மாற்றமே வலியாக!

கோயிலில் கூட்டமே இல்லை.  சந்நிதிக்கு எதிரே ஒரு மூலையில் விரித்திருந்த சாயம் போன,  ஜமுக்காளத்தில், நானும், சபாபதியும்! 
மாற்றமே வலியாக!

கோயிலில் கூட்டமே இல்லை. சந்நிதிக்கு எதிரே ஒரு மூலையில் விரித்திருந்த சாயம் போன, ஜமுக்காளத்தில், நானும், சபாபதியும்!

மூச்சுக் காற்று , மெல்லிய இழையாக , என் நாதஸ்வரத்தில் இசையாய் வழிய, சபாவின் விரல்கள் தவிலில் மின்னல் வேகத்தில் நடனம் செய்து கொண்டிருந்தன. காற்றோடு கலந்து மோகனம் குழைந்தது. யாருக்கும் எங்கள் நாதத்தை நின்று கேட்க நேரமில்லை. அதை மனமும், கண்களும் உணர்ந்த வலி இப்போது பழகி விட்டது.

''மாதச் சம்பளத்துக்கு என தினமும் கோயிலில் வாசித்தால். அப்புறம். கல்யாணம், திருவிழான்னு வாசிக்கப் போக முடியாது என்று முதலில் மறுத்துவிட்டு , இப்போது வாசிக்கறவர் வராத அன்று மட்டும் அது முன்னூறோ.. ஐநூறோ.. எத்தனை தந்தாலும் பரவாயில்லை என்று தலையாட்டும் நிலைமைதான், எங்களுக்கு. . பெண்ணின் கல்யாணம். பையனின் படிப்பு. தள்ளவே முடியாத தேவைகள்!''

எங்கள் தன்மானத்துக்கு நாங்களே வைத்துக் கொண்ட முற்றுப்புள்ளியோ இது என்று முதலில்தான் தயக்கம் இருந்தது. வாழ்க்கை கேள்விக்குறியாகாமல் இருக்க வேண்டுமே!

வாசிப்பு முடிந்தது. நாதஸ்வரத்தைக் கும்பிட்டு, உறையிலிட்டேன். சபாபதியின் யாழ்ப்பாணத் தவில். பளபளப்பு இழந்திருந்தது, அவன் முகம் போலவே. அவன் மனைவி, சரசுவுக்கு உடம்பு சரியில்லை. இருந்தாலும், வாசிப்பில் பின்னி விட்டான்.

ஆஃபீஸர் வெளியில் சென்றிருக்க, அன்றைய வாசிப்புக்கான பணத்தை நாளை தருவதாகச் சொல்லவும் எனக்கு ஐயோ, சபாபதிக்கு ஹாஸ்பிட்டல் போகப் பணம் வேண்டுமே என்றிருந்தது. நான் அவசரமாக சட்டைப்பையைத் தடவினேன்.

''பரவாயில்லண்ணே! ஒருநாள்தானே..ஒண்ணும் ஆயிடாது''

சோகப் புன்னகையுடன் சபா சொல்ல அது ஊசியின் கூர்மையாய் என் இதயத்தில் இறங்கியது. ஆறுதலாய் ஏதும் சொன்னாலும் அவனுக்கு வலிக்கும் என்று மெளனமாய் வீடு வந்தோம்.

அப்பாவே என் குருவாக, ஊர் போற்றும் நாதஸ்வரக் கலைஞனான அவரது நாதம் கேட்டுத்தான் வளர்ந்தேன். அது என் சுவாசமானது. அப்பாகூடத்தான் எங்க ஊர்க் கோயில் திருவிழாவில முதல் கச்சேரி.

