போதிமர நிழலில்

வாய்க்காலில் சலசலவென்று ஓடும் தண்ணீரைப் போல் எங்கும் ஒரே பேச்சுச் சத்தம். அவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடுவதைப் போல் சிலர் கூட்டமாக நின்று கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர்.
போதிமர நிழலில்


வாய்க்காலில் சலசலவென்று ஓடும் தண்ணீரைப் போல் எங்கும் ஒரே பேச்சுச் சத்தம். அவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடுவதைப் போல் சிலர் கூட்டமாக நின்று கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர். காலைப் பொழுது பரபரப்புக்குச் சற்றும் பஞ்சமில்லாமல் அந்த இடம் இயங்கிக் கொண்டிருந்தது.

""கொஞ்சம் அமைதியா இருங்க. கலெக்டர் வர்ற நேரமாச்சு'' என அனைவரையும் அதிகாரம் செய்து கொண்டிருந்தவனின் குரலில் மெல்லத் தலையுயர்த்தி, கண்கள் சுருக்கிப் பார்த்தார் அன்பரசு. அப்போதுதான் சர்வீசுக்குச் சென்று வந்த வண்டியைப் போல் தங்குதடையில்லாமல் அந்தப் பணியாளன் தனக்கு இடப்பட்ட வேலையைக் கச்சிதமாகச் செய்து கொண்டிருந்தான்.

காலம் மட்டுமே மாறுகிறது. அங்கு நடக்கும் காட்சிகள் மட்டும் கீறல் விழாத படச்சுருளைப் போல் தெள்ளத் தெளிவாக அப்படியே இருக்கின்றன என ஒரு பெருமூச்சுடன் திரும்பி முன்னால் இருந்த கட்டடத்தைப் பார்த்தார்.

அந்த மாவட்ட ஆட்சியரின் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு, வெள்ளையடிக்கப்பட்டு, புளிக் குளியலில் மினுமினுக்கும் டீ பாய்லரைப் போல்
புத்தம் புதுப் பொலிவுடன் பளிச்சென்று காட்சியளித்தது. கட்டடம் மாறிவிட்டது. ஆட்சியரும் கூட மாறிவிட்டார். எத்தனை வருடங்களாக இங்கே வந்து கொண்டிருக்கிறார்? ஆனாலும் அவரின் நிலை மட்டும் கிணற்றில் போட்ட கல்லாய் அப்படியே இருக்கிறது.

பல வருடங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அவர் நடையாக நடந்து கொண்டிருக்கிறார். முன்பிருந்த ஆட்சியரிடம் கொடுத்த மனு எங்கே போனது என்றே தெரியவில்லை. முதலில் அதைக் கொடுக்கையில், ""கொடுத்துட்டுப் போங்க. பார்த்துச் சொல்லுறோம்'' என்றனர்.

அதை நம்பிக் கொடுத்தவர் தான். அந்த மனு என்ன ஆனது என இன்றுவரையிலுமே தெரியாது. ஒருவேளை அதை எதிர்ப்புறம் உள்ள கடையில் எடைக்குப் போட்டுவிட்டார்களோ என்று கூட யோசித்திருக்கிறார். இப்போது ஆட்சியாளரே மாறிவிட்டார்.

கொடுத்த மனு காணாமல் போயிருந்தாலும் பரவாயில்லை. தனக்குத் தேவை என்றால் அவர்தான் போராட வேண்டும் என நம்பிக்கையைத் தளரவிடாது புதிதாக வந்திருக்கும் ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக காலையிலேயே வந்து காத்திருக்க ஆரம்பித்துவிட்டார் அன்பரசு.

""இங்க நிக்கக் கூடாது... போங்க... தள்ளிப் போங்க...'' எனச் சற்று முன்னர் வெளிகேட்டுக்கு அருகில் சத்தம் போட்ட அதே ஆள் அன்பரசுவிடம் வந்து விரட்ட, அவனை மீண்டும் திரும்பிப் பார்த்தார்.

