மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கதையல்ல நிஜம்... காட்டுப் பாதையில்...

அந்த நடுத்தர வயது மனிதர் அன்று அதிக வெளிச்சமில்லாத புதிய பாதையில் போய்க் கொண்டிருந்தார்

News image
Updated On :26 ஜனவரி 2013, 10:24 am

அந்த நடுத்தர வயது மனிதர் அன்று அதிக வெளிச்சமில்லாத புதிய பாதையில் போய்க் கொண்டிருந்தார். சாலையின் இரண்டு பக்கங்களிலும் புதர்கள் மண்டிக்கிடந்தன. தெரியாத்தனமாக இந்தப் பாதையில் வந்து விட்டோமே, இருட்டாக இருக்கிறதே என்று பயந்தார். திரும்பிப் போகவும் முடியவில்லை. தொடர்ந்து நடக்கவும் பயமாக இருந்தது.

திடீரென்று ஒரு புதர் அருகே யாரோ யாரையோ மிரட்டுவது போல சப்தம் கேட்டது.

ஏன் தான் இந்தப் பாதையில் வந்தோமோ? என்று நொந்து கொண்டார். வேகமாக ஓடிப்போய் போலீசுக்கு ஃபோன் செய்யலாம் என்று நினைத்தார். அதே நேரம் பாதிக்கப்பட்ட நபரைக் காப்பாற்றப் போய் தனக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்றும் பயப்பட்டார்.

ஆனால் கேட்டது ஒரு பெண்ணின் கூக்குரல். எவனோ ஒருவன் பலாத்காரம் செய்கிறான் என்பது நொடிப் பொழுதில் புரிந்துவிட்டது. அந்த மனிதர் மேற்கொண்டு எதுவும் யோசிக்கவில்லை. தனக்கு என்ன நேர்ந்தாலும் சரி, அந்தப் பெண்ணைக் காப்பாற்றுவோம் என்று துணிந்து புதர்வெளிக்குள் பாய்ந்து அந்த மனிதனைப் புரட்டிப் புரட்டி எடுத்தார். அவருக்கு எங்கிருந்து அப்படி பலம் வந்தது என்று தெரியவில்லை. அவனும் அந்தப் பாதையில் யாரையும் எதிர்பார்க்கவில்லை. அந்த அதிர்ச்சியில் அவன் அடிதாங்க முடியாமல் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிப்போனான்.

பிறகு புதர் அருகே மூச்சுவாங்க நின்ற அந்த மனிதர், ""பெண்ணே, வெளியே வா. இனி உனக்கு ஆபத்து இல்லை. முரடன் ஓடிப்போய் விட்டான்'' என்று அழைத்தார். சில நொடிகளில் ஒரு பெண்ணின் குரல் கேட்டது: ""அப்பா நீங்களா?''

எந்தச் சூழலிலும் பிறரைக் காப்பாற்றத் துணியுங்கள். பாதிக்கப்பட்டவர் உங்கள் உறவினராகவும் இருக்கலாம். அது உங்களுக்கு அப்போது தெரியாமல் இருந்திருக்கலாம்.

தேனிலவு

கேரோல் ஆண்டர்சனின் கணவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுக் காலமானார். அந்த இளம் விதவை பின்னர் பாப் எட்வர்ட்ஸ் என்பவரை ஒரு தேவாலயத்தில் சந்தித்தார். பாப் எட்வர்ஸ் மனைவியை கார் விபத்தில் இழந்தவர். அவரும் தனிமைப்பட்டுப் போனவர். இருவரும் பல விஷயங்கள்பற்றிப் பொதுவாகப் பேசிய பின்பு சொந்த விஷயத்திற்கு வந்தார்கள். இருவரும் தங்கள் வாழ்க்கைத் துணையை மிகவும் நேசித்தவர்கள். மறு ஜென்மத்திலும் அவர்களே ஜோடியாக இருக்க வேண்டும் என்கிற அளவு அந்நியோன்யமாக வாழ்ந்தவர்கள். இரண்டு மூன்று முறை சந்தித்துப் பேசிய பிறகு ஒருவர் மீது மற்றவர் கொண்ட அனுதாபம் காதலாக மாற, இந்த இருவரும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.

ஒருவருடைய பழைய மணவாழ்க்கையை மற்றவர் கிளறிவிட்டுப் பேசவேண்டாம் என கேரோல் நினைத்தார். அதனால் அவர் தன் முதல் கணவன் பற்றி எதையும் இரண்டாம் கணவரிடம் சொல்லவில்லை. பாப் அப்படியல்ல, கேட்டாலும் கேட்காவிட்டாலும் கேரலிடம் தன் முதல் மனைவி பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். கேரல் தன் முதல் மணவாழ்க்கை பற்றிச் சொல்வதில்லையே என்றும் வருத்தப்பட்டார்.

புரட்டிப் பார்த்து மகிழ்வதற்கே நினைவுகள், புதைத்து வைப்பதற்கில்லை என்று பாப் கூறிவந்தபோதிலும் கேரல் வாய் திறக்கவில்லை. பத்து வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் கணவனை அழைத்துத் தன் முதல் மணவாழ்க்கை பற்றிச் சொல்லத் தயார் என்றாள். இவ்வளவு காலம் தாமதித்தது பாப் எதையாவது தப்பாகப் புரிந்து கொண்டு விலகிவிடக் கூடாதே என்ற பயத்தினாலும் கவலையினாலும்தான். ஆனாலும் பழைய மணவாழ்க்கை பற்றிச் சொல்வோம் என்று முடிவு செய்தபிறகு கேரல் பல விஷயங்களைச் சொல்லிவிட்டுத் தன் தேனிலவு புகைப்பட ஆல்பத்தைக் காட்டினாள். அதுநாள்வரை அவள் அதை அவன் கண்ணில் படாதபடி வைத்திருந்தாள். அதில் கேரல் தன் கணவனுடன் ஃப்ரான்சுக்குப் போனபோது புகழ்பெற்ற லூர்து மியூசியத்தில் எடுத்த புகைப்படங்களும் இருந்தன. ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிக் கொண்டு வந்தபோது, பாப், ""முந்தின பக்கத்தைத் திரும்பக் காட்டு'' என்று சொல்ல, அந்தப் பக்கத்தை மறுபடியும் புரட்டினாள் கேரல். ""இதைப்பார்  உங்களுக்குப் பின்னால் யாரோ ஒரு தம்பதி நிற்பதுபோல் தெரிகிறதே.

அதுவா, லூர்து மியூசியத்திற்குப் பலர் தினமும் வந்து போகிறார்கள். நாங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்ட போது அங்கே வந்திருந்த இன்னொரு தம்பதி காமிராவின் கண்களில் பட்டிருக்கிறார்கள். அது யார் என்று தெரியவில்லை'' என்றாள். பாப் சொன்னார், ""உற்றுப் பார். அது நானும் என் முதல் மனைவியும். நாங்களும் தேனிலவுக்கு ஃப்ரான்ஸ் தேசத்திற்குச் சென்றோம். அப்போது நீங்கள் சென்ற நேரத்தில்தான் நாங்களும் லூர்து மியூசியத்திற்கும் போயிருந்தோம் என்பது இந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் தெரிய வருகிறது. அட, அப்போதே அருகருகே இருந்திருக்கிறோம், அறிமுகமில்லாமல். இரண்டு தம்பதியும் காமிராவில் விழுந்தது தற்செயல். மணமானது தெய்வச் செயல்'' காரணகாரியங்கள் முன்கூட்டித் தெரியவருவதில்லை.

ஆதாரம்: Small Miracles, Yitta Halberstam of Judith Leventbal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.