தியாகபிரம்மம் திருக்கோயில் . தளும்பிய காவிரியைப் பார்த்துக் கொண்டே, ''உன் மூலமா இந்த நாத ஊர்வலம் தொடரப் போறது மனசு நிறைவா இருக்கு.''
''கடுமையா சாதகம் பண்ணனும். நல்லா வருவே கணேசா.. அப்பா சொல்ல.. நெற்றி நிறைய நீறுடன், அவரை வணங்கி நாதஸ்வரத்தைக் கையில் எடுத்த அந்த நினவு ..காவிரியின் சிலுசிலுப்போடு மனதில், இன்னும் ஈரமாக''

''உங்க நாதம் வெறும் காதை மட்டும் நிறைக்கறது இல்லைங்க! பொன்னை உருக்கி ஓட விட்டாப்பில, அப்படியே ஒரு ஜிலுஜிலுப்பு. மனசைக் கட்டி, ஒரு மாய உலகத்துக்குக் கொண்டு போயிடுச்சு. நீங்க நிறைய மெடல், விருது எல்லாம் வாங்கணும்'' என்று பாராட்டிப் போர்த்திய பொன்னாடைகள். கை தட்டல்கள், உதிர்ந்த பன்னீர் ரோஜாக்களின் மணம் கூட.. இன்னும் மனதில்!

''என்னங்க.... சபாபதி அண்ணன் வந்திருக்காரு.''

லட்சுமி என் தோளைப் பிடித்து உலுக்க.. நிமிடத்தில் இந்த உலகத்துக்கு வந்து விட்டேன்.

''வெளில போயிட்டு வந்த அசதில அப்படியே தூங்கிட்டீங்க போல..''

''இல்ல.. பழைய நினைப்பெல்லாம் .படமா ஓடிட்டு இருந்துச்சு. .உங்கிட்டே , சபா ஏதாவது சொன்னானா ?'' என்றேன்.

''இல்லையேங்க. .ஏதும் பிரச்னை. கஷ்டம்ன்னாத்தான் இப்படி மெளனமா ஆயிடுவார்.இப்போ சரசு கவலையை விட பணம் கிடைக்குமாங்கற பெரிய கவலைதான் அவருக்கு. நம்பிக்கையோட வந்திருக்காரு. பணத்தைக் கொடுத்து அனுப்புங்க. சரசுவை ஆஸ்பிட்டல் கூட்டிட்டுப் போகட்டும்.''

கோயிலில் வாங்கிய சட்டைப் பையிலிருந்த பணத்தைத் தடவிப் பார்த்தபடி , வராண்டா பக்கம் திரும்பினேன்.

வாசலை வெறித்தபடி உட்கார்ந்திருந்த சபாபதி என்னைக் கண்டதும் எழுந்து விட்டான், பையிலிருந்த பணத்தை எடுத்து அவன் கையில் வைக்க, தயங்கியபடியே வாங்கிக் கொண்டான்.

''என்ன சபா , நீ வாசிச்சதுக்கான பணம்தானே இது. அப்புறம் என்ன? அடுத்த வாரம் கூட கோயில்ல வாசிக்கிறோம். சொல்லிட்டாங்க!''

''இல்லண்ணே, போனவாரம் அந்தக் கல்யாண வீட்டில நடந்ததே என்னால இன்னும் தாங்க முடியல. இப்போவும் எனக்காகத்தான் ! வாசிக்கிறீங்க.. ''

''இல்லடா.. எனக்காகவும்தாண்டா போறேன். தேவை எனக்கும்தான் . நாம இப்போ இருக்கற நிலைமையில நடந்தது எதையுமே திரும்பிப் பார்க்கக் கூடாது. உனக்கு முன்னால உன் பையன் படிப்பு, அவன் எதிர்காலம்... . இது மட்டும்தான் தெரியணும்.... புரியுதா?''

என் குரலில் தெரிந்த உறுதியில், அவன் தலை தானாக சரி என அசைந்தது.

அதற்குள் லட்சுமி சாப்பிடக் கூப்பிட, தவில் அடித்துக் காய்த்துப் போன கைகளைக் கழுவிக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தான். முகத்தைக் கழுவித் துடைத்துக் கொண்டே சபாபதியைப் பார்த்தபோது, கழுத்தோரம் நைந்து போயிருந்த சட்டையுடன் பரிதாபமாயிருந்தான்.

'' சபா,சரசுவுக்கு ஒண்ணும் இருக்காது, இன்னும் கொஞ்ச நாள்ல வேலைக்குப் போயிட்டா.. அப்புறம் .... ராஜாதான் நீ.''

'' ராஜா ......ம்ம்ம்ம்..''