""ரொம்பவும் கஷ்டமாயிருக்குப்பா...'' என்றார் அன்பரசு. மெல்ல வீசிய மணம் நிறைந்த வேப்பமரக் காற்றுச் சற்றே இதமளித்தது அவருக்கு. கூடவே சாய்ந்து கொள்ளவும் ஏதுவாக இருந்தது. அதனால் அங்கே வந்து நின்று கொண்டிருந்தார். அத்தோடு நின்றிருந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்று பின்பு ஆட்சியர் வந்ததும் மீண்டும் நடந்து வர வேண்டும் என்றால் அது அவருக்கு மிகவும் சிரமமே.

அவரை மேலும் கீழுமாகப் பார்த்தான்.

தினமும் பலதரப்பட்ட மனிதர்களைப் பார்ப்பதால் இவனுக்கு மனம் மரத்துப் போயிருக்கும் எனத் தோன்றியது அன்பரசுவுக்கு. மாறாக, ஊன்றுகோலின் உதவியுடன் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டு அவர் நிற்பது அவனுக்குப் புரிந்தது போலும்.

""சரி... சரி... அப்படிக் கொஞ்சம் ஓரமா ஒதுங்கி நில்லுங்க. முன்னாடி நிக்கிறதால சார் வந்ததும் உடனே பேச ஆரம்பிக்கக் கூடாது. உங்க முறை வர்ற வரைக்கும் காத்திருக்கணும்'' என மீண்டும் மீண்டும் அவரிடம் வலியுறுத்திவிட்டு மற்றவர்களைக் கவனிக்கச் சென்றான்.

""சரிங்க... சரிங்க'' என ஊன்றுகோலின் உதவியுடன் மரத்தையொட்டிமேலும் சற்று ஒதுங்கி நின்று கொண்டார்அன்பரசு. சற்று நேரத்தில் அந்த வளாகத்தினுள் சாம்பல் வண்ணத்தில் காரொன்று வந்து நிற்க, பரபரப்புக் கூடியது. அதுவரையில் எங்கு நின்று கொண்டிருந்தாரோ, மின்னல் வெட்டியதும் பின்தொடரும் இடியைப் போல் கார் நின்றதும் உதவியாளர் ஒருவர் திடுமென ஓடிச் சென்று கதவைத்திறந்தார்.

அதிலிருந்து அழகாய் மடிப்புக் கலையாத வெள்ளைச் சட்டையும், கருநீலக் கால் சட்டையும் அணிந்து ஒரு மிடுக்குடன் மாவட்ட ஆட்சியாளர்,தங்கபாண்டியன் இறங்கினார். உதவியாளருடன் பேசியவாறே தன் அலுவலக அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தார் அவர்.

கண்ணாடியைக் கழற்றி, நைந்திருந்த தன் மேலங்கியில் துடைத்துக் கொண்டு மீண்டும் அதை அணிந்த அன்பரசு ஆட்சியாளரைக் கூர்ந்து பார்த்தார். அங்கிருந்தவர்களிடம் பொதுவாக ஒரு புன்னகையைத் தந்துவிட்டு அன்பரசுவைக் கடந்து சென்றார் தங்கபாண்டியன்.

அவரைப் பின் தொடர முயன்ற மக்களை அங்கிருந்த பணியாளன் லாகவமாக முடுக்கிவிட்டுக் கொண்டிருந்தான்.

(பளிச்சென்ற மின்னல் அன்பரசுவின்முகத்தில். )

""டேய் தங்கம்!'' என மெதுவாக அன்பரசு முணுமுணுத்தார். அவரையும் அறியாமல் விழிகளில் நீர்க் கோர்த்துக் கொண்டன.

அதற்குள் தன் அறைக்குள் நுழைந்திருந்தார் தங்கபாண்டியன். தன் இருக்கையில் அமர்ந்து, சற்றுநேரம் உதவியாளரிடம் அன்றைய முக்கியப் பணிகளைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து வரிசைப்படுத்திக் கொண்டார்.

