இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

முரண்சுவை-38: கடன் வாங்கி பொதுக் கிணறு!

ஒரு முறை கல்கி, 'திருச்சி என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருபவை இரண்டு. ஒன்று மலைக்கோட்டை. இரண்டு பி.ஆர்.தேவர்' என்று குறிப்பிட்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க திருச்சியின் வரலாற்று நாயகன் ரத்தினவேலு தேவர்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:19 pm

ராஜேஷ்

ஒரு முறை கல்கி, 'திருச்சி என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருபவை இரண்டு. ஒன்று மலைக்கோட்டை. இரண்டு பி.ஆர்.தேவர்' என்று குறிப்பிட்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க திருச்சியின் வரலாற்று நாயகன் ரத்தினவேலு தேவர். அவரிடம் பல அரிய குணங்கள் இருந்தன. அவற்றில் முக்கியமானவை, பண ஆசை இல்லாமல் இருந்ததும் பயம் என்றால் என்னவென்று தெரியாமல் இருந்ததும் ஆகும். அந்தக் காலத்தில் திருச்சியிலிருந்த ஆங்கிலேயே அதிகாரிகளுக்கு அவர் சிம்மசொப்பனமாக விளங்கினார்.

பண்பு, அன்பு, நீதி, நேர்மை, சேவை இவற்றின் காவலராக விளங்கினார். ரத்தினவேலு 1888}ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13}ம் தேதி உறையூரில் பிறந்தார். தந்தையின் பெயர் பழனிவேலு தேவர். புகையிலை ஏற்றுமதி வியாபாரம் செய்து வந்தார். தாயாரின் பெயர் வள்ளியம்மாள். திருச்சியில் இவரது வீடுதான் சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகலிடமாகத் திகழ்ந்தது.

ரத்தினவேலு தந்தையின் வழியாகத் தனக்குக் கிடைத்த செல்வத்தைச் சுதந்திரப் போராட்டத்திற்காகச் செலவழித்தார். நாளைக்கு நம்முடைய குடும்பத்தின் நிலை என்ன? நம்முடைய பரம்பரைக்கு எந்தச் சொத்து செல்வங்களை விட்டுவிட்டுச் செல்லப்போகிறோம் என்று கூட அவர் எண்ணிப் பார்க்கவில்லை.

1923-ஆம் ஆண்டு காந்தியடிகளை அவரது சபர்மதி ஆசிரமத்தில் சந்தித்து, அவர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுத்து காங்கிரஸில் சேர்ந்தார். ரத்தினவேலுவை நேரு அவரது வீட்டிற்கு இருமுறை வந்து சந்தித்திருக்கிறார். அவரது வீட்டில் தரையில் அமர்ந்து உணவருந்தியிருக்கிறார். டாக்டர் சுப்புராயனும் உடன் உணவருந்தினார். 1927-ம் ஆண்டு ரத்தினவேலுவின் ஒரே மகளான பாப்பம்மாள் மிகவும் நோய் வாய்ப்பட்டிருந்தபோது, மகாத்மா காந்தியடிகள் பாப்பம்மாளுக்குத் தன் கைப்பட ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் கண்ணாடி பிரேம் போடப்பட்டு இன்றும் அவரது இல்லத்தில் இருக்கின்றது. ரத்தினவேலு இல்லத்திற்கு ஒருமுறை நான் சென்றபொழுது, அந்தப் புகைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன்.

தியாகி அமரர் ரத்தினவேலு 1932-ஆம் ஆண்டு காவிரியில் 40 ஆயிரம் செலவில் கிணறுகளையும், நீரேற்று நிலையத்தையும் அமைத்து மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்தார். தனது நண்பர் வக்கீல் ராமசாமி ஐயரிடம், கடனுதவி பெற்று குடிநீர் திட்டத்தை நிறைவேற்றினார். அவர் வெட்டிய அந்த 6 கிணறுகளில் இருந்துதான் இன்றும் திருச்சி நகருக்கு தண்ணீர் வருகிறது. கிணறுகள் வெட்டுவதற்காக தனது நண்பர் வக்கீல் ராமசாமி ஐயரிடம் வாங்கியக் கடனை தனக்குச் சொந்தமான சவுக்குத்தோப்பை விற்றுக் கொடுத்தார். திருச்சியில் ஜாதி, சமய மோதல்கள் ஏற்படாமல் தவிர்ப்பதில் ஈடுபட்டு பலமுறை வெற்றி கண்டார்.