''போன வாரம் நாம வாசிச்ச கல்யாணத்தில கூட பொண்ணும் மாப்பிள்ளையும் ராஜா ராணி போலத்தானே . மேக்கப் போட்டிருந்தாங்க..''

சாப்பாடு உள்ளே போனதும், பழைய சபாவாய்ப் பேச்சு வந்தது.

'ஆனா. அவங்கல்லாம், மேக்கப் இல்லாட்டாக் கூட எப்பவும் ராஜாதாண்ணே... நாம..''

''சரிகை வேஷ்டி, சட்டைன்னு மேக்கப் போட்டாக் கூட , இளப்பமாத்தானே பார்க்கிறாங்க..''

''என்ன இருந்தாலும் பணத்தைத் தானே அண்ணே பார்க்கிறாங்க.''

''நம்மகிட்டே இருக்கற இசை தெய்வீகக் கலை டா. உயிர்மூச்சை இசையாக்கிறோம்.''
''நமக்குத் தெரிந்த ஒரே தொழிலும் ...இதுதான்.''
''இப்போ,இந்தத் தெய்வீகக் கலை. வருமானங்கற நூலைப் பிடிச்சுத் தொங்கிட்டிருக்கு. அது அறுந்தா, வாழ்க்கையே அதல பாதாளத்திலங்கற நிலைல இருக்கோம். ஒரு கலைஞனுக்கு இப்படி வரக்கூடாதுதான்... ஆனா.. இதுவும் மாறும்... ..ஆஸ்பிட்டல் போயிட்டு ஃபோன் பண்ணு.''
''பதினைந்து வருடங்களாய் என்னுடன் வாசிக்கிறான். சபாவின் தவில் இல்லையென்றால், என் நாதஸ்வரம் எடுபடாது என்று சொல்வார்கள். அத்தனை சுத்தமான வாசிப்பு. தாளக்கட்டு அப்படி நிற்கும். விரல்கள் பேசும். நாதஸ்வரத்தை நிறுத்திவிட்டு அவன் தனி ஆவர்த்தனத்தை நானே நிறைய நேரம் கேட்டதுண்டு. அவன், அப்பா, தாத்தா என்று எல்லாருமே தவில் வித்வான்கள்தான்.''
ரொம்ப நாளைக்குப் பின் வந்த ஒரு பெரிய இடத்துக் கல்யாணம்.போன வாரம் புக் ஆயிருந்தது.
கல்யாண மண்டபத்தில் முதல் நாள் வரவேற்பு.
''மண்டபமே தங்கமா ஜொலிக்குதுண்ணே. பெரிய இடம்தான் போல..''
''பின்னே பதினைந்தாயிரம் கை நீட்டி வாங்கியாச்சுல்ல.... பத்து கல்யாணத்தில ரெண்டு கல்யாணம்தான் இப்போல்லாம் கொஞ்ச நேரமாவது நாதஸ்வரம் வாசிக்கச் சொல்றாங்க . மத்தவங்க எல்லாம் தாலி கட்டறப்போ மட்டும்தான்! ஒண்ணும் பேச முடியாது. ஐஞ்சாயிரம்னாலும் சரின்னுதான் சொல்லணும்.''
தோளில் தொங்கிய தவிலைச் சரி செய்தபடிபோட்டிருந்த பட்டுச் சட்டையைத் தடவிக் கொண்டான் சபா.
நழுவிய சரிகை அங்கவஸ்திரத்தை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, நாங்கள் மண்டபத்தில் நுழைய, அங்கே யாருமே வந்திருக்கவில்லை.
தங்கத்தைக் கரைத்துப் பூசியது போல, மேடையும், மண்டபமும் தேவலோகமாய் மின்ன, மலர் அலங்காரம் கண்ணைப் பறித்தது.
''வந்துட்டீங்களா? இன்னும் நேரம் இருக்கே. சரி அப்படி உட்கார்ந்து ஆரம்பிச்சுடுங்க. மாப்பிள்ளை வந்ததும் கோயிலுக்குப் போகலாம்..'' என்று சரிகை வேட்டியுடன், மேடைக்கு வந்த ஒருவர் கை காட்டிய இடத்தில், மேடையின் ஓரமாய் ரத்தினக் கம்பளம். கண்ணைப் பறித்தது.
மனதார அப்பாவை, இறைவனைத் தியானித்து விட்டு, சுருதி சேர்த்து, சபாபதி தவில் ஒத்திகை பார்த்து முடித்ததும், கணபதி துதியை, நாட்டையில் ஆரம்பித்தேன். யாருமில்லா மண்டபத்தில் என் நாதமும், சபாவின் தவிலும், இடி போல் எதிரொலிக்க, , இனிமை சேராத இசை எனக்கே ஒரு மாதிரி இருந்தது.
கொஞ்சம் கூட்டம் வந்தால் சரியாகுமோ என்கிற என் நினைப்பு பாதியில் நின்றது.
''மாப்பிள்ளை வந்தாச்சு, முன்னாடி கோயிலுக்கு வாங்க'' என்று அவசரப் படுத்தியதால், விநாயகரைப் பாதி வழியில் நிறுத்தி விட்டு, கோயிலுக்கு விரைந்தோம்.'
''அஞ்சு நிமிஷம் கூட வாசிக்கலைண்ணே'' என்று மெல்ல முணுமுணுத்தான் சபா.
கோயிலில் மாப்பிள்ளை வந்திருக்கவில்லை. அந்தச் சிறிய இடத்தில் கல்யாண வீட்டுக்காரர்களுக்கே நிற்க இடமில்லாமல், நாங்கள் வெளியே நிற்க வேண்டியதாயிற்று. பளபளக்கும் பட்டு. மின்னும் வைரம். எல்லாம் பிள்ளையாரைச் சுற்றி நிற்க, நாங்கள் பரிதாபமாக சாலையோரம் நின்றோம். ஒரு இருபது நிமிடங்கள், சபாவின் முகத்தில் கோபம் . எரிச்சல். பார்லரில் லேட்டாகி விட்டது என்று மாப்பிள்ளை. ராஜ அலங்காரத்தில் வந்தார்.

