இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

முரண்சுவை - 43: விடுதலைக்காக உயிரைத் தந்தவர்!

பகத்சிங் ஒரு துருவ நட்சத்திரம். இந்திய வரலாற்றில் தனித்து நிற்பவர். 24வயதில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஜோதியாய்ப் பிரகாசித்த இளைஞன். தூக்குமேடைக்குப் போகும் போது...

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:34 pm

ராஜேஷ்

பகத்சிங் ஒரு துருவ நட்சத்திரம். இந்திய வரலாற்றில் தனித்து நிற்பவர். 24வயதில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஜோதியாய்ப் பிரகாசித்த இளைஞன். தூக்குமேடைக்குப் போகும் போது அவருக்கு வயது 24. சிறைக்குள் 64 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் சுமார் 150 புத்தகங்களைப் படித்து குறிப்பெடுத்து 6 சிறு நூல்களை எழுதினார்.

  மாவீரன் பகத்சிங் 1907ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி பிறந்தார். அதிர்ஷ்டக்காரப் பையன் என்று நினைத்து பகத்சிங் என்று பெயர் வைத்தார்கள். பகத் என்றால் அதிர்ஷ்டம் என்று பொருள். பள்ளியில் படிக்கும் பொழுது எல்லாப்பாடங்களையும் உருது மொழியில் தான் சொல்லிக் கொடுத்தார்கள். இந்தி,ஆங்கிலம், சமஸ்கிருதம், பஞ்சாபி எனப் பல்வேறு மொழிகளைக் கற்றுக் கொண்டார். வீட்டுக்குக் கடிதம் எழுதும் பொழுது உருது மொழியில்தான் எழுதுவார். தந்தையின் பெயர் இகிஷன்சிங். தாயார் பெயர் வித்யாவதி. பிறந்த இடம் லைலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பங்கா என்னும் கிராமம். இது தற்பொழுது பாகிஸ்தானில் உள்ளது.

    1919-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை பகத்சிங் மனதை அதிகம் பாதித்தது. அப்போது அவருக்கு வயது 12 தான். லாகூரில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். இந்தப் படுகொலை பகத்சிங் மனதில் ஆவேசத் தீயை வளர்த்தது. பகத்சிங் லாகூரிலிருந்து ஜாலியன் வாலபாக் வந்தார். இந்திய மக்கள் ரத்தம் சிந்திய மண்ணை ஒரு கைப்பிடி எடுத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டுக்கொண்டார். இந்திய மக்கள் அனுபவித்த கொடுமைகளின் நினைவுச்சின்னமாக இந்த மண் பகத்சிங்கிடம் இருந்தது.

  சுதந்திர தாகமும் போராட்டத்தீயும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த அந்த மனதில் திருமணம் போன்ற ஆசைகள் எழவில்லை. 33 கோடி மக்களின் தாயான நமது பாரத அன்னை எவ்வளவு பெரிய துன்பத்தில் இருக்கிறார். நமது அன்னைக்காக அனைத்தையும் தியாகம் செய்கிறேன். எனவே எனது வாழ்வை நான் அர்ப்பணிக்கிறேன். இந்த வரிகளை எழுதிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டார். லாலா லஜபதிராயின் மரணத்திற்குப் பழிவாங்குவதற்காகத்தான் சாண்டர்ஸ் என்னும் காவல்துறை அதிகாரியைப் பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் கொன்றனர். பகத்சிங்கிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு இதுவும் ஒரு காரணம்.

   1931-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 22-ஆம் தேதி வரை தூக்கு தண்டனை ஆணை வரவில்லை. அது 23-ஆம் தேதி பகல் தான் பிறப்பிக்கப்படுகிறது. தண்டனையை அன்று மாலையே நிறைவேற்ற வேண்டும் என்பது அந்த ஆணையின் இன்னொரு பகுதியாகும். தூக்குத் தண்டனையை எதிர் நோக்கியுள்ளதில் கொஞ்சம் கூட மனவருத்தம் இல்லாமல் இருந்தார்.

