் புரண்டது. இதில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இறந்தனர். ரயில் விபத்து ஏற்பட்ட அந்த நேரம் சாஸ்திரி ஒரிசாவுக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தார். விபத்து ஏற்பட்டதைக் கேள்விப்பட்டு தன் ராஜினாமா கடிதத்தை நேருவிடம் கொடுத்தார். இந்த முறை ராஜினாமாவை நேரு ஏற்றுக் கொண்டார். 

 ""ரயில் விபத்துக்கு சாஸ்திரி முழுக்காரணம் என்பதற்காக அல்ல, ஆனால் பெரிய பதவிகளில் இருப்பவர்கள் அவர்களுடைய துறையில் தவறு நடக்கும்போது அந்தத் தவறுக்கு முழுப்பொறுப்பு ஏற்பது அடுத்து வரும் தலைமுறையினருக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும்'' என்றார் நேரு.

பிரதமரும் மாநில முதல்வர்களும் அனைத்து அமைச்சர்களும் ஆண்டுதோறும் சொத்துக் கணக்குகளை வெளியிட வேண்டுமென்ற யோசனையை முன்வைத்தார். மந்திரியானாலும், தன்னுடைய காலணிகளுக்குத் தானே பாலிஷ் போட வேண்டும் என்று நினைப்பவர் சாஸ்திரி.

சாஸ்திரியும் அயூப்கானும் 1966-இல் தாஷ்கண்டில் நடந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டனர். தன்னுடைய மனைவியின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் உடன் அழைத்துச் செல்லவில்லை. கணவர் இருதய நோயாளி. அயூப்கானுடன் பேச்சு என்றாலே டென்ஷன் ஆகிவிடுவாரே என்று கவலைப்பட்டார் சாஸ்திரியின் மனைவி. சாஸ்திரிக்கு வெளிநாட்டில் தான் மரணம் ஏற்படும் என்று ஒரு முறை ஜோதிடர் கூறியது நினைவிற்கு வந்தது.

சாஸ்திரியின் உடல்நிலை தாஷ்கண்டிலேயே மிகவும் மோசமானது. ரஷ்ய டாக்டர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை.

எந்த பாகிஸ்தானுடன் சண்டை போட்டோமோ, அந்த நாட்டு அதிபர் அயூப்கானும் ரஷ்யப்பிரதமர் கோஸிஜின்னும், சாஸ்திரியின் உடல் இருந்த பெட்டியைச் சுமந்து கொண்டு வந்தனர்.  அவர் இறக்கும்போது வாடகை வீட்டில்தான் குடியிருந்தார். அவருடைய காருக்குத் தவணைப் பணம் கூட முழுவதுமாகக் கட்டி முடிக்கப்படாமல் இருந்தது.

ஆங்கிலேயர்களை எதிர்த்து நடத்திய  போராட்டங்களில் தன்னுடையை மனைவியையும் ஈடுபடுத்தினார். காவல்துறைக்குக் குறிப்பிட்ட உயரம் தேவை. ஆனால் அந்த துறையில் அமைச்சராக இருந்த சாஸ்திரியின் உயரம் மிகவும் குறைவு. ஆனால் அவரது சாதனைகளும், வெற்றிகளும், தியாகங்களும், நாணயமும், நேர்மையும், ஒழுக்கமும் எவெரெஸ்ட் அளவிற்கு உயர்ந்து நிற்கிறது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.