ஆனந்தமாய் ஒரு ஆலாபனை ஆரம்பிக்க, சபா ஈடு கொடுத்தான்.

அய்யர் பூஜை ஆரம்பிக்க, பாதியில் அறுந்தது இசையின் இழை. பூஜை முடிந்து, மாப்பிள்ளை அழைப்பு ஆரம்பமானதும் முன்னால். நானும் சபாவும்விட்ட ஆலாபனையை உற்சாகமாகத் தொடர்ந்தோம்.


''மேடையில மட்டும்தாங்க வாசிப்பேன். ரோடில்லெல்லாம் நடந்துட்டு வாசிப்பு இல்லை.'' என்று கல்யாணத்துக்கு நாதஸ்வரம் புக் பண்ண வந்தவர்களிடம் பேசியதெல்லாம், ஏதோ போன ஜன்மம் போல் தோன்றியது. சாமி ஊர்வலம் தவிர, கல்யாணங்களில் நடந்து கொண்டே வாசிப்பது, எனக்கும், சபாவுக்கும் பிடிக்காத ஒன்றாய் இருந்தது!காலத்தின் கோலம் மாற, எங்கள் பாதையும் வளைந்து, நெளிய வேண்டியதாயிற்று.

பணம் என்கிற மையத்தையே நோக்கி வாழ்க்கையின் அத்தனை கைகளும் நீள, நாங்களும் அதை நோக்கியே ஓட வேண்டிய நிலைக்கு வந்து ரொம்ப நாள்களாயிற்று.

எனக்காவது, அப்பாவின் பூர்வீக வீடு, கொஞ்சம் சொத்து இருந்தது. பாவம் சபாபதி. தவில்தான் அவனுக்கு எல்லாமே!

அவனுக்காகவே இந்த மாதிரி இறங்கி விட்டேன் என்று இப்போதெல்லாம் அடிக்கடி புலம்ப ஆரம்பித்து விடுகிறான்.

