முரண்சுவை: நாணயம், நேர்மையே சொத்து!
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் சிவகங்கைச் சீமைக்கென்று ஒரு தனிப்பட்ட வரலாறு உண்டு. அந்தத் தியாக வரலாற்றில் சிவகங்கையில் வாழ்ந்த கே.வி.சேதுராமச்சந்திரன் இடம் பெற்றுள்ளார். 1909}ஆம் ஆண்டு சிவகங்க


இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் சிவகங்கைச் சீமைக்கென்று ஒரு தனிப்பட்ட வரலாறு உண்டு. அந்தத் தியாக வரலாற்றில் சிவகங்கையில் வாழ்ந்த கே.வி.சேதுராமச்சந்திரன் இடம் பெற்றுள்ளார். 1909}ஆம் ஆண்டு சிவகங்கை நகரில் உப்புக்கடை வெள்ளைச்சாமி சேர்வைக்கும், திருமதி பொன்னாத்தாளுக்கும் பிறந்தனர் இரட்டைக் குழந்தைகள். அவர்களில் ஒருவர் சேதுராமச்சந்திரன். இன்னொருவர் ஒரு பெண் குழந்தை. தனது 16 வது வயதிலிருந்து சுதந்திரப் போராட்டங்களைச் சிவகங்கையில் தானே முன்னின்று தலைமை தாங்கி நடத்தினார்.
காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம், தனிநபர் சத்தியாக்கிரகம், கள்ளுக்கடை மறியல், உப்பு சத்தியாக்கிரகம் என அனைத்து போராட்டங்களிலும் ஈடுபட்டு 6 முறை சிறைத் தண்டனை பெற்றார். குறிப்பாக ஆந்திரா மாநிலத்தில் உள்ள அலிபுரம் சிறையில் 18 மாதங்கள் இருந்தார். 1941-ஆம் ஆண்டு இரண்டாவது உலகப் போருக்கு நிதி திரட்டுவதற்காக கவர்னர் ஆர்ச்பால்டு எட்வர்டு என்பவர் சிவகங்கைக்கு வருகை தந்தார். அப்போது அவரை வரவேற்க வரவேற்பு வளைவு ஒன்று அலங்காரமாக வைத்திருந்தார்கள். அந்த வரவேற்பு வளைவிற்கு சேதுராமச்சந்திரன் தீ வைத்தார். அதைப் பார்த்த குதிரையில் வந்த கவர்னரின் பாதுகாப்புப்படையினர் சேதுராமச்சந்திரனை சவுக்கால் அடித்தனர். 1931-ல் பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது சிவகங்கையில் இவரது வீடு ஆங்கிலேயரால் அதிரடி சோதனை நடந்தப்பட்டு சூறையாடப்பட்டது. அப்போது பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரது படங்களை நெல் கொட்டி வைக்கும் அறையில் சேதுராமச்சந்திரனின் மனைவி வேலம்மாள் மறைத்து வைத்தார். தன் கணவனின் சுதந்திரப் போராட்டங்களில் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்த பெருமை இந்த அம்மையாருக்கு உண்டு.
பெருந்தலைவர் காமராஜர், தியாகி கக்கன், பக்தவத்சலம், சி.சுப்பிரமணியம், ஆர்.வெங்கட்ராமன் போன்ற பெரிய தலைவர்களுடன் இவரும் சிறையில் இருந்தார். அரசியலில் இவர் தீவிரமாக ஈடுபட்டதால் வீடு, வாசல், நிலம், ஆடுமாடுகள் போன்றவற்றை இழந்தார். பொது வாழ்வில் இருந்த நாணயம், நேர்மை, போன்றவையே இவருடைய சொத்துக்களாயின. அந்தக் காலத்தில் இவரைச் சுற்றி ஓர் இளைஞர் பட்டாளம் எந்நேரமும் இருக்கும். இவர் சிறந்த பேச்சாளர் என்பதால், அரசியல் கருத்துகளை இளைஞர்கள் இவரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.