தன் முன்னாலிருந்த கோப்பு ஒன்றில் பார்வையைப் பதித்தவாறே, ""ஆமா, அங்க என்ன கோஷம் போட்டுட்டு இருக்காங்க?'' எனக் கேட்டார் தங்கபாண்டியன்.
""அது சார்... மதுபானம் கடை இருக்கிற இடம் ரோட்டுக்குப் பக்கத்துல இருக்காம். பெண்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் அந்த வழியா தினமும் போறாங்களாம். அதனால் சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள்அடிக்கடி ஏற்படுதாம் சார்'' என உதவியாளர் மேற்கொண்டு தொடரும் முன்னர்,

""அதைப் பார்த்துக்கறதுக்கு "போலீஸ்' இருக்காங்களே. இவங்களுக்கு என்ன வந்தது?'' என எரிச்சல்பட்டார்.

""அதுவுமில்லாம வண்டி ஓட்டறவங்களுக்குச் சுலபமா மதுபானம் கிடைக்கிறதால வாங்கிக் குடிச்சுட்டு வண்டி ஓட்டறாங்களாம் சார். இதனால அந்தச் சுற்று வட்டாரத்துல நிறைய விபத்து நடக்குதுன்னு மனு கொடுத்துப் போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க'' என்றார் உதவியாளர்.

""எந்த ஊருக்குப் போனாலும் இவங்களோட இதே ரோதனை. ரோட்டுக்குப் பக்கத்துல கடையை வைக்காம காட்டுக்குள்ள போயா வைக்க முடியும்?இப்படி அர்த்தமில்லாமல் பேசி, கோஷம் போட்டுட்டு இருக்காங்க. இந்தச் சில்லறை விசயத்துக்கு எல்லாம் நம்ம தலையைஉருட்டு வாங்க. நமக்கு வேற வேலையில்லை பாருங்க'' எனச் சலித்துக் கொண்டார் தங்கபாண்டியன்.

காலையில் வந்ததும் முதல் வேலையாக, அதுவும் முதல் நாள் இங்கே பணிக்கு வந்ததும் அவர்களைச் சந்திக்க அவருக்குச் சற்றும் விருப்பமில்லை. காத்திருந்து பார்க்கட்டும்.

""இவங்களுக்கு வேற வேலையில்லை. கொஞ்ச நாள் அலையட்டும் இளங்கோவன். அவங்க காத்திருக்கட்டும். அப்புறம் வேற யார் வந்திருக்காங்க?'' என தங்கபாண்டியன் உதவியாளரைப் பார்த்துக் கேட்க, "யார் யார் வந்திருக்கிறார்கள்' என ஒரு பட்டியலை வாசிக்க ஆரம்பித்தார்.

இறுதியாக, ""அப்புறம் மாற்றுத்திறனாளி ஒருத்தர் உங்களைப் பார்த்து மூன்று சக்கர சைக்கிள் வாங்கறதுக்கு மனு கொடுக்கணும்னு சொன்னார். கொடுத்துட்டுப் போகச் சொன்னா "கலெக்ட்டரை' நேர்ல பார்த்தே ஆகணும்னு மூணு வாரமா வந்துட்டு இருக்கார்'' என இழுத்து நிறுத்த,

""சரி... அவரை முதல்ல அனுப்புங்க'' எனத் தன் கையில் இருந்த கோப்புகளில் மீண்டும் கவனத்தைப் பதித்தார் தங்கபாண்டியன்.

சில நிமிடங்கள் கழித்து, "டொக்' "டொக்' என்ற ஊன்றுகோல் சத்தத்தைத் தொடர்ந்து, ""டேய் தங்கம்'' என்ற குரலில் தலையுயர்த்திப் பார்த்தார் தங்கபாண்டியன்.

""என்னய்யா நீ? சாரை அப்படியெல்லாம் கூப்பிடக் கூடாது'' என அவர் உதவியாளர் பதட்டத்துடன் அவரைக் கடிய, மலர்ந்திருந்த அன்பரசுவின் முகம் சுருங்கிவிட்டது.
""மன்னிச்சுக்கோங்க... மன்னிச்சுக்கோங்க...'' என அவரிடம் சொல்லிவிட்டு தங்கபாண்டியனை நோக்கி முன்னேறினார் அன்பரசு.

"யார் இவர்?' என தங்கபாண்டியன் புருவங்களைச் சுருக்கிஅவரைப்பார்த்தார்.
"தனக்குத் தெரிந்தவர் யாரோ' என அவர் புத்திக்கு எட்டினாலும் சட்டென அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.