மண்டபத்திற்குள்ளேயே கோயில் இருந்ததால், ரொம்ப தூரம் நடக்காமல், உள்ளே போய் விட்டோம். நிறைந்திருந்த மண்டபத்தின் கலகலப்புக்கு நடுவே எங்கள் இசை தொடர்ந்தது. எந்தத் தடையும் இல்லாமல் ஒரு பாடலாவது முழுக்கப் பாடி விட வேண்டும் என்று வாசிப்பைத்தொடர, ராணி போல் மணப் பெண் வந்ததும் , ஒவ்வொருவராய் மேடைக்கு வர ஆரம்பித்தார்கள். .விரித்திருந்த ரத்தினக் கம்பளத்தை மிதித்துக் கொண்டும், எங்களை இடித்துவிடுவது போலவும் சிலர் வந்து விட, நானும், சபாபதியும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நிறுத்தி விடுவோமா? என யோசிக்கும்முன், மேடையின் கீழிருந்து '' ஹலோ, ஹலோ.. மைக் டெஸ்டிங். இது நீல வானம் மெல்லிசைக் குழுவின் கான அலைகள் காற்றோடு வரும் நேரம். இதோ டிரம்ஸ் ராஜேஷ்.'' என்ற அறிவிப்புடன் அதிர்ந்தது மேடை.

தடதடவென்ற டிரம்ஸின் இடியோசையில், மெல்லிய கோடாய் வழியும் என் நாதம் ஓடி ஒளிய, இப்போது யாரும் சொல்லாமலேயே நாங்கள் நிறுத்தி விட்டோம்.

'யாரும் ஏன் நிறுத்தினீர்கள்' என்று கேட்கவில்லை ஒரு பாடல் கூட முழுதாய் வாசிக்காமல் மேடையில் இருந்து இறங்கி விட்டோம்.

அதற்குள் கிடார், டிரம்ஸ் எல்லாம் அதிர, பெயரே தெரியாத பல வாத்தியங்கள்,வயர்களுடன் தொங்க, வித்தியாசமான உடைகளுடன் ஒரு கூட்டம் கச்சேரியை ஆரம்பித்திருந்தது. எப்போது இதெல்லாம் வந்தது என்பதே தெரியாமல், நாங்கள்தான் ஓரம் கட்டப்பட்டிருந்தோம். வந்த உடனேயே 'ஒரு

காப்பியாவது சாப்பிடலாம்ண்ணே' என்று சொன்ன,
சபாபதியின் பேச்சைக் கேட்டிருக்கலாம்.
'யாருமே சாப்பிட வாங்க' என்று கூப்பிடாமல் ,

'அப்படியாவது சாப்பிடணுமா?' என்ற விரக்தியும் ஒரு பாடல் கூட முழுதாக வாசிக்காத ஆதங்கமும் சேர்ந்து கொண்டது. தளர்ந்த நடையுடன், தவிலின் பாரம் தாங்காதவன் போல், தலை குனிந்து சபாபதி நடக்க நான் கம்பீரமாய் இருக்க முயன்றபடி அவனைத் தொடர்ந்து வெளியே நடந்த போதும் மனதில், எப்போதோ கேட்ட அப்பாவின் வார்த்தைகள் ஒலித்தது.

''எங்க காலம் போல இல்ல கணேசா. இதை மட்டும் நம்பிட்டு இருக்காதே. கலைஞனுக்கு மரியாதை கொடுத்ததெல்லாம் எங்களோட போச்சு. வேற ஏதாவது வேலைக்குப் படிடா ... அப்பா தன் கடைசிக் காலத்தில் சொன்னதைக் கேட்டிருக்கலாமோ?''

எப்போதும்போல் இப்போதும் அதையே நினைத்தேன்.

ஊரில் அத்தனை பேரும் அப்படியே அப்பாவின் வாரிசு என்று தூக்கி வைத்துக் கொண்டாடியதும், நாதஸ்வரத்தில் மெடல்கள் தொங்க, வாசிக்க ஆரம்பித்ததும், கச்சேரி, விழா, கல்யாணம் என்று எல்லா நாள்களும், இசையால் நிரம்பி வழிந்ததும், காலம், தன் ஒரு விரல் சொடுக்கில் மாற்றி விட்டு, ரொம்ப நாளாயிற்று. மாற்றங்கள் வரும்போது ,ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று எளிதாய்ச் சொல்ல முடியாதபடி எங்களுக்கு மன வலியைத் தந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக, இதை மட்டுமே நம்பியுள்ள சபா போன்றோருக்கு.!