ஜாதி, மதம், பாராத கர்ம வீரராகத் திகழ்ந்தார். இவரது வீட்டில் 21 அரிசன மாணவர்களைத் தங்க வைத்து அவர்களுக்குக் கல்வி புகட்டினார். சேதுராமச்சந்திரன் தன்னுடைய ஆண் பிள்ளைகளுக்கு ஜவகர்லால்நேரு, வல்லபபாய் படேல், மோகன்தாஸ் போன்ற தேசத்தலைவர்களின் பெயர்களை வைத்து அழகு பார்த்தார்.
வினோபாவே பூமிதான இயக்கத்திற்கு நிலம் கேட்டபோது தன்னிடம் எஞ்சியிருந்த 5 ஏக்கர் நிலத்தைக் கொடுத்து விட்டார். இவரது பொருளாதார நிலைமையை அறிந்த வினோபாவே அதை ஏற்க மறுத்து விட்டார். இராமநாதபுரம் ஜில்லாபோர்டு உறுப்பினராகவும், சிவகங்கை தாலுகா காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பதவி வகித்தார். 1958-இல் இவரது குடும்பம் வறுமையின் காரணமாக சிவகங்கையை விட்டு மதுரைக்குக் குடி பெயர்ந்தது. இதையறிந்த காமராஜர் மலேயா நாட்டில் வாழும் மூன்று பணக்காரர்களுக்குச் சிபாரிசு கடிதம் கொடுத்து வேண்டிய நிதி உதவி பெற்றுக் கொண்டு வருமாறு சேதுராமச்சந்திரனை மலேயா நாட்டிற்கு அனுப்பி வைத்தார். ஆனால் அந்த மூன்று பணக்காரர்களிடம் பண உதவி எதுவும் பெறாமல், ஒரு டார்ச்லைட், ஒரு குடை, ஒரு ஓவல்டின் போன்ற பொருள்களை மட்டுமே வாங்கிக் கொண்டு இந்தியா வந்து விட்டார்.
பசும்பொன் தேவர் தமிழக அரசியலில் தனிப் பெரும் செல்வாக்கு பெற்று இருந்த காலத்தில் ஒரு பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் தேவரின் ஆதரவு பெற்ற வேட்பாளர் சேதுராமச்சந்திரனின் ஆதரவாளரிடம் தோற்றுப் போனார். இவரது செல்வாக்கைப் பார்த்த பசும்பொன்தேவர், சேது ராமச்சந்திரன் யார் என்று விசாரித்து தெரிந்து கொண்டு, தியாகத்தை மதிக்காத கட்சியில் இருக்கிறாரே என்று வருத்தப்பட்டார்.
இதனால் கோபமடைந்த சேதுராமச்சந்திரன் காமராஜரின் வேட்பாளர் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் த.ய. சுவாமிநாதனை எதிர்த்து சிவகங்கை இளைய ராஜா சுப்பிரமணிய ராஜாவை சுயேட்சையாக நிறுத்தி சுவாமிநாதனைத் தோற்கடித்தார். அதற்காக சிவகங்கை அரசு குடும்பம் சிவகங்கை நகரில் ஒரு பெரிய காலி மனையை தானமாக அளிக்க முன் வந்தனர். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். 1967-ல் காங்கிரஸ் கட்சி மற்றும் காமராஜர் தோல்வி இவரை பெரிதும் பாதித்தது. 1968-ல் உடல் நலம் குன்றியது. அதன் காரணமாக 27-3-1968 அன்று காலமானார்.
காங்கிரஸ் கட்சியை அரசு கட்டிலில் இருந்து இறக்கிய தி.மு.க-வின் தலைவரும், முதல்வருமான கருணாநிதி மறைந்த தென்னரசு மூலமாக அவரது குடும்பத்துக்கு பல நன்மைகளைச் செய்தார்.
சேதுராமச்சந்திரனின் மனைவி தன்னுடைய 93வது வயதில் இந்தத் தகவல்களை தன்னுடைய கணவரின் மலரும் நினைவுகளாகத் தந்து உதவினார். இவரது மனைவியின் பெயர் வேலம்மாள். தற்சமயம் மதுரையில் இருக்கிறார்.
முற்றும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...