சற்றுநேரம் வந்தவரைக் கூர்ந்து பார்த்தார்.

தன்னை எல்லோரும் பாண்டியன் என்றே அழைப்பார்கள். அவர் சிறுவயதில் இருக்கும் போது படித்த பள்ளியில் மட்டுமே அவரைத் தங்கம் என்று அழைத்தனர்.

அதற்குள் அன்பரசு மேஜையின் அருகே நெருங்கி, ""என்னைத் தெரியலையா?'' எனக் கேட்க, இடது புருவத்தை ஒட்டி, ஓர் அங்குலத்திற்கு நெற்றியில் இருந்த அந்தத் தழும்புக் கண்களில் பட்டது. கூடவே பால்ய வயது நிகழ்வுகளும் மறு ஒளிபரப்பாகின. அடையாளம் தெரிந்துவிட்டது!

தன் மிதிவண்டியில் "டபுள்ஸ்' அடிக்கிறேன் என்று இதே அன்பரசுவைப் பின்னால் வைத்துக் கொண்டு போய்க் கொடை சாய்த்தது முதல் கீழிருந்த கூரிய கல்லொன்று அன்பரசுவின் நெற்றியைப் பதம் பார்த்து ரத்தம் பீறிட்டது வரையில் நினைவடுக்குகளில் இருந்து தூசு தட்டி எடுக்கப்பட்டன. அந்தத் தழும்பு!

நண்பனும் சரி, நண்பனின் பெற்றோரும் சரி, மனம் வருந்தி எதுவும் சொல்லவில்லை என்றாலும் தங்கபாண்டியனின் தந்தை அவரை உண்டு இல்லை என்றாக்கிவிட்டார். பின்னே மிதிவண்டியே சரியாக ஓட்டத் தெரியாத பொழுது இன்னொருவரையும் உடன் வைத்து "டபுள்ஸ்' அடித்தால்?

மனமலர்ச்சி இதழ்களில் புன்னகையைத் தழைக்கச் செய்ய, ""டேய் அன்பரசு'' எனச் சட்டென்று தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்து நண்பனின் கைகளைப் பற்றிக் கொண்டார் தங்கபாண்டியன்.

""ஞாபகமிருக்கா?'' எனக் கேட்ட அன்பரசுவின் கைகளில் மெலிதான நடுக்கம். மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தார்.

பால்ய வயது சிநேகிதனைப் பார்த்ததே மகிழ்ச்சியென்றால் இப்படியொரு அதிகார பதவியில் பார்ப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. அந்த நண்பனுக்குத் தன்னை அடையாளம் தெரிந்திருந்தது எல்லாவற்றையும் விடப் பெரிய மகிழ்ச்சி.

""தங்கம், நீ எப்படிடா இருக்க?'' என்ற உருக்கமான குரலில் மனம் கரைந்தது தங்கபாண்டியனுக்கு. எத்தனை வருடங்களாகிவிட்டது? இன்னுமே நண்பனின் ஆழ்மனதில் தனக்கான அன்பு புதைந்து கிடப்பதை உணர்ந்ததும் ஒருவித பரவசம் அவரை ஆட்கொண்டது. நண்பனின் உருவம் மங்கலாகத் தெரிந்த பின்னரே தன் கண்கள் கலங்கி இருப்பது அவருக்குப் புரிந்தது.

""என்னை விடுடா? நீ ஏன் இப்படி? என்ன கோலம் இது?'' என அன்பரசுவை தோளோடு அணைத்தவாறே மெதுவாக நாற்காலியின் அருகில் கொண்டு சென்று அதில் அமர வைத்தார் தங்கபாண்டியன்.

""என் கதையை விடுடா... நீ நல்ல நிலைக்கு ஒருநாள் வருவன்னு எனக்குத் தெரியும்'' என்ற அன்பரசு, கிடைப்பதற்கரிய பொக்கிஷம் கிடைத்ததைப் போல் நண்பனின் கையை மெதுவாகத் தொட்டுத் தடவினார்.

"தான் இந்த நிலைக்கு வருவேன் என்று நினைத்தானா நண்பன்?' என அன்பரசுவைக் கனிவுடன் நோக்கினார். அன்பரசு அல்லவா தன்னைவிட மிகச் சிறந்த நிலைக்கு வருவான் என்று அவர் எதிர்பார்த்தார். எங்கோ பெரிய பதவியில் நண்பன் இருப்பான் என எண்ணியிருந்தார்.