''லைட் மியூசிக் வைக்கட்டும், ஸ்ட் ராங்க் மியூசிக் வைக்கட்டும். முன்னாலேயே நம்மகிட்டே கொஞ்ச நேரம் நீங்க வாசிங்க.. , அதுக்கப்புறம் நாங்க வேற கச்சேரி வைச்சிருக்கோம்னு சொன்னா, நாம நிறுத்திருப்போம். பாதிப் பாட்டுல மென்னியைப் பிடிச்சுத் திருகினாப்பில நிறுத்திருக்க வேண்டாம்... சாப்பிடுங்கன்னு ஒருத்தன் கூட சொல்லலையே. அவங்க பணமும்,பகட்டும்.... பண்பு வேணும்ண்ணே மனுசனுக்கு.... கையை நீட்டி காசு முன்னாடியே வாங்கிட்டோங்கறதுக்காக உசிரக் கொடுத்து வாசிக்கற ஒரு கலைஞனை இப்படியா அவமானப் படுத்தறதும் அந்தக் காசை வேண்டாம்னு தூக்கி எறியவோ, எனக்கு மரியாதை இல்லாத இடத்தில வாசிக்க மாட்டேன்னு முகத்துக்கு நேரா சொல்லவோ நம்மால முடியலங்கறதை நினைச்சாத்தாண்ணே எனக்கு ஆத்திரமா வருது.''

சபாபதியின் புலம்பல் நியாயம் என்றே பட்டது எனக்கும்.