   அன்றைய நாள் முதன்மை வார்டன் சதார்சிங் என்பவருக்குப் பகலில் ஆணை வருகிறது. ஒரு புனித நூலை எடுத்துக்கொண்டு அவர் பகத்சிங்கிடம் வருகிறார். அன்று மாலையே தூக்குத் தண்டணை நிறைவேற்றப்பட இருப்பதால் புனித நூலைப் படித்து கடவுளிடம் பிரார்த்தனை செய்யுமாறு கூறினார்.  அதற்கு பகத்சிங் நான் விபரம் தெரிந்த நாள் முதல் நாத்திகனாகவே வாழ்ந்து இருக்கிறேன். என் வாழ்வின் இறுதி நாளிலும் நான் நாத்திகனாகவே இருக்க விரும்புகிறேன் என்று அடக்கத்துடன் கூறி வார்டனின் வேண்டுகோளை நிராகரித்து விட்டார்.

  அன்று முழுவதும் லெனின் வாழ்க்கை வரலாற்றைப் பகத்சிங் படித்துக் கொண்டிருந்தார். மாலை 7 மணி அளவில் சிறை அதிகாரி வந்து அவரை அழைத்தார். அப்பொழுதும் பகத்சிங் லெனின் வரலாற்றைப் படித்துக் கொண்டிருந்தார்.

புரட்சிக்காரன் ஜதின் தாசின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுகூடியதை பிரிட்டிஷ்காரன் பார்த்தான். எனவே பகத்சிங், சுகதேவ், இராஜகுரு ஆகியோரின் உடல்களை இரகசியமாக எடுத்துச் சென்று பெரோஸ்பூர் அருகில் சட்லஜ் நதிக்கரையில் தகனம் செய்து விட்டனர். நாடுமுழுவதும் அவர்களது மரணத்தால் சோகம் கொண்டது. லட்சக்கணக்கான மக்கள் பட்டினி கிடந்து அந்தப் போராளிகளுக்கு தமது அஞ்சலியைச் செலுத்தினர்.

  பகத்சிங்கின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என  காந்திஜி வலுவாகக் கோரவில்லை. ஆனால் கராச்சி காங்கிரஸ் மாநாடுவரை தூக்குத் தண்டனையை ஒத்தி போடுமாறு மட்டுமே கோரினார். காந்திஜியின் கோரிக்கையை இர்வின் ஏற்க மறுத்து விட்டார். காந்திஜி ஒருவரால் மட்டுமே பகத்சிங்கின் உயிரைக் காப்பாற்ற முடிந்திருக்கும். ஆனால் இறுதிவரை அவர் அதனைச் செய்யவே இல்லை. ஆனால் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்ததாகக் கூறினார்.

  இதன் எதிரொலியாக லாகூரிலிருந்து கராச்சி வந்த காந்திஜிக்கு வழிநெடுகிலும் உள்ள அனைத்து இரயில் நிலையங்களிலும் அவருக்கு எதிராகக் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. விடுதலைப் போராட்ட வரலாற்றிலேயே காந்திஜிக்கு எதிராக அப்போது கறுப்புக் கொடி ஆர்பாட்டங்கள் வலுவாக நடந்தது இந்த ஒரே ஒரு முறை தான்.

மக்களை மூட நம்பிக்கைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதற்காக "நான் ஏன் நாத்திகனானேன்?' என்ற நூலை எழுதினார். மதம் மற்றும் நமது சுதந்திரப் போராட்டம், மதக்கலைவரங்களும் தீர்வும், தீண்டாமைப் பிரச்னைகள் போன்ற பகத் சிங் எழுதியகட்டுரைகள் மிகவும் புகழ் பெற்றவை.

பகத்சிங் வாழும் காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்குச் சிம்மசொப்பனமாக இருந்தார். அவர் வாழ்ந்தது 24 ஆண்டுகள் என்றாலும் அந்த ஆண்டுகள் இந்திய வரலாற்றில் பல பக்கங்கள் அடங்கும். புரட்சியாளர்களை ஒடுக்குவதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் காவல்துறைக்கு அதிக அதிகாரம் தரும் மசோதாவைக் கொண்டுவந்தபோது, பகத்சிங்கும், அவரது தோழர்களும் நாடாளுமன்றத்தில் குண்டு வீசினர். துண்டறிக்கைகளையும் வீசினர். அதனால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. "செவிடர்களுக்குக் காது கேட்கவே குண்டு வீசியதாக'ப் பகத்சிங் அப்போது கூறினார்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.