அவர்கள் ஒன்றாகப் படித்த காலத்தில் அவர் வகுப்பிலேயே நன்றாகப் படிக்கும் மாணவன் அன்பரசு தான். தங்கபாண்டியனோ பரீட்சையில் "பார்டர்' மதிப்பெண்கள் எடுக்கும் மாணவன். அதுவும் அன்பரசு கற்றுத் தந்து உதவியதால்.

""வாத்தியார் பிள்ளை மக்குன்னு சொல்லுறதைச் சரின்னு காட்டறியே. அன்பரசுவோட அப்பா காரோட்டி, கஷ்டப்பட்டுப் படிக்க வைக்கிறார். அவன் கஷ்டம் உணர்ந்து ஒழுங்கா படிக்கிறான். அவனைப் பார்த்தாவது கத்துக்கோ'' என அடிக்கடி மந்திரம் போல் உதிர்த்த தந்தையின் சொற்கள் தங்கபாண்டியனின் செவிகளில் மீண்டும் உரசிச் சென்றன.

புன்னகையுடன் தன் உதவியாளரிடம் அன்பரசுவுக்குச் சாப்பிடச் சிற்றுண்டியும், டீயும் வாங்கி வரப் பணித்துவிட்டு, ""சொல்லுடா அன்பு, என்னடா ஆச்சு உனக்கு ?'' என அவருக்கு முன்னால் இருந்தமேஜையின் மேல் அமர்ந்து ஒரு காலை மட்டும் தரையில் ஊன்றி நண்பன் சொல்வதைக் கவனிக்க ஆரம்பித்தார் தங்கபாண்டியன்.

""எனக்கு ஒரு மூன்று சக்கர சைக்கிள் இருந்தா வசதியா இருக்கும். என்னை மாதிரி இருக்கிறவங்களுக்கு அரசு இனாமா கொடுத்து உதவறதா கேள்விப்பட்டேன். அது மட்டும் கிடைச்சா வாழ்க்கையை ஓட்டிடுவேன்'' என வெள்ளந்தியாய் சிரித்த நண்பனின் சிரிப்பில் நிறைவைக் கண்டார்.

அவர் எட்டாவது படித்து முடித்த வேளையில் அரசுப்பள்ளியில் ஆசிரியர் பணியில் இருந்த தன் தந்தைக்கு வேறு ஊருக்கு மாற்றல் வர அந்த ஊரில் இருந்து சென்றுவிட்டார் தங்கபாண்டியன். இப்போது போல் தொலைபேசி வசதி எல்லாம் எல்லாரிடமும் அன்று கிடையாது. அதனால் நாளடைவில் அன்பரசுவின் தொடர்பும் விட்டுப் போனது.

அவ்வப்பொழுது தான் படித்த அந்தப் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று எண்ணுவார் தங்கபாண்டியன். ஆனால் படிப்பு, வேலை, குடும்பப் பொறுப்பு, திருமணம், பணிச்சுமை எனப் பல காரணங்களால் அது நிறைவேறாமலேயே போய்விட்டது.

உதவியாளரின் கட்டளைப்படி அங்கு வேலைக்கு இருந்தவர் சிற்றுண்டியுடன், டீயை வைத்துவிட்டுச் செல்ல, அதைச் சாப்பிட்டவாறே நண்பனின் வாழ்க்கையில் நடந்த மொத்தத்தையும் கேட்டு அறிந்து கொண்டார் தங்கபாண்டியன்.

அன்பரசுவின் தந்தை மாணிக்கம் கார் ஓட்டுநராகப் பணியாற்றியே தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். அன்பரசுவுக்குத் தந்தையுடன் காரில் போவது என்றால் அவ்வளவு விருப்பம். காரில் செல்வதை விடக் காரைப் பற்றி அறிந்து கொள்வதில் கொள்ளை ஆர்வம். கார் எப்படி இயங்குகிறது, அதில் என்னென்ன பாகங்கள் இருக்கின்றன என்பதில் தொடங்கி, கார் தயாரிப்பதற்கு என்ன படிக்க வேண்டும் என்பது வரையில் தெரிந்து வைத்திருந்தான் சிறுவன் அன்பரசு. அதையே தன் வாழ்க்கையின் லட்சியமாகவும் கொண்டிருந்தான்.