அடுத்த வாரம் கோயிலில் வாசிப்பு இல்லை. ஏதாவது முகூர்த்தம் வருகிறதா என்று காலண்டரைப் பார்த்துக் கொண்டிருந்தபோது சபா வந்தான்.
''சரசுவுக்கு உடனே ஸ்கேன் பார்க்கணும். இப்போதைக்கு மருந்து தந்துருக்காரு.. ஸ்கேன் பார்த்துட்டு சரியான மருந்து தர முடியுங்கறாரு...சும்மா தகவல்தான் அண்ணே.. நீங்க அலட்டிக்காதீங்க ..ஏதாவது வழி பிறக்கும்'' என்று சொல்லி, சபா போய் விட்டான்.
''யாரிடம் கேட்பது ?'' என்று ஃபோனை எடுக்கையில் அது மங்கள இசை இசைத்தது. நான்
பேசுவதற்குள்!
'' கணேசா, நான் கோயில்ல இருந்து சேகர் பேசறேன். இன்னும் ரெண்டு நாள்ல இருக்க முகூர்த்தம்பா.. பெரிய இடம் அந்த நாதஸ்வரக்காரருக்கு திடீர்னு உடம்பு முடியாமப் போச்சு. . நான் சொல்ற அட்ரஸ்ல உடனே போய்ப் பாரு. எல்லாம் அங்கே பேசிக்கோ..''
சேகர் சொன்ன இடத்தில் நான் உடனே போய்ப் பேசியதும், கையோடு அவர்கள் தந்த இருபதாயிரத்தை நம்ப முடியாமல் திரும்பத் திரும்ப எண்ணியதும், சபாவிடம் அப்படியே நீட்ட அவன் திகைத்து, ''அண்ணே, நிஜமாண்ணே இது?'' என்று கண்ணீர் விட்டதும், ஏதோ கனவோ என்ற சந்தேகத்துக்கு இடமில்லாமல்இதோ இப்போது மண்டபத்தில் இருக்கிறோம். எதுவும் பேச விடாமல், அவர்கள் தந்த தொகை வாயை அடைத்து விட்டது.
வாசிப்பதற்கு மேடை ஏறும் போது விரித்திருந்த ரத்தினக் கம்பளத்தைப் பார்த்ததும், மனதில் ஒரு நடுக்கம். சிறிது நேரம் வாசிக்கச் சொன்னார்கள். கூட்டமும் இருந்தது. கொஞ்ச நேரம் வாசித்த பின், மாப்பிள்ளை அழைப்புக்காக, பக்கத்திலிருந்த கோயிலுக்கு வந்தோம்.
மெதுவாக நடந்தால் ஒரு பதினைந்து நிமிடநடைதான் என என் மனம் கணக்கிட்டது கோவில் வாசலில் கம்பீரமான இரண்டு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டி.
வெல்வெட்டாலும், பட்டுத் துணியாலும், பூக்களாலும் அலங்காரம் செய்திருந்தார்கள்.
மின்னிய சரிகைத் தலைப்பாகை, பளபளத்த கோட், சூட்டுடன் மாப்பிள்ளை கோயிலில் காத்திருக்க,, முன்னாலும், பின்னாலும் மின்னிய விளக்குகளின் ஒளியில், கோயிலும், அந்த இடமே வெள்ளியில் தோய்த்து எடுத்தாற்போல ஜொலித்துக் கொண்டிருந்தது. கோயிலிலேயே ஒரு ஓரமாய் நின்று நாங்கள் வாசிக்க ஆரம்பித்தோம்.
பூஜை முடிந்ததும், மாப்பிள்ளை, சாரட் வண்டியில் ஏற, பட்டுப் புடவை, வைர நகை மின்ன, சீர்த்தட்டுகளுடன் வண்டியின் முன்னாலும், பின்னாலும் பெண்கள், குழந்தைகள் கூட்டம்.
இதுவரை இது போல ஒரு கல்யாணத்தில் வாசித்திராததால், நானும், சபாவும் கொஞ்சம் தடுமாறினோம்.
''வண்டிக்கு முன்னால் போய் வாசிங்க !'' என்று யாரோ சொல்ல, சரிகை அங்கவஸ்திரம் தோளில் புரள, எப்போதையும் விடப் பிரகாசமாய் ஒளியில் குளித்து மின்னிய மெடல்களுடன் என் வாத்தியத்தைப் பெருமையுடன் வாசிக்க ஆரம்பித்தேன்.
பட்டுச் சட்டையில் ரொம்ப நாளைக்குப் பின்னர் முகம் முழுக்கப் புன்னகையுடன் சபாவும் . கலக்கினான். சபாவின் தவில் கூட இன்று பளபளப்பாய் இருந்தது.
ஊர்வலம் மெல்ல நகர்ந்தது. ஒரு ஐந்து நிமிடம் ஆகியிருக்கும்.
''கொஞ்சம் நில்லுங்க'' என்று யாரோ சொன்னதும், ஊர்வலம் அப்படியே நின்றுவிட, நாங்களும் நிறுத்தினோம்.
தெருவையே அடைத்துக் கொண்டு நீ...........ளமா.......ய் ... சரவெடிப் பந்து ஒன்றை, ஒருவன் விரித்துப், பற்ற வைத்த அடுத்த நொடியிலிருந்து தொடர்ந்து ஐந்து நிமிடம் ஒளிச் சிதறல்களுடன் படீர் படீர் என்று நிலம் அதிர வெடித்தது. வெடிச் சத்தத்தில் மிரண்ட குதிரைகள் எங்கள் மேல் பாயாமல் இருக்க வேண்டுமே என்ற பயத்துடன், வண்டியின் அருகேயியிருந்த நானும் சபாவும் நகர்ந்து நின்றோம். வெடிச் சத்தம் நின்றதைத் தொடர்ந்து, ஊர்வலம் நகர ஆரம்பித்தது.
''நாதஸ்வரம்... நாதஸ்வரம்..'' என்ற கூச்சலுக்குப் பின்னர் வாசிக்கத் தொடங்கினோம். முதலில் இருந்த உற்சாகம் இல்லை. இப்போது எங்கள் இருவருக்குமே ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் வாசித்தபடி, ஒரு பத்தடி கூட நடக்கவில்லை.
திடீரென எங்கள் முன் வந்தது, ஒரே மாதிரி சீருடையில் பேண்ட் வாத்தியக் குழு.
தங்களுக்குள் அவர்கள் வரிசை அமைத்துக் கொண்டு இசைக்க ஆரம்பிக்க, நானும் சபாவும் இயல்பாகப் பின்னுக்குப் போய் விட்டோம். நகர்ந்த கூட்டத்துடன் மெளனமாக நடந்தோம். ஏதோ பிரபலமான சினிமாப் பாட்டு வாசித்தார்கள் போல! இப்போது ஒரே உற்சாகக் கூச்சலும், சிரிப்புமாய்க் கூட்டம் வேகமாய் நகர, கோயிலில் இனிமையாய் ஆரம்பித்த எங்கள் இசை அமைதியாகி விட்டது.
ஊர்வலத்தில், சீர்த்தட்டுகளுடன் சளசளவெனப் பேசிக் கொண்டு சென்ற பெண்களுடன், ஊமையாகி விட்ட எங்கள் வாத்தியங்களுடன் நாங்கள் உணர்வில்லாமல் நடந்து கொண்டிருந்தோம். மண்டபம் வந்து விட்டது.
அதுவரை அலறிக் கொண்டிருந்த பேண்ட் வாத்தியக் குழுவும் ஒரு ஓரமாய் நின்று விட, மண்டபத்தில் நுழையும்போது வாசிக்கச் சொல்வார்கள் என நாங்கள் காத்திருக்க, ,வானத்திலிருந்து அப்போதுதான் இறங்கியது போல் ஒரே மாதிரி உடையில் அந்தப் பெண்கள் மண்டப வாசலுக்கு வந்தார்கள். அவர்கள் .கைகளிலிருந்த செண்டை மேளம்! அதிரடியாய் ஆரம்பித்ததில், அந்த லயம் தாளம் இவற்றுக்குஅத்தனை பேரும் அடிமையாகி விட்டதுபோல் இருந்தது. அந்தப் பெண்கள் இசைப்பதை 'வேடிக்கை பார்க்க முண்டியத்துக் கொண்டு முன்னால் ஓடிவிட, நானும் சபாவும் இருளில் தள்ளப்பட்டோம். ஜொலித்துக் கொண்டிருந்த விளக்குகளின் ஒளி வெள்ளம் அவர்கள் மேல் பாய, நானும் சபாவும் மட்டும் மண்டபத்தின் வாசலில், இருண்ட பகுதியில் நின்றது தாங்க முடியாததாய் இருந்தது. வாசிக்காமல், நாதஸ்வரத்தை வெறுமனே தூக்கிக் கொண்டு நடப்பது, என் இசைக்குச் செய்யும் அவமரியாதையாய் உறுத்த, நாதஸ்வரத்தை என் தோளிலிருந்த சால்வையால் போர்த்தி, நிமிர்த்தி வைத்துக் கொண்டேன். என் நாதஸ்வரம் எப்பவும், தரை பார்க்காது. இனியும் அப்படித்தான்.

