இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

முரண்சுவை-41: காம்ரேட் தாதா!

இந்தியாவில் மார்க்சீய கொள்கைக்காகப் பாடுபட்டவர்களில் தாதா அமீர்ஹைதர்கான் ஒரு முன்னோடி. இவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படித்து முடிக்கும்போது, குறைந்தது 150 வருடங்களாவது இவர் வாழ்ந்திருக்க வேண்டும் என்கிற

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:04 pm

ராஜேஷ்

இந்தியாவில் மார்க்சீய கொள்கைக்காகப் பாடுபட்டவர்களில் தாதா அமீர்ஹைதர்கான் ஒரு முன்னோடி. இவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படித்து முடிக்கும்போது, குறைந்தது 150 வருடங்களாவது இவர் வாழ்ந்திருக்க வேண்டும் என்கிற உணர்வு நமக்கு ஏற்படுகிறது.

'காம்ரேட் தாதா அமீர்ஹைதர்கான்' என்று அன்புடன் அழைக்கப்பட்ட இவர் மீரத் சதி வழக்குக் குற்றவாளிகளில் ஒருவராகச் சேர்க்கப்பட்டவர். போலீஸ் வசம் சிக்காமல் தலைமறைவாகச் சென்று கம்யூனிஸ்டு கட்சியை வளர்த்தவர். தென்னிந்தியாவில் இவர் தன்னுடைய பெயரை சங்கர் என்று மாற்றி வைத்துக் கொண்டார்.

சரோஜினி நாயுடுவின் சகோதரி சுகாசினி என்பவரின் உதவியால் சென்னைக்கு வந்தார். ஆனால் சுகாசினி சிபாரிசு செய்த ஸ்பென்சர் அதிகாரி பயத்தின் காரணமாக தம்மால் எந்தவித உதவியும் செய்து தரமுடியாது என்று கூறி பம்பாய்க்கே திரும்பிச் சென்றுவிடுமாறு அமீர்கானைக் கேட்டுக் கொண்டார். கான் சென்னையில் இருந்தபோது கம்யூனிஸ்டு கொள்கைகளைப் பற்றி சில தோழர்களின் வீடுகளில் வகுப்புகள் நடத்தினார். பக்கிங்ஹாம் கர்னாடிக் மில் தொழிலாளர்கள் பஞ்சப்படி கேட்டு வேலை நிறுத்தம் செய்தபோது கான் தொழிலாளர்களுக்கு ஆதரவாகப் போராடினார்.

பல வாரங்கள் சென்னையில் தங்கியிருந்தபோது கான் பிடிபட்டு தடுப்புக்காவல் சட்டத்தின்படி கோவை, இராஜ மகேந்திரப்புரம், பஞ்சாபிலுள்ள முசாபர்பூர் ஆகிய சிறைகளில் அடைக்கப்பட்டார். 1938-இல் விடுதலை செய்யப்பட்டார். ஒரு முறை ஜபல்பூர் சிறையில் இருந்தபோது, அங்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோûஸச் சந்தித்து உரையாடியிருக்கிறார்.

இது போன்ற பெருமைகளைக் கொண்ட தோழர் அமீர்ஹைதர்கான், 1900-ஆம் ஆண்டில் ராவல்பிண்டிக்கு அருகிலுள்ள கல்வார் மாவட்டத்தில் கலியன் இலாரியன் என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தையார் பெயர் அட்டா முகமதுகான். சிறு வயதிலேயே ஹைதர்கான் தனது ஊரை விட்டுப் புறப்பட்டுச் சென்றுவிட்டார். 1915 முதல் 1916 வரை கான் மாலுமியாகப் பணிபுரிந்தார். 1918-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்க குடிமகனாக ஆவதற்காகப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். பின்னர் அமெரிக்கப் போக்குவரத்து சர்வீசில் வேலை செய்தார். 1921-இல் நியூயார்க் நீதிபதி முன்பு அமெரிக்க குடிமகன் எனக் கருதப்படுவார் என்னும் உரிமை பெற்றார்.

அமெரிக்காவில் இந்துஸ்தான் கதார் கட்சியுடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. 1926 ஜனவரியில் அமீர் ஹைதர்கானுடன் கதார்க் கட்சியினர் ஐந்து பேர் மாஸ்கோவிலுள்ள கீழை நாட்டுப் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெறுவதற்காக அனுப்பப்பட்டனர். ஹைதர்கான் 1928-ல் இந்தியா திரும்பினார். பின்பு பம்பாயில் சவுரி என்ற இடத்தில் ஜெனரல் மோட்டார்ஸ் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார்.

சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்புகளுக்கும் இந்தியக் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே ரகசியத் தொடர்புகளுக்கும் கடிதப்போக்குவரத்துக்கும் கான் ஏற்பாடு செய்தார். 1929-இல் வி.எச்.ஜோஷி என்பவரை மாஸ்கோவுக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்தபோது அவர் சோதனைக்கு உள்ளானார். 1929-இல் அவரது வீடும் சோதனை செய்யப்பட்டது. மீரத் சதி வழக்கில் இவர் மீது பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. எனவே பம்பாயிலிருந்து தலைமறைவாகி சென்னை வந்து கப்பலேறி மார்செல்ஸ், பெர்லின் வழியாக மாஸ்கோ அடைந்தார். மாஸ்கோவில் காமிண்டர்ன் பிரதிநிதி அவரை ரயில் நிலையத்தில் வரவேற்றார்.

மாஸ்கோவில் கம்யூனிஸ்டு குடும்பம் வாழ்ந்து வந்த வீட்டிலுள்ள ஓர் அறையில் கான் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தன் பெயர் ரவீந்தர் என்று சொல்லிக் கொண்டார்.

இதற்கிடையே சிவப்புத் தொழிற்சங்கக் மாநாடு மாஸ்கோவில் நடைபெறவிருந்தது. அதில் கிழக்குப் பிரிவு பொறுப்பு கானுக்கு அளிக்கப்பட்டது, அதன் தயாரிப்புப் பணிகள் பற்றிய கூட்டங்களில் கான் பங்கு கொண்டார். 1930-இல் நடைபெற்ற 16-வது மாநாட்டிற்குக் கட்சித் தோழர்களின் ஆணைப் படி சீனாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ரஷ்யாவில் நடந்த ஒரு மாநாட்டில் மிஸ்ரா என்ற பெயரில் இந்தியத் தொழிற்சங்கக் காங்கிரசின் சார்பாக தலைமைக் குழுவிற்குத் தோழர் கான் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரஷ்யாவில் கான் தங்கியிருந்தபோது சந்தித்த சோலியா என்ற பெண்ணிடம் கான் அன்பு கொண்டு நெருக்கமாகப் பழகினார். கானைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் சோலியாவுக்கு இருந்தது. இவர் தொழிலாளி வர்க்கத்தில் பிறந்தவர். சோலியாவிடம் இந்தியாவிற்குத் திரும்ப வேண்டும் என்ற உண்மையைச் சொன்னால் அவர் மனம் அதிர்ச்சியடைவார் என்பதால் தனக்கு ஒரு முக்கியமான வேலை தரப்பட்டிருக்கிறது என்று கூறி விடைபெற்றுச் சென்றார்.

தோழர் கான்தான் தனக்கு ஏற்ற கணவர் என்று சோலியா நம்பினார். ''இது போல் ஒருவரை இனிமேல் சந்திக்க முடியாமல் போகலாம். எனது பிரிவால் எத்தகைய மனத் துன்பம் சோலியாவுக்கு ஏற்படுமோ, என்றெல்லாம் நினைத்துப் பார்த்தேன். மிகவும் வருத்தமாக இருந்தது'' என்று கான் கூறினார்.

'கடமையும் இலட்சியமும் ஒருவரை அழைக்கும் போது தனது தனி நலன்களை அவர் துறக்க வேண்டும். கொள்கையில் உள்ள விருப்பமும், மனத் துணிவும் அப்போதுதான் சோதிக்கப்படுகின்றன' என்று நம்பி தனது வழியில் நடந்த தோழர் அமீர்ஹைதர்கான், 1986 டிசம்பர் 26-ல் பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் மரணமடைந்தார்.

அமீர் ஹைதர்கானின் வாழ்க்கைப் பயணத்தைப் பார்த்தால் அது முரண்களின் மொத்த உருவமாகக் காட்சி அளிக்கிறது. விரும்பி அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர், மார்க்சீய சித்தாந்தத்தை ஏற்று பொதுவுடைமைவாதியானதைக் குறிப்பிடுவதா? இல்லை, மார்க்சிஸ்ட்டுகளின் 'மெக்கா' என்று ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்ட மாஸ்கோவில் ருஷ்யர்களால் அங்கீகரிக்கப்பட்டு தடம்பதித்தவர். தாய்நாட்டுப் பாசத்தால் பாகிஸ்தான் திரும்பி மரணமடைந்ததைக் குறிப்பிடுவதா?

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.