அன்பரசுவின் புத்திக் கூர்மையை வியந்து பலமுறை தங்கபாண்டியனின் தந்தை பாராட்டி இருக்கிறார். அவரே பாராட்டுகிறார் என்றால் அன்பரசு நிச்சயம் அறிவாளியே!

ஒரு தரம் அன்பரசு தன் தந்தையுடன் காரில் சென்ற போது எதிரில் வேகமாக வந்த "வேன்' ஒன்று இவர்கள் காரின் மேல் மோத, அவன் தந்தை விபத்து நடந்த இடத்திலேயே இறந்து போனார். அன்பரசுவுக்கு வலது கால் துண்டிக்கப்பட்டது. அன்பரசுவை கவனித்தே அவன் அன்னை தளர்ந்து, நோய்வாய்ப்பட்டார். அதற்கு மேல் அன்பரசுவால் எப்படிப் படிப்பைத் தொடர முடியும்?

""குடிச்சுட்டு வந்த வேன் டிரைவரால எல்லாம் முடிஞ்சு போச்சு. ஏதோ, பதினொன்னாவது வரைக்கும் படிச்சிருந்ததால டியூஷன் எடுத்துப் பொழப்பு ஓடுது தங்கம்'' என முடித்து விட்டு, வறண்டு போன தொண்டைக்கு இதமாகக் கிளாசில் இருந்த டீயை உறிஞ்சினார் அன்பரசு.

"குடி ஒரு குடியைக் கண்டிப்பாகக் கெடுத்து
விட்டது. அதுவும் தன் அருமை நண்பனின்
குடியை' தங்கபாண்டியனின் மனம்
பிசைந்தது.

""அந்த மனுவைக் கொடு. உனக்கு மூன்று சக்கர சைக்கிள் கிடைக்க ஏற்பாடு பண்ணறேன்'' என அவர் கையில் இருந்ததை வாங்கிப் பத்திரப்படுத்திவிட்டு,
""போய் உள்ளே உட்காரு அன்பு. மிச்ச வேலையை முடிச்சுட்டு வரேன். நம்ம நிறையப் பேசணும்'' என நண்பனிடம் சொன்னவர், உதவியாளரை அழைத்து, ""இவரை உள்ளே உட்கார வைங்க இளங்கோவன்'' என்றார்.

மேலதிகாரி சொன்னதைச் செய்துவிட்டு உதவியாளர் திரும்பி வரவும்,""அந்த மதுக் கடையை மூடணும்னு கோஷம் போட்டுட்டு இருக்காங்களே அவங்களைப் பார்க்கலாம் வாங்க'' என்ற தங்கபாண்டியன், உடனே வெளியில் வேகமாகச் சென்றார். ஒன்றும் புரியாமல் ஓட்டமும், நடையுமாக அவரைப் பின்பற்றிச் சென்றார் உதவியாளர்.

பொதுமக்கள் சொன்னதை எல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்ட தங்கபாண்டியன், இறுதியில், ""அந்த மதுக்கடை இனி அங்கே இருக்காது. நான் பார்த்துக்கிறேன்'' என்றார் உறுதியாக. இதனால் பல இன்னல்களைச் சந்திக்க நேரிடும் என்று தெரியும் அவருக்கு. ஆனால் எந்தப் பிரச்னை வந்தாலும் சமாளிப்பேன் என்ற தன்னம்பிக்கை மிளிர்ந்தது அவர் முகத்தில்.

எந்தப் போதிமர நிழலில் இவருக்கு ஞானோதயம் வந்தது என வியப்புடன் தங்கபாண்டியனைப் பார்த்தார் அவர் உதவியாளர்.

நண்பனின் வாழ்வை மீட்க முடியாது. காலம் கடந்துவிட்டிருந்தது. ஆனால் இனி வரும் காலங்களில் சில அன்பரசுகளின் வாழ்க்கையையாவது மிளிரச் செய்யலாமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com