இந்த விழாவில் மறுபடி இதற்கு வேலை வருமா? தெரியவில்லை.

''இப்போல்லாம், எல்லாக் கல்யாணத்திலயும் செண்டமேளம்தாண்டா. என்னா அருமையா இருக்குல்ல. சத்தம்.... கேட்கவே மனசுக்குள்ளே ஒரு குதி வருதுல்ல! கல்யாணம்னா இப்படித்தாண்டா இருக்கணும்.' தெருவில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த யாரோ இருவர் பேசியது காதில் விழுந்து , எரிகிற தீயில் எண்ணெயாயிற்று.

மாற்றங்களை ஏற்றுக் கொள்ளணும் என்கிற மாயப் பூச்சு மறைந்து, மன வலி தரும் இந்த மாற்றம் ஏன் வந்தது? என்ற வேதனையில் முகம் சிணுங்கியது.

உடனே அங்கிருந்து நகர்ந்து விட வேண்டும் என்பதைத் தவிர, வேறு ஏதும் தோன்றவில்லை.

எந்த விளக்கின் சிறு ஒளியும் என் மீது விழாதபடி என்னை மறைத்துக் கொண்டு, முகத்தைத் திருப்பிக் கொண்டபடி நகர்ந்த நான், அவனை சபாவை மறந்து விட்டேன்.

''ஐயோ.... சபா..எங்கே அவன்?'' என்று சட்டெனத் திரும்பி அவனை நான் தேடிய போது, அவன் கண்கள் உயிர் போவது போன்ற வலியில் இருண்டிருக்க, அவன் வேதனையின் நிழல் மெல்ல. மெல்ல என் மீதும் படர்வதை நான் உணரும் வேளையில்... எல்லோரும் மண்டபத்துக்குள் போய் விட்டிருந்தார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com