ரத்தினவேலுவுக்கு சென்னையில் உள்ள காஸ்மோபாலிட்டன் கிளப்பில் நிரந்தர அறை ஒன்று உண்டு. சென்னைக்கு அவர் வரும் போதெல்லாம் பொப்பிலி ராஜா, தன் பதவியைக் கூட பொருட்படுத்தாமல் காஸ்மோபாலிட்டன் அறைக்குச் சென்று அவரைச் சந்தித்து பேசிக் கொண்டிருப்பார்.

1942-ஆம் ஆண்டு திருச்சி மத்திய சிறையில் ராஜாஜி, டாக்டர் சுப்பராயன், பிரகாசம், பக்தவத்சலம் ஆகிய தலைவர்களுடன் ரத்தினவேலுவும் 'வெள்ளையனே வெளியேறு' என்ற இயக்கத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

1925-ல் நகரசபைப் பொதுமன்றம் என்று ஒன்று இருந்தது. அதைக் கட்டி முடிக்க ரத்தினவேலு பக்க பலமாக இருந்து பல்வேறு வகையான உதவிகளைச் செய்தார். எனவே 1948- ஆம் ஆண்டு ரத்தினவேலு மறைந்ததும் அவரின் நினைவாக தேவர் ஹால் என வழங்கப்பட்டது. அவர் உயிருடன் இருக்கும் வரை தன்னுடைய பெயரை எந்த இடத்திலும் வைப்பதற்கு அவர் விரும்பியதுமில்லை. யாரையும் அனுமதித்ததுமில்லை.

திருச்சி நகரச் சபைத்தலைவராக இவர் 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 1960-களில் முத்துராமலிங்கத் தேவர் உடல் நலம் குன்றியிருந்தபோது, திருச்சியில் ரத்தினவேலு வீட்டில்தான் தங்கி சிகிச்சை பெற்றார்.

1948-ஆம் ஆண்டு திருச்சியிலிருந்து ரத்தினவேலுவின் தலைமையில் கிரிக்கெட், ஹாக்கி அணிகள் விளையாட இலங்கைக்குச் சென்றன. அங்கு சென்றவர் உடல் நிலை மோசமாகி சுயநினைவை இழந்தார். பிறகு சுயநினைவு இல்லாத நிலையில் அவரை சென்னைக்குக் கொண்டு வந்தார்கள். முடிந்த அளவிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துப் போராடிப் பார்த்தார்கள். இறுதியில் 10.5.1948-ஆம் நாள் ரத்தினவேலு தன்னுடைய தியாகத்தை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டார். அன்று திருச்சி நகரமே இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அவருக்குச் செலுத்த வேண்டிய மரியாதையைச் செலுத்தியது.

மக்கள் பணியே என் கடமை என்று செயல்பட்ட தியாகி ரத்தினவேலு தேவருக்கு சிலை நிறுவ 13 ஆண்டுகளாக இழுபறியில் இருந்தது. பின்னர் 28-1-07 அன்று முதலமைச்சர் கருணாநிதியால் சிலை நிறுவப்பட்டது.

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சுதந்திரத்திற்காகப் போராடியவர் ரத்தினவேலு. ஆனால் அவர் மறைந்த பிறகு உதயமான தி.மு.க அவருக்கு சிலைவைத்து மரியாதை செய்தது.

இன்றைய காங்கிரஸ்காரர்கள் எத்தனை பேருக்கு தியாகி ரத்தினவேலுத் தேவரைத் தெரியும்? தியாகம் விளம்பரம் தேடாது!

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.